அப்பு சிவா
சேலம்
அப்பு சிவா
சேலம்
ரஸவாதம்
இன்று சந்திப்புக்கு நேரம் கொடுத்திருந்தார் ராகவன் சார். கல்லூரியில் எனது உயிரியல் ஆசிரியர். எனது ஆர்வம், உயிரியலில் பெறும் மதிப்பெண் ஆகியவை மூலம் அவரது அன்புக்கு பாத்திரமானவன் நான். உண்மையில் இளநிலை வேதியியல் பிரிவில் ஆங்கிலவழி படிப்புக்கு துணைப்பாடமாக கணக்கு இருந்ததால், அந்த திசைபக்கமே திரும்பாமல், துணைப்பாடமாக உயிரியல் இருக்கும் தமிழ்வழியை நான் தேர்வு செய்திருந்தேன். ‘எலி, தவளையெல்லாம் அறுக்கப்போறியேடா!’ என்று அக்கா கேலி செய்தாலும், அந்த பாடத்தில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், ராகவன் சாரின் பாடம் எடுக்கும் முறையில் மயங்கிப்போய் அவருடன் மிக நட்பு ஏற்படுத்திக்கொண்டேன். மிகச்சுமாரான மாணவனான நான், அவரது பாடத்தில் எப்போதும் முதலாய் வந்தது எனக்கே மிக ஆச்சரியமான விஷயம்.
அதன்பின், காலஓட்டத்தில், கணினி பயின்று தலைநகரில் நல்ல சம்பளத்தில் ஐ.டி. துறையில் நான்காண்டுகள் உழற்றி, எல்லாவற்றையும் செலவுசெய்து பின் அவர்களே ஆள்குறைப்பு செய்ய இருந்த சூழலில் வெளியேறி, ஒரு தனியார் நிறுவனத்தில், சொற்ப சம்பளத்தில் கணக்காளராக இருக்கிறேன். நான் கணினித்துறையில் பணியமர்ந்தது அவருக்கு வருத்தமெனினும், எப்போதும்போல பேசிக் கொண்டுதானிருந்தோம். கடந்த ஒரு வருடமாக தாழ்வுணர்ச்சியால் நான் விலகியிருந்தேன்.
சென்ற வாரம் ஒரு ஆங்கில மாத இதழை புரட்ட, அதில் ராகவன் சாரின் கட்டுரையைப் பார்த்து பிரமித்துப் போனேன். மூளை மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய அவரது ஆராய்ச்சி சம்மந்தமான கட்டுரை. மேதமை தெறிக்கும் விஷயங்கள்… அட்டகாசம் செய்திருந்தார். உடனே அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். முதலில் கோபித்துக்கொண்டவர், பின் எப்போதும்போல உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். தற்போது விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதாகவும், தன் தனி வீட்டில் ஆராய்ச்சியைத் தொடர்வதாகவும், என்னை பல நாட்களாக தேடியதாகவும் சொன்னது கேட்டு என் மனம்முழுக்க இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
ராகவன் சாரின் வீடு, அதை வீடென்று சொல்லமுடியாது. ஊரின் எல்லையைத்தாண்டி தனித்து அமைந்த மாளிகை. பூர்வீகமாகவே மிகுந்த வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், தன் படிக்கும் ஆர்வத்தின் பொருட்டு திருமணமே செய்துகொள்ளவில்லை. அவருடன், இரட்டையரான அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் வசித்துவருகிறார். குழந்தையில்லாத அவர், தன் மனைவியின் மறைவுக்குப்பின் ராகவன் சாருடன் இருந்துவிட்டார். அரசின் அணுசக்தி துறையில் பணியாற்றும் அவரை நான் இதுவரை பார்த்தது இல்லை.
