லலிதா சங்கர்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலையிலிருந்து காத்திருந்து, காத்திருந்து ஒருவழியாக மாலைக்குள் பத்திரப்பதிவு முடிந்து வாங்குபவரும் விற்பவரும் ஒருவரையொருவர் கைகுலுக்கி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
ரேவதிக்கு மனதிற்குள் குபீரென ஒரு சந்தோஷம். அப்பாடா! கொஞ்சம் பழைய வீடுதான் ஆனாலும் பெரிய வீடு, கனவு இல்லம், மிகப்பெரிய குடியிருப்பு வளாகம், இனி ஆறுபேரோடு மல்லுக்கட்டிப்போராடும் வாழ்க்கை இல்லை.
அவர்களோட பழைய பத்திரங்களை அவர்களிடம் குடுக்கணுமா?
கேள்வி கேட்பதற்குள் வேண்டாமென்ற தொனியில் அந்தப்பெண்மணி தன்னுடைய பையின் ஜிப்பை இழுத்து மூடினாள்.
"போதும்டா சாமி! இந்த வீட்டை ஒருவழியா வித்து முடிச்சுட்டோம்!" என்ற அவளின் உடலின் மொழி ரேவதிக்கு முதலில் புரியவில்லை. 'பெரிய மாடமாளிகையில் குடியிருக்கும் இவளுக்கு இந்த வீடு ஒரு பொருட்டில்லை போல..! நமக்குத்தான் அதோட அருமை தெரியும்' என்று நினைத்துக்கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் புதுமனை புகுவிழா சிறப்பாக முடிந்தபின் நல்லநாளில் குடிவந்து, அந்தப்பரந்து விரிந்த பால்கனியில் டீயைக்குடித்தபடி அமர்ந்திருந்தபோது அவளுக்குள் அளவில்லா சந்தோஷம். அந்த சந்தோஷம் கொஞ்சநேரம்தான், மேல்வீட்டிலிருந்து பெருங்குரலில் சத்தம்! "ஆமாம்! நான் அப்படித்தான்! இப்போ என்ன பண்ணனுங்கறீங்க? அதெல்லாம் முடியாது..! நான் சம்மதிக்க மாட்டேன்."
அவள் பெருங்குரலில் கத்துவது தினசரி வாடிக்கையானது.
மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகப்புரிய ஆரம்பித்தது.
அன்று வீட்டு வாசலில் குப்பை பையை வைக்க கதவைத் திறந்தால் எதிரில் ஒரு தெருநாய், பக்கத்துக்கு வீட்டு வாசலில் வைத்திருந்த குப்பைக்கவரை தோண்டித்துருவிக்கொண்டிருந்தது. அதற்குத்தேவையான மாமிசத்துண்டை கவ்வியபடி அது ஓடவும், எனக்கு அருகில் இருந்த வீட்டுக்காரி அதை வீடியோ எடுத்து வாட்'சாப் குழுவில் அந்த வீடியோவைப் பகிர குழு பற்றி எரிந்தது.
எங்கள் வீட்டின் மேல் வீட்டில் குடியிருக்கும் அந்தப்பெண்மணியை அனைவரும் வறுத்து எடுக்க ஆரம்பித்தனர்.
இந்தபொம்பளைக்கு வேற வேலையே இல்லை. தெருநாய்க்கு சோறு போடறதுன்னா தெருவுல போட வேண்டியதுதானே! அதைக்கூட்டிட்டு வந்து நம்ப காம்பவுண்டுக்குள்ள விட்டா என்ன ஆறது? ஒரு இங்கிதம் வேணாம்? அன்னிக்கு அப்படித்தான் என்னோட கார் பார்க்கிங்கில் ஒரு நாய் அசிங்கம் பண்ணி வெச்சுருக்கு. இந்தபொம்பளையோட ஒரே ரோதனையாப்போச்சு.
ஆனால் எல்லோரும் குரூப்பில்தான் பொங்குவார்கள் நேரில் அவளிடம் மல்லுக்கட்ட யாருக்கும் தைரியம் இல்லை.
