உமா ஸ்வாமிநாதன்
பெங்களூரு
பெங்களூரு
வீட்டின் வாசலில் நின்று யாரோ 'அம்மா' என்று குரல் கேட்டது. வந்தவன் வாசலில் போட்டிருந்த கோலம் மிதி படாமல் ஓரமாக நின்று குரல் கொடுத்தான்.
தெருவில் கோவில் உற்சவம் அமர்க்களம். வீதிகளில் கடைகளும் கூட்டமும் இருந்தது. கோவிலில் சீதா கல்யாணம் உற்சவம். எல்லார் வீட்டிலும் பெரிய பெரிய கோலமிட்டு செம்மண் இட்டிருந்தனர்.
குரல் கேட்டு வெளியே வந்தாள் தேவகி, "என்னப்பா? என்ன வேணும்?" என்றாள்.
"உங்க வீட்ல கல்யாணம்ன்னு சொன்னாங்க. அதான் ஏதாவது வேலை இருக்கா கேக்க வந்தேன்"
தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை. பிள்ளைக்கு கல்யாணம் ஆகல என்கிற வருத்தத்தோடு இருப்பவள், வீட்டு வாசலில் ஒருவன் வந்து இப்படி சொன்னதும் ஏதோ அசிரிரி மாதிரி இருந்தது. அவனிடம் பதில் சொல்லி அனுப்பிய தேவதி நினைவுகளில் மூழ்கினாள்.
தேவகியின் திருமணமாகி வந்த வீடு வாசல் திண்ணையோடு இரண்டு கிரௌண்ட்க்கு காலி இடம் கிணறு மரங்கள் செடிகளுடன் இருந்தது.
வீட்டுக்காரர் வாசுவுக்கு கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல வேலை, ஆனால் வருமானம் போதாது.ஒருவர் சம்பளத்தில் ஆறு பேர் சாப்பிடணும். தியாகு பெரிய பிள்ளை அவனுக்குப் பின் இரண்டு தங்கை, ஒரு தம்பி. குழந்தைகள் எல்லாருமே நன்றாக படிப்பார்கள்.
தியாகு அந்த வருஷம் பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தான். எல்லார்க்கும் ரொம்ப பெருமை. தியாகுவை நிறையக் கல்லூரிகளில் சேர்த்து கொள்வதாய் சொன்னார்கள். அவனோ குடும்பச் சூழலால் அப்பாவுக்கு உதவியாய் வேலைக்கு போக முடிவு எடுத்தான். பிரைவேட் கம்பெனியில் வேலை கிடைத்தது.தியாகு உழைக்க ஆரம்பித்தான்.
தங்கைகளை டீச்சர் ட்ரைனிங் படிக்க வைத்து வேலை கிடைத்ததும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிக்கு பொண்ணு கேட்டு வந்தனர். கொஞ்சம் கடன் வாங்கி இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிந்து, பிறகு ஒரு வருடம் பூரா பண்டிகை சீர் செய்யவும் பிரசவ செலவு என்று கடன் ஏறி கொண்டே போனது.
கொஞ்ச நாளில் தியாகு அப்பா மாரடைப்பால் தவறிவிட்டார். ஆபீஸ்லிருந்து வந்த பணம் கல்யாண கடனுக்கு கூட போதவில்லை. இதற்கு நடுவில் தியாகுவின் தம்பி கூடப் படித்த பெண்ணை காதலித்து கல்யாணமும் பண்ணி வீட்டை விட்டு தனியாக போய்விட்டான்.
தியாகுவுக்கும் வயது ஏறிக்கொண்டே போனது. தேவகிக்கும் உடல்நலம் குறைந்தது. சீமந்த புத்திரன் இவன் வாழ்க்கை குடும்பத்துக்காக உழைத்து வீணாகிறதே என அவளின் மனம் வேதனையில் உருகியது.