பெரிய கேட்டை தாண்டி, சில மீட்டர் தூரம் தோட்டம் போன்ற அமைப்பைக்கடந்து வித்தியாசமாய் இருந்த அழைப்புமணியை அடித்தேன். சில நிமிடம் கழிந்து, இரண்டாவது தடவை மணியை அடிக்க எத்தனிக்க, சட்டென்று திறந்த கதவின் வழியே வெளிப்பட்ட ராகவன் சாரை பார்த்து அதிர்ந்து போனேன். கசங்கிய ஒரு சட்டையும், பைஜாமா போன்ற அழுக்கான ஒரு பேண்ட்டும் தூக்கமில்லாத, குளிக்காததைப்போன்ற தோற்றமும், அடக் கடவுளே…
என்னை உறுத்துப்பார்த்தவர், சிரிக்காமல் மெதுவாக, “உள்ளே வா” என்றார். குரல்கூட பிசிறடித்தார்போலிருந்தது.
அவரை நாய்க்குட்டிபோல் தொடர்ந்தேன். அப்படியே வீட்டை நோட்டமிட்டேன். மிகச்சுத்தமாக பராமரிக்கப்பட்ட வீடு. அழகிய ஓவியங்கள், இருக்கைகள், தேக்கு சிலைகள், ஜன்னல்கள். திரும்ப போகும்போது ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்கி க்ரெடிட் கார்டு கடனை அடைத்துவிட வேண்டும் என்று ஒரு சிறு சபலம் மனதில் தோன்றியது.
ஒரு நிமிட நடைக்குப்பின் அவர் ஒரு அறையின் கதவைத்திறந்தார். சற்று இருளான அறை. வாசல் வழியே வந்த லேசான வெளிச்சத்தில் அந்த அறையின் முழு பரிமாணமும் ஓரளவு தெரிந்தது. அது ஒரு நூலகம். ஒரு வீட்டில் அவ்வளவு பெரிய நூலகம் இதுவரை நான் கற்பனை பண்ணியது இல்லை. ஆனால் அலமாரியில் பாதி புத்தகங்கள் இடம் மாறி அறையின் மைய டேபிளில் கலைந்து கிடந்தது. சில பேப்பர்கள் கணித ஃபார்முலாக்கள் போல பலவாறு கிறுக்கி டேபிளின் பல இடங்களில் ஒரு கொலாஜ் படமாய் சிதறிக்கிடந்தது.
“அப்புறம்?... ஏன் இவ்வளவு லேட்டு... உன்னைதான் எதிர்பார்த்திட்டிருந்தேன்” என்றார்.
“வந்து... பஸ் ஸ்லோ சார், சென்னையிலிருந்து நாலுமணி நேரம் உருட்டிட்டான்”
“உன் கார் எங்க?”
“சார்... எங்கிட்ட கார் இல்ல”
“ஓ, ரைட், அது முக்கியமில்ல… ஓகே... ஆரம்பிக்கலாமா”
“ எது சார்?”
“என் ஆராய்ச்சி பத்தி, ரொம்ப நாளா அது விளக்க ஆள் தேடிட்டிருந்தேன். நேத்து கனவில நீ வந்து, வரேன்னு சொன்ன”
நான் சற்று குழம்பிதான் போனேனெனினும் அவரின் பேச்சுக்கு மறுப்பு சொல்லவோ, கேள்வி கேட்கவோ என்னால் முடியவில்லை. அவரையே திருதிருவென்று பார்த்தேன். ஒரு ஆராய்ச்சியின் தாக்கம் ஒரு மனிதனை இந்த உலகையே மறக்கச்செய்யுமாவென தோன்றியது. ஆனால் அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதியாது பேசிக்கொண்டே இருந்தார்.
“ரஸவாதம்னா என்னான்னு தெரியுமா?”
“சார்... அது வந்து... இரும்பை தங்கமாக்கறது”
“ஓகே, உனக்கு புரியுதான்னு பார்த்தேன். ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமா மாத்தமுடியும்னு நீ நெனக்கிறியா ?”
அவர் குரலின் பிசிறடித்தார் போன்ற தன்மையும், அந்த அறையின் இருளும், என்னைக் கவனியாது சில புத்தகங்களை வேகவேகமாக புரட்டியபடி அதே சமயம் இடைவெளியின்றி அவர் பேசும் விதமும் சற்று கிலியேற்படுத்தியது.