ஆனால் அந்த ஒற்றை மனுஷி அதே குரூப்பில் ஒரு புகைப்படத்தைப்பகிர்ந்தாள். இங்கிதத்தைப்பத்தி பேசறவங்க இதுக்கு முதல்ல பதிலைச்சொல்லுங்க. கார்பார்க்கிங்கில் நடந்து வரும்போது தலைக்குமேல் கம்பிவலையில் தொங்கிக்கிட்டிருக்கும் இதெல்லாம் என்ன? உபயோகித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த ஆணுறைகள் அந்தக்கம்பி வலையில் தொங்கிக்கொண்டிருந்தன. "ஐந்தறிவு ஜீவனோட இங்கிதத்தைப்பத்தி பேசறதுக்கு இந்த ஆறறிவு மனுஷங்களுக்குத் தகுதி இருக்கான்னு யோசிச்சுட்டுப்பேசுங்க." ஊரு வாயை ஒரு புகைப்படத்தால் அடக்கினாள்.
பார்க்கில் நடைப்பயிற்சி போகும்போதும் அவளைப்பற்றியே பேச்சு.
இருந்தாலும் ஒரு பெரிய குடியிருப்பில் இப்படி நாய்களை வைத்துக்கொண்டு படுத்துவேன்னு சொல்றது என்ன நியாயம்? வேணும்னா வீட்டுல வெச்சு வளர்த்துக்கலாமே!
அத ஏன் கேக்கறீங்க? அவங்க வீட்டுக்குள்ள ஒரு பெரும் நாய்க்கூட்டமே இருக்கு அதைத்தவிர இந்த நாய்களையும் கட்டி மேய்க்குது அந்தப் பொம்பள. தினமும் காலைலயும் ராத்திரியும் ஒரு பெரிய சோத்துமூட்டையைக்கட்டிக்கிட்டு எல்லா நாய்களுக்கும் வெச்சுட்டு வருமே! நீங்க பாத்ததில்லையா?
எப்படித்தான் இந்த மாதிரி அராஜகம் பண்ணறாங்களோ! பேசாம போலீஸ்ல போய் கம்பளைண்ட் பண்ணலாம்ல?
அதுவும் பண்ணியாச்சு. வக்கீல் மாதிரி பேசிட்டு வெளில வந்துடுவாங்க.
ரேவதிக்கு அவர்கள் பேசுவதைக்கேட்கும்போது. அந்தப்பெண்மணி எப்படி இருப்பாளோ? அவளைப்பார்த்தே தீரவேண்டும் என்று ஒரு குறுகுறுப்பு. அன்று வீட்டிற்குத் தேவையான காய்கறி வாங்குவதற்காக அவள் வெளியில் வரவும், அவளுக்கு முன்பாக நடந்து சென்ற அந்தப்பெண்மணியைப்பார்த்து சிலர் குசுகுசுவென்று முனகியதில் தெரிந்தது அவள்தான் மேல்வீட்டில் குடியிருக்கும் பெண்மணி என்று.
மாநிறத்தில் பெருத்த உருவம், தலையை பாப் கட் செய்திருந்த அவள் தலையும், உருவமும், நிமிர்ந்த நடையும் அவள் இந்த உலகத்தைத் துச்சமென மதிப்பதை சொல்லாமல் சொல்லியது.
ரேவதி அவளைப்பார்த்து மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
அவள் அந்தப்புன்னகையை பார்த்தும் பார்க்காதது போல காய்கறிகளை மும்மரமாக பொறுக்கி வாங்கியபடி நடையைக்கட்டினாள். ரேவதியும் அவள் பின்னே நாய்க்குட்டிபோலத் தொடர்ந்தாள்.
லிப்ட்டில் அவள் ஏற, பின்னோடயே இவளும் ஏறினாள்.
ரேவதி வலிந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
என் பெயர் ரேவதி. நான் உங்க கீழ் வீட்டுக்குப்புதுசா கூட வந்துருக்கேன்.
அதுக்கென்ன இப்போ? நீயும் என்கிட்டே சண்டைக்கு வரப்போறாயா? எதுவா இருந்தாலும் இப்போ பேச முடியாது. எனக்கு நேரம் இல்ல. அவள் விடுவிடுவென்று தன் வீடு சென்று கதவை அடைத்துக்கொண்டாள். ரேவதி தொங்கிய முகத்துடன் லிப்ட்டில் இறங்கி வீடு வந்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் பெரும் பிரயத்தனப்பட்டு தொடர் அழைப்பிற்குப்பிறகு குடியிருப்பு சங்கக்கூட்டத்திற்கு அவள் வரப்போவதாகத் தெரிந்தவுடன் எல்லோர் மனதிலும் பரபரப்பு புகுந்துகொண்டது.