அன்று கோவிலுக்கு போனவள் கோமதி மாமியை பார்த்தாள். அவளும் இதே தெருவில் இருந்தவள், இருப்பவள்தான். அவளோட பசங்களும் தேவகி பசங்களும் ஒண்ணா படிச்சவங்க. பசங்கலாம் கல்யாணமாகி பட்டணத்துல இருக்கறதால கோமதியும் அடிக்கடி அங்கே போய்டுவா.
"பெரிய பொண்ணு ராதா கல்யாணம் சொல்லவே இல்லை நீ. ரொம்ப தங்கமான பொண்ணு என்றாள் தேவகி.
"அவ தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அவ தங்கை தம்பிக்கு லாம் கல்யாண ஏற்பாடு பண்ணா. டீச்சர் வேலைக்கு போயிண்டுருக்கா. பெண்கள் படிக்கணும் ஆசிரியர் தொழில் உன்னதமானது. ஆசிரியர் வேலைக்கு போகணும். சமையல் ரூமிலேயே அடைபடக்கூடாதுனு தியாகுதான் அடிக்கடி சொல்வானாம்."
உடனே ஆச்சர்யமாய் "அப்போ ராதாவுக்கு கல்யாணம் பண்ணலியா?" என்று கேட்டாள்.
"அது ஒன்று தான் ரொம்ப கவலையா இருக்கு தேவகி" என்றாள் கோமதி.
"கோமதி... நான் ஒண்ணு சொல்லட்டா ராதாவுக்கும் தியாகுவுக்கும் கல்யாணம் பண்ணலாம். நமக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். முப்பத்தியெட்டு வயசாறது ரெண்டு பேரும் ஒரே வயது. என்ன சொல்ற?"
"ஆஹா தியாகுவ எப்படி மறந்தேன் இருவரும் சின்ன வயசுலேருந்து ஒண்ணா பழகினவா. நன்றாக புரிந்து கொள்ள முடியும்."
"ராதாவுக்கு நம்ம ஊர் ஸ்கூல்க்கு தான் மாத்திருக்காங்க அவள் அடுத்த வாரம் வாறா. அதான் நாங்க முன்னாடி வந்தோம்"
"கோமதி நாம உடனே ஜாதகப் பொருத்தம் பார்ப்போம். அதுக்கப்பறம் முடிவு பண்ணுவோம்" என்ற தேவகி, உடனே அதற்கும் ஏற்பாடு செய்தாள்.
இரண்டு ஜாதகமும் அமோக பொருத்தம் இவர்களுக்கு பதினைந்து வருடம் முன்பே கல்யாணம் ஆகிருக்கணும். இவர்கள் தான் வேண்டாம் னு தள்ளி போட்டுருக்காங்க . வர வெள்ளி கிழமை நல்ல நாள் அன்றே கல்யாணத்த முடியுங்கோ நன்னா இருப்பா இரண்டு பேரும் என்றார் சோதிடர்.
இருவருமே உடம்பில் புது உற்சாகத்தோடு, சில முடிவெடுத்து வீட்டுக்கு வந்தனர்.
தேவகி தனது பிள்ளைகளுக்குப் போன் பண்ணி அண்ணா கல்யாணம் நீங்கள்லாம் வந்து நடத்தி வைக்கணும். அவனுக்கு இன்னும் தெரியாது னு சொல்லி விவரம் எல்லாம் சொல்ல, எல்லாருமே ஒருவாரம் லீவு போட்டு குடும்பத்தோடு மாமியார் மாமனாருடன் வந்தார்கள்.
தியாகுவிடமோ 'குல தெய்வம் கோவிலுக்கு போகணும் எல்லாரையும் வரசொல்லிருக்கேன்' என்று சொல்லி வைத்திருந்தாள் தேவகி.
தியாகுவும் 'அப்போ நானும் ஒரு வாரம் லீவு கேக்கறேன் எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்' என்றான்.
தேவகியோ 'இப்போ வேண்டாண்டா லீவு இருக்கட்டும் நான் சொல்றேன் அப்போ தேவைப்படும்' என்று சொல்லி மறுத்துவிட்டாள்.
