கேலக்ஸி குழுமம் - ஒர் அறிமுகம்.
கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம்:
(Galaxy Art and Literature Club)
அமீரகத்தில் தமிழ்மொழியை நேசிப்பவர்கள் ஒருங்கிணைந்து, கேலக்ஸி பதிப்பகத்தின் ஓர் அங்கமாக 'கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம்' கடந்த இரண்டாண்டுகளாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் வெளிநாடு வாழ் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தமிழை வாசிப்பது என்பது அருகி வருகிறது. பணி மற்றும் வசிக்கும் சூழலில் தமிழில் பேசுவதற்கு கூட சில நேரங்களில் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இத்தகைய சூழலில் நம் தமிழின் சிறப்பையும், அது எத்தனை இனிமையானது என்பதையும் நம் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லி, தமிழை வாசிக்க, பேச வைப்பதே இந்தக் குழுமத்தின் தலையாய நோக்கமாகும். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பதை மன நிறைவுடன், மகிழ்வாக எங்களால் சொல்ல முடியும்.
கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம், அமீரகத்தில் மாதந்தோறும் “கதைப்போமா?” எனும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோர் தாங்கள் வாசித்த, பிறர் வாசிக்க வேண்டிய படைப்புகளைப் பற்றித் தங்களின் பார்வையை பகிர்ந்து கொள்வார்கள். எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகள் நடைபெறும். ஒவ்வொரு கூட்டத்திலும் பத்துப் பேருக்கும் மேல் பேசுவார்கள். நூல் அறிமுகம் மற்றும் விமர்சங்கள் நடைபெறும். அவர்கள் பேசியதை வைத்து சிறு கலந்துரையாடலும் நடப்பதுண்டு.
இந்த நிகழ்வுக்குத் தங்களின் குழந்தைகளையும் அழைத்து வருவதால் பெரியவர்கள் பேசுவதைப் பார்த்த குழந்தைகள் தாங்களும் கதைகள் சொல்கிறோம் எனத் தாமாகவே முன் வந்து ஆரம்பத்தில் ஆங்கிலக் கதைகளில் ஆரம்பித்துச் சில மாதங்களில் அவர்களாகவே தமிழ்க் கதைகளை வாசித்து, அவற்றைப் பெரியவர்கள் முன்னிலையில் எந்தத் தயக்கமும் இன்றி மகிழ்வுடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் நான்கு, ஐந்து வயதுக் குழந்தைகள் எல்லாம் அவர்கள் வயதுக்குத் தகுந்தவாறு மழலை மொழியில் கதை சொல்லும் அழகு ரசிக்க வைக்கிறது என்பதுடன் இந்த மாற்றத்தை எங்களின் கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம் கொண்டு வந்திருக்கிறது என்பது எங்களுக்கு மகிழ்வான விசயம்.
உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரும் விதமாக கேலக்ஸியின் 'கதைப்போமா?' நிகழ்வுகள் அனைத்தும் கேலக்ஸியின் யூட்யூப் சேனல் வழியாகப் பகிரப்படுகிறது. அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'கதைப்போமா?' நிகழ்வின் தொடர்ச்சியாக, கடந்த சில மாதமாக மதுரையிலும் “கதைப்போமா?” இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விண்மீன் இணைய இதழ்:
கேலக்ஸி தனது பயணத்தில் அடுத்த மைல் கல்லாக, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதுதான் 'விண்மீன்' மின்னிதழ். காலாண்டிதழாக தொடங்கப்பட்ட முதல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பும், மாத இதழாக மாற்றுங்களேன் என்ற வாசகர்களின் விண்ணப்பமும் ஒரு சேர, இரண்டாவது இதழிலேயே மாத இதழாக மாற்றம் பெற்றது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறோம். சிறந்த எழுத்தாளர்களின் நேர்காணல், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என கொஞ்சம் வித்தியாசமான பக்கங்களை வாசகர்களுக்கு அளிக்கிறோம். இந்த இதழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலக்கிய உரையாடல்கள்:
கேலக்ஸியின் மற்றொரு முக்கிய அங்கமாக, கேலக்ஸியின் யூட்யூப் சேனல் வழியாக 100 சிறுகதைகள், 100 புத்தகங்கள், 100 கட்டுரைகள் எனத் தொடர்ந்து பகிரப்பட்டது. அதற்கு உலகெங்கிலும் இருந்து பெரும் வரவேற்பு இருந்தது. அதேபோல் உலகெங்கும் வாழும் துறை சார் நிபுணர்கள் மற்றும் சாதனை படைத்த தமிழர்களோடு நேரலை உரையாடல்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். மேலும், இலக்கியம் சார்ந்த 'கதை பேசலாம் வாங்க' என்ற தொடர் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேலக்ஸி பதிப்பகம் – ஓர் அறிமுகம்:
2022-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி திரு. பாலாஜி பாஸ்கரன் அவர்களால் தொடங்கப்பட்ட கேலக்ஸி பதிப்பகம் மற்றும் விற்பனையகம் மதுரை மேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. கேலக்ஸியின் நிறுவுநர் திரு. பாலாஜி பாஸ்கரன் அவர்கள் துபாயில் பணியாற்றி வருவதால் புத்தகம் பதிப்பித்தல் பணிகள் தமிழகத்தில் நடந்தாலும் பெரும்பாலான புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் துபையில் நடத்தப்படுகின்றன. பதிப்பகத்தின் துவக்க நிகழ்வு துபையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் இன்று வரை பதிப்பகம் தனது பாதையில் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
கேலக்ஸி தனது புத்தக வெளியீட்டுப் பணியை, இலங்கையின் மிகப் பிரபலமான எழுத்தாளரும், அரசு விருதுகள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்டவருமான திருமிகு ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் 'மைவண்ணன் இராம காவியம்' என்ற நூல் வழி தொடங்கியது. இந்த மூன்றாண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டிருக்கிறது கேலக்ஸி பதிப்பகம். அதே நேரத்தில் இணையவழி விற்பனையின் மூலம் உலகெங்கிலும் இருக்கும் தமிழ் வாசகர்களுக்கு புத்தகங்கள் விற்பனை செய்வதில், அவர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களை அனுப்பவதிலும் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது.
தமிழின் சிறப்பை உலகளவில் பரப்பும் நோக்கில் மகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் ஔவையார் அவர்களின் ஆத்திசூடி ஆகிய புத்தகங்களை அரபு மொழியில் மொழியாக்கம் செய்திருக்கும் கேலக்ஸி பதிப்பகம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்களைத் தமிழிலும், தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கும் பணியையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
கேலக்ஸி அனைத்து புதிய எழுத்தாளர்களின் புத்தகம் கொண்டு வர வேண்டு என்ற கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கடந்த முன்றாண்டுகளாக பதினைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்ட தமிழ்ப் பதிப்பகம் கேலக்ஸி என்ற பெருமையையும் தன் வசமாக்கியிருக்கிறது.
கேலக்ஸியின் நோக்கம்:
தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த முயற்சியில் புதிய எழுத்தாளர்கள், புத்தகங்கள், மொழியாக்கங்கள், வெளியீடுகள், இணைய இதழ், நேரலை உரையாடல்கள், அமீரக வாழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பித்தல், சிறுவர் இலக்கியம் என தனது தமிழ் இலக்கியப் பங்களிப்பை சீரிய நோக்கோடு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம்.
மிக்க நன்றி.
தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த முயற்சியில் புதிய எழுத்தாளர்கள், புத்தகங்கள், மொழியாக்கங்கள், வெளியீடுகள், இணைய இதழ், நேரலை உரையாடல்கள், அமீரக வாழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பித்தல், சிறுவர் இலக்கியம் என தனது தமிழ் இலக்கியப் பங்களிப்பை சீரிய நோக்கோடு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம்.