“பழைய காலத்தில் முயற்சி செய்திருக்காங்க சார்”
“முட்டாள்தனம், ஒரு அணுஅமைப்பை... சில அமிலங்களில் கரைப்பதால் மாற்றமுடியும்னு நம்பும் முட்டாள்தனம்..”
“அது பொய்யா சார்?”
“கற்பனையில் யோசித்து முயற்சி செய்திருக்காங்க, ஆனா மிகப்பெரிய அணு ஆராய்ச்சியாளர்கள் இது சாத்தியம்னு சொல்லியிருக்காங்க. முக்கியமான விஷயம், ஒரு டன் தங்கம் செலவு செய்து சில கிராம் இரும்பை தங்கமா மாத்தலாம்... ஹாஹா...ஹா....”
அவரது சிரிப்பில் பீரிட்டெழுந்த க்ரீச் சத்தம், என்னை புரட்டிப்போட்டது.
“சில விஷயங்கள் எளிதா செய்யலாம். நாம் மூளையை பயன்படுத்துவது இல்லை. பிரபஞ்சத்தை பற்றி என்ன நெனக்கிற?”
“வந்து... அது எல்லையில்லாதது சார்”
“உனக்கு விஷயம் தெரியும்னு நெனச்சேன், ஸோ புவர். பரவாயில்ல... அதாவது நம்மால் கற்பனை பண்ணமுடியலன்னு சொல்லு”
“ஆமா சார்” (ஒரு ஐம்பதாயிரம் தந்தா ஓடிடுவேன் சார்).
“ஆனா... பிரபஞ்சமும் எல்லையோடதான் இருக்கு. யோசி, பெருவெடிப்புக்கு முன் என்னதான் இருந்திருக்கும்? ரொம்ப யோசிச்சா மூளை உருகிடும். அதென்ன ஒண்ணுமேயில்லாத இடத்தில் இருந்து வெடித்து ஒரு புள்ளியாய் ஆரம்பித்து இவ்வளவு பெரிய… இவ்வளவு பொருட்களோட வளர்ந்து... முடியல இல்ல?”
நான் பேசவில்லை.
“நாம் அறிவியல் என்று சொல்லும் விஷயம் தோற்றுபோகுமிடம், அல்லது எந்த கணிதத்தாலும் கணக்கிடமுடியா இடம். அதிசயம்னு சொல்லிட்டு தூங்கலாம், அவ்ளோதான். ஆனாபாரு... இந்த பெருவெடிப்பின் துளிகள் இங்கே பரவியிருக்கு. எல்லா பொருட்களிலும்... எல்லா மனிதரிடமும்...”
நான் என்னை தொட்டுபார்த்துக்கொண்டேன். என் உதடுகள் மட்டும் லேசாய் வெடித்தாற்போல் இருந்தது.
“அந்த சக்தி என்னைபார்… என்னைபார்ன்னு ஓயாம கூச்சலிட்டுக்கிட்டே இருக்கு. அத கவனித்தது சில ஞானிகள் மட்டுமே. அதிலும் அதை மொழியால் சொல்ல இயலாமல், உணர்ந்துக்கோங்கன்னு சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க. ஆனா… ஒரு தேர்ந்த அறிவியலாளன் இந்த ஞானத்தையும் உணரும்போது அங்கே சில விஷயங்கள் மனித மொழியில் சொல்றதுன்னா பிரம்மிப்பூட்டும் சில விஷயங்களை செய்யமுடியும்.“
“அப்படின்னா?”
“ஒரு அணுவை உடைச்சா என்னா ஆகும்?”
“உலகம் அழியும் சார்”
“இந்த பூமியின் மையத்தில் பலகோடி அணுக்கள் சதா உடைஞ்சிட்டுதான் இருக்கு நண்பா”
எனக்கு சற்று பொறிதட்டியது. ‘ஏன்டா ரகு’ என்பதைத் தவிர ராகவன் சார் இப்படி பேசியதில்லை.