கோமதியும் அதேபோல் சொல்லி வரச் சொல்லியிருந்தாள்.
ராதவும் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தாள்.
பள்ளியில் இருந்து வரும் வழியில் தியாகுவைப் பார்த்தாள் அந்த பள்ளிப்பருவம் அவள் அவனிடம் பேசியது எல்லாம் ஞாபகம் வந்தது. அப்படியே தான் இருக்கான் கொஞ்சம் குண்டாயிருக்கான். அதற்குள் தியாகுவே, "என்ன ராதா? எப்போ வந்தே..?" எனக் கேட்டான்.
"இனிமே இப்படி தான் தினம் உன் கண்ணில் படுவேன். உன்னால் தப்பிக்க முடியாது இங்க மாற்றலாகி வந்துருக்கேன். அப்பா அம்மா வும் வந்தாச்சு இனிமே இங்க தான்" என்று குறும்பாக சொன்னாள்.
தியாகுவும் "நீ மாறவே இல்லை ராதா சரி வீட்டுக்கு வா எல்லாரும் வந்திருக்காங்க" என்றான்.
"சாயந்திரம் வரேன்" என்று கிளம்பினாள்.
தியாகுவால் ஆபீசில் வேலை செய்ய முடியல. நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தது.
"தியாகு எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? நீ சரி னு சொன்னா எங்க அப்பாகிட்டே சொல்றேன். உங்க அப்பாவும் எங்க அப்பாவும் நல்ல நண்பர்கள். உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்குமா?" என்று கேட்டாள் ராதா.
"இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கற நிலைமை இல்லை. தங்கைகள் எல்லாம் முடித்து தான் யோசிக்கணும்" என்றான்.
தங்கை கல்யாணம் முடிந்ததும், தியாகு அப்பா தவறிவிட, கல்யாண கடன்கள் இருந்தது. அதோடு தம்பி உதவுவான் என்று நினைத்தால் அவன் காதல் திருமணம் முடிந்து தனியாக போய்விட்டான். எல்லா பொறுப்பு, கடன் எல்லாம் தியாகுவே சமாளிக்க வேண்டிருந்தது.
கொஞ்சம் சுதாரிப்பதற்குள் வயது ஏறியது. இனி கல்யாணம் வேண்டாம் என்றிருக்கும் போது இப்போ ராதாவை பார்த்ததும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது.
மனம் லேசானது உற்சாகமானது.
அன்று மாலை...
"அம்மா... நான் தியாகு வீட்டுக்கு போய்ட்டு வரேன்" என்ற ராதாவிடம், "நாளைக்கு போலாம் இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு குலதெய்வம் கோவிலுக்கு கொண்டு போக வேண்டியதெல்லாம் எடுத்து வை" என்றாள்.
அங்கு கோவிலில் முன்பே சொல்லி வைத்திருந்ததால் ரொம்ப அழகா அலங்காரம் பண்ணி எல்லாரும் காத்திருந்தார்கள். ஊர் மக்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். பொண்ணையும் மாப்பிள்ளையும் வீட்டிலேயே ஓரளவுக்கு அலங்காரம் பண்ணி அழைத்து வந்தார்கள். எல்லாம் கோவிலுக்குதான் என்பதால் சந்தேகம் வரவில்லை.
இவர்கள் நுழைந்ததும் மேள தாளத்துடன் அழைத்து சென்றனர். பூஜை முடிந்ததும் கல்யாணமேடைக்கு இருவரையும் கூட்டிச் சென்று அமர வைக்க, இருவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்க்க.
