மாலா மாதவன்
சென்னை
சென்னை
“மடந்தை பொன் - திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவோ?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!'
மணிகண்டன் வாய் வில்லி பாரதப் பாடலை முணுமுணுத்தது.
திருவில்லிக்கேணியின் ஒண்டுக் குடித்தன மொட்டை மாடியில் பாய் போட்டு மல்லாக்க படுத்துக் கொண்டு வானம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
வைகாசி பௌர்ணமி வானில் மின்ன அதன் ஒளியில் அதன் அருகில் படர்ந்திருக்கும் சேடிப் பெண்களான நட்சத்திரங்களின் மினுக்கொளி சற்று குறைந்து தான் இருந்தது.
‘என் வானில் பௌர்ணமியானவள் தான் அவள். எத்தனை பெண்கள் நின்றாலும் அவள் முன் ஒளி குறைந்து தான் தெரிவர். ஆனாலும் அவளை என் மனைவியாக்க மனதுக்குத் தோன்ற வில்லை. சினேகிதியாய், சினேகிதிக்கும் மேலே நல்ல தோழமையாய்த் தான் அவளைப் பார்த்தேன்.’
மணிகண்டன் வான் நிலாவைப் பார்த்துக் கொண்டே தன் சிந்தனையைப் படர விட்டுக் கொண்டிருந்தான்.
“வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா”
“என்னடா மணிகண்டா.. இப்ப தான் வில்லிபாரதம் பாடின! அது மனசுல போய் உட்காரதுக்குள்ள பட்டினப் பிரவேசம் ஆகிட்டியேடா. புரியலயா? இந்த வான் நிலா வந்த சினிமா பேரு சொன்னேன். என்ன ஒரே கச்சேரியா இருக்கு. மொட்டை மாடிக் கச்சேரி கூட சமீபத்துல ரொம்ப பிரபலமாச்சு தெரியுமோ?”
சக குடித்தனக்காரன் ரகுபதி வாயைப் பிடுங்கினான்.
“ம்ச்ச்!” என்றான் மணிகண்டன்.
“ஒரு நிலையான வேலை கிடைக்கற வரை இப்படி அலுப்பும் சலிப்புமாத் தான் இருக்கும் வாழ்க்கை. திடீர்னு காவியமாத் தோணும். திடீர்னு கவிபாடத் தோணும். நிலாவைப் பார்த்தா கவிதை கொட்டுமே. எல்லாம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் வெளிப்பாடுடா மணிகண்டா. போர்வையை இழுத்துப் போர்த்திட்டு தூங்கு.” தொணதொணத்தான் ரகுபதி.
படக்கென்று போர்வையை இழுத்ததில் போர்வையின் பொத்தல்களே ஆயிரம் நட்சத்திரங்களாய் வறுமையின் கதை பேசியது.
இந்த பொத்தல்களை அடைக்கத் தான் எப்படியாவது ஒரு வேலைக்குப் போகணும். கண்களை மூடிக் கொண்டான்.
“மணிகண்டா! உனக்கு வேணா நான் சினேகிதியா இருக்கலாம். ஆனா எனக்கு உன்னை விட்டுப் போகவே தோணலடா. அதுக்குன்னு உன்னைக் கணவனாவும் நினைக்கத் தோணல.லைஃப் லாங் உன் ப்ரெண்ட்ஷிப் வேணும்ன்னு தான் தோணுது. அத்தனை நல்லவன் நீ!” பானுமதி அன்று சொன்ன வார்த்தை அவனுள் ஒலித்தது.
“பானு! நீ பெண்ணாப் போயிட்ட. ஆணுக்கும் ஆணுக்குமான நட்பே காலச் சூழலில் காணாமல் போகுது. ஆண் , பெண் நட்பு எப்படி நிக்கும். அதுவும் காலத்துக்கும். சான்ஸே இல்ல!”
“இல்லடா மணிகண்டா. உனக்கொரு நல்ல மனைவியும் எனக்கொரு நல்ல கணவனும் கிடைத்தால் நம் நட்பும் இப்படியே தான் இருக்கும்!”
“புரியாமல் பேசாத பானு. எந்த ஒரு ஆணுக்கும் தன் வாழ்வில் இன்னொரு ஆணை மனைவியின் முக்கியமான நண்பன் எனக் கைகாட்டும் போது சந்தேகம் தான் தோணும்.”
“ஆனா வில்லிபாரதத்துல துரியோதனன் சந்தேகப் படலையாம்டா. துரியோதனன் மனைவிக்கும் என் பெயர் தான். பானுமதி! அவளும் துரியோதனின் நண்பன் கர்ணனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க அங்கு வந்த தன் கணவன் துரியோதனனைப் பார்த்துச் சட்டென்று மரியாதை நிமித்தம் எழுந்த பானுமதியின் இடை மேகலையைப் பிடித்து இழுத்தான் கர்ணன். அவனுக்கென்ன நினைப்பு என்றால் எங்கே பானுமதி ஆட்டத்தை இடையில் கலைக்கிறாளோ என்று அவன் அவளின் இடை மேகலையைக் கலைக்க அதில் இருந்து விழுந்த முத்துக்களைக் குனிந்து எடுத்த துரியோதனன் எடுக்கவோ கோர்க்கவோ என்றானாம். அப்படின்னா.. நீங்க விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுங்க. நான் இந்த மேகலையைக் கோத்துத் தரேன்னு அர்த்தமாம். அத்தனை நம்பிக்கை நம் மீதும் எனக்கு வரப் போற கணவருக்கு இருந்தால்..”