“இத பார் நண்பா... ஒரு அணுவின் கட்டமைப்பை உற்று பார்க்க அது புரோட்டான் எலக்ட்ரான் அப்புறம் நியூட்ரான்களின் அமைப்பாய் இருக்கும். ஒரு பாதரச அணுவின் புரோட்டன்களை இடமாற்றம் செய்வதன் மூலம் அதை வேறொரு தனிமமாக மாற்ற முடியும்.“
“ஆனால் இது நடக்காத காரியம் சார்”
அவர் என் குரலை கவனிக்காமல் என் வலது கையில் இருந்த காப்பை பார்த்து கேட்டார்.
“இது வெள்ளியா?”
“இல்ல சார்... இது ஸ்டீல். வெள்ளிக் கலர்”
“அதைக்கழட்டு, ஞானிகளின் தத்துவங்களை அறிவியலாய் நிரூபிக்கிறேன்.”
நான் கழட்டிக்கொடுத்தேன்.
“இது பார் தம்பி... இது இரும்புக்காப்பு, இதன் அணுஎண் 26. அதாவது 26 புரோட்டான், 26 எலக்ட்ரான். ஒரு உலோகத்தின் அணுக்கள் செங்கல்சுவர் மாதிரி பிணைக்கப்பட்டிருக்கும். தகர்க்க முடியாத சுவர். தகர்ந்தா பிரளயம்தான். ஞானக்கண்ணால் அந்த அணுவை... தம்பி கவனி, உனக்கு புரியறதுக்குதான் ஞானம்ங்கிற வேர்ட்ஸ் யூஸ் பண்றேன், அதை உறுத்து பார்த்து உருப்பெருக்கிக்கொண்டே போக... அதன் இணைப்புகளில் ஒரு மெல்லிய... வந்து அதாவது பலகீனமான இணைப்பு கண்ணுக்கு தெரியும். அதை லேசா தீண்டி விட்டாபோதும், நாம் நினைக்கும் இடத்துக்கு அதை மாற்றி வைக்கலாம்.”
“சார்… இது சும்மா போங்கு, நானும் கொஞ்சமாச்சும் பிஸிக்ஸ் படிச்சிருக்கேன்”
“அப்புறம் இன்னும் நல்லாபடி. இப்போ கவனி... ஒரு தங்கத்தின் அணு எண் 79. ஒரு நான்கு இரும்பு அணுக்களை ஒன்று சேர்த்து ஒரு தங்க அணுவா மாத்தலாம். அதாவது மொத்தம் 104 புரோட்டான் எலக்ட்ரான்களை இணைத்து ஒரு தங்க அணுவா மாற்ற, மீதம் 25 புரோட்டான் எலக்ட்ரான்கள் ஒண்ணு சேர்ந்து ஒரு மாங்கனீஸ் அணுவா மாறிக்கும்.”
“நிஜமாவே உங்களுக்கு மூளை குழம்பிடுச்சு சார்.”
என்னை மீறி வந்து விழுந்த வார்த்தைகளை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
“ஆனால் அந்த மாங்கனீஸ் அணு நிலையா இருக்காது, ஏன் சொல்லு? இந்த நான்கு இரும்பு அணுக்களின் மொத்த நியூட்ரான்கள் 120ல் ஒரு தங்க அணு 118 எடுத்துக்கும். மாங்கனீஸ்க்கு தேவையான நியூட்ரான்கள் 28 குறைவதால் அது விரைவில் அழிந்து பெருவெடிப்புக்கு முந்தய நிலைக்கு சென்றுவிடும்.“ லேசாக கண்களை மூடினார்.
“முட்டாள்தனம்”
“இந்த மாறுதல்களை நிகழ்த்த மனதை ஒரு நிலைப்படுத்தி... ஆழ்ந்து அந்த அணுவின் உள்ளடுக்குக்குச் சென்று... ஒரு தேர்ந்த சிற்பிபோல... மெதுவாக...”
