பிரேம ராகவி
துபாய்
துபாய்
இரவு உணவின் போது பூங்கோதை மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் முகம் அவளின் மன ஓட்டத்தை பிரதிபலிக்காத போதும், பூங்கோதை ஏதோ ஆழ்ந்த யோசனையிலும் வாட்டத்திலும் இருக்கிறாள் என்பதை சீதா புரிந்துக் கொண்டார். எப்பொழுதும் உணவு உண்ணும் நேரத்தில் அவளின் அன்றைய பொழுது நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் பகிரும் பூங்கோதை, இன்று அவளின் செவ்வாயை உணவு உண்ண மட்டும் பயன்படுத்தினாள்.
உணவு முடித்தபின் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த சீதா மற்றும் ரகுராமிடம், "சரிம்மா, நாளை காலை 8:40-க்கு எனக்கு டெல்லிக்கு விமானம். நான் சீக்கிரமா போய் தூங்குனாதான் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க முடியும். இன்னைக்கு கயல் உங்க கூடவே தூங்கட்டும். நான் காலையில் கிளம்பும் போது கயல் முழிச்சான்னா என் கூடவே வரணும்னு அழுவாள். சரியா? குட் நைட் அம்மா, அப்பா" என்று சொல்லி அவர்களின் பதிலுக்கு காத்திராமல் மேலே அவன் அறைக்கு செல்ல படியேறினான் கிஷோர்.
"குட் நைட் அத்தை, மாமா" என்று சொல்லிவிட்டு தன் கணவனை பின்தொடர்ந்தாள் பூங்கோதை.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சீதா, பூங்கோதை செல்ல தயார் ஆனதும் "ஒரு நிமிடம் பூங்கோதை. உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று கூறி தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பௌத்திரி, கயல் விழியின் உறக்கம் கலையாதவாறு தன் கணவன் ரகுராமிடம் கொடுத்தார்.
கிஷோரும், பூங்கோதையும் எதற்கு அழைத்தார் என்று புரியாமல் நின்றனர்.
சீதா அவர்கள் அருகில் வந்து "இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? ஏதோ யோசனையிலேயே இருக்கிறாய்? ஒண்ணுமில்லைன்னு பொய் சொல்லாதே. உன் முகத்தை வச்சே கண்டுபிடிச்சுட்டேன்" என்றார்.
உடனே கிஷோர் "அம்மா, அது ஒண்ணுமில்லை. அவள் அலுவலகத்தில் அவளை ஒரு வருடம் ஆன்சைட்டு-க்கு ஜெர்மனி போறீங்களான்னு கேட்டுருக்காங்க. பூங்கோதைக்கும் அது முடியாதுனு தெரியும். ஆனா எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அங்க போகணும்னு ஆசையாம். அங்க போயிட்டு வந்தா பூங்கோதை எதிர்பார்த்த ஒரு பிரமோஷனும் சுலபமா கிடைச்சிருக்குமாம். அதான் மேடம் இன்னைக்கு கொஞ்சம் வருத்தத்தோடு இருக்காங்க" என்றான்.
"ஆமா அத்தை. நான் பிரமோஷனிற்காக ரொம்ப ஆவலா இருந்தேன். கல்யாணத்திற்கு முன்னாடியே இந்த வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனால் இப்போ கிடைச்சிருக்கு. எதுவும் செய்ய முடியாது. ஒரு நாள் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அப்புறம் சரி ஆகிவிடும் அத்தை" என்றாள் பூங்கோதை சிறு புன்னகையுடன்.
சீதா பூங்கோதையிடம் "ஏன் எதுவும் செய்யமுடியாது பூங்கோதை? அங்க போகணும்னு விருப்பப்பட்டேன்னு சொல்லுற. போயிட்டு வந்தா நீ ஆவலாய் எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கும்னு சொல்லுற. அங்கே போயிட்டு வரவேண்டியது தானே" என்று எதார்த்தமாக கூறினார்.
மூவரும் சீதாவின் கூற்றை நம்பமுடியாமல் பார்த்தனர்.
"அம்மா! என்ன சொல்றீங்க? பூங்கோதை போக வேண்டியது ஜெர்மனிக்கு. அதுவும் ஒரு வருஷம். அவள் எப்படி என்னை விட்டு தனியாக போக முடியும். அதுவும் கயலை யார் பார்த்துப்பா?" என்று கிஷோர் அதிர்ச்சியுடன் வினவினான்.