கூட்டம் கூடியது. ஒரு அரைமணிநேரம் கழிந்திருக்கும். நிமிர்ந்த நடையுடன் அவள் வரவும், இன்று அவளின் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அனைவரும் பொங்கிப்பொங்கி தங்கள் ஆதங்கத்தைக்கொட்டித் தீர்த்தனர்.
அனைத்தையும் அமைதியாகக்கேட்டபடி இருந்த அவள் தலைவரிடமிருந்து மைக்கை வாங்கினாள்.
இங்க பாருங்க! உங்ககிட்ட பேசிப்பிரயோசனமில்லைன்னு தெரியும் இருந்தாலும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வக்கீலா தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட வாழ்க்கை அமைஞ்சு போச்சு. ஒரு வக்கீலா பேச வேண்டிய கட்டாயம், பேசிடறேன். சாகறவரைக்கும் அதுங்களுக்காகவே வாழ்ந்து செத்துப்போணும்னாலும் போறேன். வேற என்ன பண்றது?
இப்போ இந்த குடியிருப்புல ஒரு மூணு அனாதைக்குழந்தைங்க சுத்திக்கிட்டிருக்குங்க அது வேற யாரும் இல்ல, ஒரு பஞ்சாபி தம்பதியும், ஒரு குஜராத்தி தம்பதியும் வளர்த்த குழந்தைங்கதான். அந்த ரெண்டு தம்பதிகளும் செத்துப்போன பிறகு இந்தக்குழந்தைகளோட வீடு பறிபோயிடுச்சு. அதுங்க மனுசங்க கிடையாது அதுங்களோட குடியிருப்பை அவங்களால விலைக்கு வாங்க முடியாது. அந்த வயசானவங்களைத் தேடிக்கிட்டு அந்த ரெண்டு வீட்டையும் சுத்திசுத்தி வருதுங்க பாவம்.
அதே மாதிரிதான் தெருவுலையும் அங்கங்க வீடு கட்டும்போது தங்களோட பாதுகாப்புக்கு நாய்களை வளர்த்துட்டு அப்புறம் அதுங்களை அனாதையா இந்த மனுஷங்க கழட்டிவிட்டுட்டு வேற வீடு கட்டப்போயிடறாங்க. இந்தக்குழந்தைகள் அனாதைகளா தெருவுல திரியுதுங்க. எல்லாத்துக்கும் மூல காரணம் நாம மனுஷங்கதாங்கறதை மறந்துட்டு இந்த ஜீவராசிகளை க ரிச்சுக்கொட்டறது எந்த விதத்துல நியாயம்?
ஏதோ என்னால முடிஞ்சது..! அதுங்களுக்கு சோறு போடறேன். என் வீட்டுக்கு ஆசையா வர்ற குழந்தைகளை வீட்டுக்குள்ள வளர்க்கறேன், தன்னோட வீட்டுல வளரணும்னு போராடறதுங்களை சாப்பாடு போட்டுப்பார்த்துக்கறேன். உங்க வீட்டு மாடிப்படி ஏறி வர்ற இடத்துல சின்னதா கதவு போட்டுக்கிட்டிங்கன்னா அது படியேறி வந்து குப்பையை கிளறாதுங்க அதேநேரம் தங்கள் எஜமானர்கள் வாழ்ந்த வீட்டைச்சுத்தி காலம் கழிச்சிடும். கொஞ்சமே கொஞ்சம் இரக்கம் காமிச் சீங்கன்னா போதும். எல்லாருக்கும் நிம்மதி. கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி அவள் விறுவிறுவென்று வெளியேறினாள்.
அதன்பின் அங்கு பெருத்த அமைதி. ரேவதிக்கு ஒன்று புரிந்தது. ராட்சசி அவள் அல்ல..! தன்னையும் சுற்றி இருந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள். எல்லாரிடமும் கண்ணுக்குத் தெரியாத கோரைப்பல் வெளியே நீட்டிக்கொண்டு அவள் நினைப்பது சரிதான் என்று சொல்லாமல் சொல்வதுபோல அவளுக்கு ஒரு பிரமை.