சுதா கணபதி
தமிழ்நாடு
தமிழ்நாடு
யூனிவெர்சிட்டி தேர்வுகள் முடிந்து காலேஜ் லீவு. யூடியூபில் சுவாரஸ்யமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தா சுஜாதா, சிணுங்கிய செல்போனைச் சலிப்போடு எடுத்தாள்.
“ஹாய் வாணி “
“சுஜி அரை மணியா உன்னோட நம்பர் ட்ரை பண்ணறேன் . நாளைக்கு யூ.ஜி ரிசல்ட்ன்னு காலேஜ் க்ரூப்பில் மெசேஜ் வந்திருக்கு .”
“மை காட்… அடுத்த வாரம் தான் ரிசல்ட்டுன்னு ஹெச்.ஓ.டி மேடம் சொன்னாங்களே. திடீர்னு இப்படி குண்டைப் போடறையே… தகவலுக்கு தாங்க் யூ“.
“ரொம்ப டென்ஷனா இருக்கும்மா. ரிசல்ட் நல்ல படியா வரணுமே“ நகத்தைக் கடித்தபடி அம்மாவிடம் புலம்பினாள்.
“சுஜா நீ எப்பவுமே நல்ல மார்க்குதான் வாங்குவே . இப்படிதான் பயந்து பயந்து ஸ்கூல் டாப்பரா வந்தே. ரிலாக்ஸா இரு“
“கிளம்புமா , ஹயக்ரீவர் கோவிலுக்குப் போலாம். மனசுக்குத் தெம்பா இருக்கும்“
“எனக்கு வேலை இருக்கு… அப்பாவிற்கு டிபன் பண்ணனும். நீ போயிட்டு வந்துடு”
“நீ வந்தாதான் எனக்கு ராசி. கேட்டரிங் மாமிக்கிட்ட டிபனுக்கு சொல்லிடறேன் . கிளம்பு“
மகளின் பிடிவாதம் தெரிந்த விமலா புறப்பட்டாள் “டூவீலர் ஓட்ட முடியாது. ஒரே படபடப்பா இருக்கு ஆட்டோல போலாம்மா”என்றபடி ஆட்டோவுக்குப் போன் செய்தாள்.
அர்ச்சனை முடிந்து வீட்டுக்கு வந்தும் ரிசல்ட் பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள். நடுவே சிநேகிதிகளோடு மொபைல் போனில் விசாரிப்புகள் வேறு. இரவெல்லாம் அப்பப்போ வாட்ஸ்அப், ஈமெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தாள்.
காலையில் “காலேஜுக்கு போயே ரிசல்டைப் பாத்துக்கறேன். இங்க இன்டர்நெட் கனெக்சன் மோசமா இருக்கு. தவிர பிரெண்ட்ஸ் கூட இருந்தா கவலை கொஞ்சம் குறையும்“ என அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ஒரு மணி நேரம் கழித்து சுஜாவிடமிருந்து போன் “அம்மா குட் நியூஸ் ஸ்வீட் ரெடி பண்ணு நான் கிளாஸ் எடுத்த மூணு சப்ஜெக்டிலும் எல்லாரும் பாஸாயிட்டாங்க. நூறு சதவிகித தேர்ச்சிக்கான விருது இந்த வருஷமும் எனக்கு நிச்சயம்“ என்றாள் தனியார் மகளிர் கல்லூரி ஆசிரியை சுஜாதா.