"தெரியும் டா. இதையே எத்தனை தடவை சொல்லுவ? ஒரு வருஷம் தானே. கயலை பார்த்துக்க நம்ம மூணு பேரு இருக்கோமே. நீ இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆன்சைட்டுக்கு போனபோது கயலை நாங்க மூணு பேரும் பார்த்துக்கலையா? கயலுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். இல்லைன்னு சொல்லல. ஆனால் இந்த வாய்ப்பு போனால் மறுபடியும் வருமான்னு தெரியாது. அதுவும் அவள் ஆசைப்பட்ட இடம், பதவி உயர்வு கிடைக்கலாம்னு வேற சொல்கிறாள். அதான் சொல்லுறேன்" என்றார்.
கிஷோர் தயங்கினான். "அது இல்லம்மா. நானும் அடிக்கடி மீட்டிங், அது, இதுன்னு வெளியூர் போயிடுறேன். அவளும் இல்லாமல் உங்களை யார் பார்த்துப்பா? அதுவும் இல்லாமல் கல்யாணம் ஆன பிறகு இப்படி தனியா ஒரு வருஷம் அவள் வேற நாட்டுக்கு போனா மத்தவங்க என்ன சொல்லுவாங்க?" என்றான்.
"டேய், நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா? எங்களை நாங்க பார்த்துப்போம். நீ உன் வேலை காரணமா வெளியூர் போயிட்டு வர மாதிரி பூங்கோதையும் அவள் வேலை காரணமா போயிட்டு வரட்டுமே. அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் உனக்கு? அவளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யுறா. உன்னை கல்யாணம் பண்ணதாலும், கயல் பிறந்ததாலும் அவள் உழைப்பையும், கனவுகளை தியாகம் செய்யணுமா, என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி இந்த வாய்ப்பு கிடைச்சிருந்தா போயிருப்பாள்தானே. அவள் அப்படி போகலைனாலும் சரி. நம்ம வீட்டு பெண். அவளோட அயராத உழைப்பையும், கனவுகளையும் நமக்காக தியாகம் செய்யுறதை என்னால் ஏத்துக்கமுடியாது. அப்புறம், மத்தவங்களை பத்தி ஏன் கவலைப்படுற? கல்யாணத்துக்கு முன்னாடி போனால், கல்யாணமாகாத பெண் எப்படி தனியா இருக்கலாம்னு பேசுவாங்க. கல்யாணம் ஆன பின்னாடி போனால், அதெப்படி கணவன் இல்லாமல் போகலாம்னு பேசுவாங்க. அதெல்லாம் கண்டுக்காத. சொல்லுறவங்க என்கிட்டதானே சொல்லுவாங்க? பார்த்துக்கறேன். எங்கிட்ட யார் வந்து நாக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்கன்னு பார்ப்போம். பூங்கோதை, நீ எதையும் யோசிக்காம போயிட்டு வா. நாங்க உனக்கு உறுதுணையா இருப்போம். உன் லட்சியங்களை என்றும் மதிப்போம்" என்றார் சீதா.
பூங்கோதை ஆனந்தத்தில் அவள் மாமியாரை ஆரத் தழுவி நன்றி கூறினாள். கிஷோருக்கு அப்பொழுது தான் தன் மனைவி மறைத்து வைத்திருந்த ஆசையும், கனவும் புரிந்தது.
ரகுராம் தன் மனைவியை பெருமையாக பார்த்தார். இதை தான் கூறியிருந்தால் கூட கிஷோரும், பூங்கோதையும் ஏற்றிருப்பார்களா என்று தெரியாது. அத்தை என்ன நினைப்பார் என்று தயங்கியிருப்பாள். ஆனால் சீதாவே கூறியதும் பூங்கோதை மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். சீதாவை போல் அனைவரும் சிந்தித்தால் நிறைய பெண்கள் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் மனதிற்குள் புதைக்க தேவையில்லையே. ஒரு பெண் நினைத்தால் சமுதாயத்தையும், விதியையும் மாற்றமுடியும் என்று எண்ணினார்.