“ஆமா.. பெரிய பானுமதி.. இவ வீட்டுக்காரர் தான் துரியோதனன்! நான் தான் கர்ணன்! போவியா! இல்லாத காட்டுக்கு வழி சொல்லிட்டு வந்தா இருக்கற நட்பும் காணாமப் போயிடும் பானு. இப்ப என்ன.. தெனமும் பார்க்காட்டாலும் பேசாட்டாலும் என்னிக்காவது பார்த்தா பேசாமயா போகப் போறோம்! நல்ல மாப்பிள்ளையா வீட்டில் பார்த்தா தலையை ஆட்டி லைஃப்ல செட்டிலாகப் பாரு.”
மணிகண்டன் அந்தப் பேச்சு அங்கு முடிந்து விட்டதென என்று தான் நினைத்தான்.
இன்று காலை தன்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி ஆர்வி சொல்யூஷன்ஸ் முதலாளி ராஜவேல் அழைக்கும் வரைக்கும்.
“ஆர்.வி. சொல்யூஷன்ஸ்ல இருந்து உனக்குப் போன் வந்துருக்குடா! உன்னை நாளைக்கு காலைல பத்துமணிக்கு அவங்க ஆபீஸுல இருக்கச் சொன்னாங்க.”
அம்மா சொன்ன போது கூட அவன் அலட்சியமாகச் சொன்னான்.
“பாரும்மா! ஐயாவோட மகிமையைப் பாரு! என் திறமையைப் பார்த்து நான் அப்ளை பண்ணாத கம்பெனில இருந்து கூட எனக்கு இண்டர்வியூ கால் வருது.!” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
காலர் தூக்கி விட்ட போது தெரியலையே காணாமல் அடிக்கப் போறான்னு.
மணிகண்டன் துக்கம் தாளாமல் குப்புறப் படுத்துக் கொண்டான்.
“வில்லிபாரதப் பாட்டெல்லாம் நடப்புக்கு உதவாதுடா ரகுபதி!” மனம் தாளாது வார்த்தைகளை உதிர்த்தான்.
உதிர்த்த வார்த்தைகளைக் கோக்கத் தான் ரகுபதி காத்திருந்தானே.
“என்னடா ஆச்சு மணிகண்டா? காலைல இண்டர்வியூ அதுவும் ஆர் வி சொல்யூஷன்க்கு போயிருக்கன்னு உங்க அம்மா சொன்னாங்க. என்னாச்சு ஊத்திக்கிச்சா? அதான் புலம்புறியா?”
“ஊத்திக்கிச்சு.. ஆனா ஊத்திக்கலை!” என்றவாறு திரும்பிப் படுத்தான் மணிகண்டன். இப்போது போர்வை பொத்தல்களும் வானின் நட்சத்திரங்களும் நேருக்கு நேர் கண்சிமிட்டின.
“ஏண்டா?”
“துபாய்ல உள்ள அவங்க கம்பெனிக்கு என்னை அனுப்பறேங்கறாங்க!”
“டேய்.. செம சான்ஸ்டா மணிகண்டா. விடாத. அதுக்கா உம்முன்னு வானத்தப் பார்க்கற?”
“ஆறு வருஷ ஒப்பந்தத்துல போகணுமாம்.”
“என்னது?”
“ஆமா. இங்க எப்படி அம்மாவை விட்டுட்டு போறதுன்னு குழப்பம். அதான்.”
“அதான் நாங்க இருக்கோமே. பார்த்துக்கறோம். நீ நல்ல வேலையை விடாதடா மணிகண்டா. உன் வறுமைக்குத் தேவையான பணத்துக்கு ஒருத்தன் பாதை அமைச்சுக் கொடுக்கும் போது.. இதோ கொஞ்சம் முன்னாடி சொன்னியே வில்லிபாரதம் மாதிரி நடப்பு இல்லன்னு! இருக்குடா! கர்ணனின் ஏழ்மையைப் போக்கின துரியோதனனுக்கு கர்ணன் கடைசிவரை விசுவாசமா இருந்தான். நீயும் உன் வறுமையைப் போக்கச் சந்தர்ப்பம் கொடுக்கற ஆர் வி சொல்யூஷன்ஸ் முதலாளியை உன் துரியோதனனாத் தான் நினைக்கணும்.” ரகுபதி எடுத்துக் கூறினான்.
“ஆமாம்.. உண்மை தான். இவன் நவீன துரியோதனன்! எடுத்து வேறிடத்தில் கோர்க்கிறான்!”
சொன்ன மணிகண்டனின் இடப்பக்கம் கிடந்தது ஆர்.வி. சொல்யூஷன்ஸ் முதலாளி ராஜவேலுடன் தன் தோழி பானுமதிக்கு நடக்கப் போகும் திருமணத்திற்கான பத்திரிக்கை. அது நடப்பதற்கான விலை ஆறு வருஷ ஒப்பந்ததுடனான இவனின் துபாய் பயணம்!