அதற்குள் ஊர் மக்களில் பெரியவர் ஒருவர், "அதாகபட்டது என்ன வென்றால். நமக்கெல்லாம் குழந்தையிலிருந்து நன்கு தெரிந்த நம்ம ஊர் தியாகுவும், ராதாவும் இது வரை தன் குடும்பத்துக்காக உழைத்து, தங்கள் வாழ்க்கையை மறந்து விட்டதால் ஊர் மக்களும் அவர்களை பெற்றவர்களும் இன்றைய சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் கல்யாணம் பண்ணுவதாக அந்த குலசாமி முன்பு முடிவெடுத்து இன்னும் சிறிது நேரத்தில் மாங்கல்யதாரணம் முடிந்ததும் அனைவரும் தியாகு ராதா தம்பதிகளை மனமார வாழ்த்தி ஆசிர்வதிக்கணும்னு கேட்டுக்கிறேன்" என்றார்.
இருவரையும் யோசிக்க விடாமல் மேடையில் உட்காரவைத்து மாலை போட்டு மந்திரங்கள் சொல்லி மாங்கல்யதாரணமும் ஆனது. அனைவர் முகத்திலும் அத்தனை சந்தோஷம் கோமதியும் தேவகியும் கட்டிக்கொண்டு அழுதனர்.
"தியாகுவை இப்படியே விட்டுட்டு போய்டுவேனோனு பயந்துட்டேன்" என்றாள் தேவகி.
"என்ன தியாகு? நான் கேட்டப்போல்லாம் மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி கட்டாய தாலி கட்டறே . இரு உனக்கு சரியான தண்டனை கொடுக்கணும்"னு சொல்லி ராதா சிரிக்க, "அவ்ளோ தான் நான் நல்லா மாட்டிகிட்டேன்" என்றவன், "எனக்கு எதுவுமே தெரியாது கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. இங்க என்னடான்னா..." என இழுத்தான்.
ராதாவும், "நான் நேத்தி உங்க வீட்டுக்கு கிளம்பினப்போ எங்கம்மா நாளைக்கு போலாம்னா அப்போ கூட எனக்கு எந்த சந்தேகமும் வரல" என்றாள்.
இருவருக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இதென்ன அதிசயம்?
"வேணும் வேணும்னு கேட்டப்போல்லாம் கிடைக்கல இனிமே இல்லைனு முடிவு பண்ணினதுக்கப்பறம் இப்படி" என்று ராதா கூற, தியாகுவும் "அப்போ என்னால் முடிவு எடுக்க முடியல" என்றான்.
இவர்கள் பேசியது எல்லாம் கேட்டு "அண்ணா எங்களுக்காக இப்படி பண்ணுவியா? ராதாவை கல்யாணம் பண்ணிண்டு ரெண்டு பேரும் சேர்ந்து எங்களுக்கு செய்திருக்கலாமே" என்றார்கள் தியாகிவின் உடன்பிறப்புகள்.
"இல்லம்மா அப்போ எனக்கு ஒரு பயம் இருந்தது என்னோட வாழ்க்கையில் உங்களை கவனிக்காம விட்டுடுவேனோன்னு" என்றான்.
"இது பிரமன் போட்ட முடிச்சி அண்ணா. எங்களுக்கு மனசு நிறைஞ்ச சந்தோசம்ண்ணே"
"திரும்ப இதே மாதிரி சந்தோஷமான விஷயத்துக்கு எல்லாரும் வருவோம். நாங்க வருவதற்கு நீ தான் சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரணும்" எனச் சொல்லி எல்லாரும் சிரித்தார்கள்.
ராதா ரொம்ப தீவிரமா விரல் விட்டு எண்ணிக்கொண்டிருந்தாள்.
ராதாவின் தம்பியும் தங்கையும் " நீ என்னக்கா இப்போ போய் ஸ்கூல் கணக்கு போடற?" எனக் கேட்க, "இல்லடா இது ஜனவரி மாதம் ... ஜூன், ஜூலைல உங்களலாம் வர வழைக்கலாமான்னு யோசித்தேன்" என்று சொல்லவும் தியாகு புரியாமல் முழித்தான்.
எல்லாரும் சேர்ந்து ஓ என்று கத்த.... ராதா வெட்கத்தில் தியாகுவின் தோள் சாய, அவனும் விசயம் புரிந்து வெட்கச் சிரிப்பை வெளிப்படுத்தினான்.