அவர் பேசிக்கொண்டே போக நான் விரக்தியின் எல்லைவரை சென்று, கிளம்ப முயல, சடாரென்று கண்விழித்தவர், “தம்பி... உன்பெயர் என்ன? ஏதோ வைத்துக்கொள்.. .அங்கே பார்” என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தை பார்த்தவன் விக்கித்துப்போய் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தேன்.
அங்கே... என் இரும்புக்காப்பு, மின்னும் தங்கமாக மாறியிருந்தது. ஆனால் அளவில் நான்கில் ஒருபங்காக சுருங்கி ஒரு மோதிரம் அளவில். அதைச்சுற்றி புகைப்படலமாக... மக்னீசியம் துகள்கள். எனக்கு தலைச்சுற்றியது. இதயம் வலிப்பதுபோன்ற உணர்ச்சி ஏற்பட்டது.
திடீரென்று...
“டேய் ரகு, வெளிய வா” என்று வெளியிலிருந்து சத்தமாக கேட்ட குரலின் வேகம் நல்லவேளையாக என்னை இந்த உலகிற்கு கூட்டிவந்தது. அது ராகவன் சாரின் குரலேதான். திரும்பிப் பார்த்தேன். இருண்ட அறையின் வெளிச்சமான வாசலில் அவரது அதே ஆகிருதியான உருவம் நிழலாய் என்வரை நீண்டு என்னை தூக்குவதாய் உணர்ந்தேன்.
“வெளியே வாஆஆஆஆ...” என்று நீண்ட குரல், நான் திரும்பிப் பார்க்காமல் வெளியேறி ஒரு இருக்கையில் தொய்ந்து விழுந்தவுடன் நின்றது.
“ஏண்டா லூஸுப்பயலே, எனக்கும் என் தம்பிக்கும் கூடவா வித்தியாசம் தெரியல? அட குரல் கூடவா மறந்துபோயிட்ட?” என்றார் ராகவன் சார்.
அவர் ஒரு டம்ளரில் நீட்டிய தண்ணீரை புறங்கையால் ஒதுக்கி, ஜக்குடன் பிடுங்கி வேகவேகமாக குடித்து, மீதம் தண்ணீரை தலையோடு கவிழ்த்துக்கொண்டேன்.
“சார், அது என்னவோ தெரில. உங்க தம்பின்னும் யோசிக்கல. அவர் பேசப்பேச மந்திரத்தால கட்டிப்போட்ட மாதிரி ஆயிடுச்சு. நல்லவேளை, வந்திங்க”
“அவன் மனோவசியம் தெரிஞ்சவன்பா. எதையும் நம்ப வச்சிடுவான்.“
“அவர் ஏதேதோ பண்றார் சார்”
“நல்லாதாம்பா இருந்தான். அவன் மனைவி இறந்ததும் கொஞ்சம் புத்தி தடுமாறிட்டது. அதோடு... சொல்ல கஷ்டமா இருக்கு. அவனுக்கு மூளையில் கேன்ஸர்”
“அடடா”
“உன்னை நம்பி சொல்றேன், வெளிய சொல்லிடாதே. அவன் மூளை கேன்ஸரை குணப்படுத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நாள் குறிச்சிட்டாங்க, ஆனா நான் முடியும்னு நம்பினேன். அவனுக்கு நானே ஆபரேஷன் செய்தேன்.”
ராகவன் சார் சிறிது தண்ணீரை சாய்த்துக்கொண்டார்.
“ஆனா முடியல. பட்... ஒருவேளை செய்தேன். ஐன்ஸ்டீன் மூளையின் அமைப்பை ஆராய்ந்து அதே வகை மடிப்புகளை அவனுக்கு செய்வித்தேன். சாகப்போறவன். ஏதாவது சாதிச்சுட்டு சாகட்டுமேன்னு. ஆனா வேற மாதிரி ஆயிட்டது. குழம்பிட்டான்.”
“நீங்க ஆபரேஷன் செய்யலாமா சார்?”
“சட்டப்படி நான் டாக்டர் இல்ல ரகு. கவனி, சட்டப்படி... ஆனால் நான் பத்து டாக்டருக்கு சமம். உன் மூளைக்கு இன்னும் உயிரியல் துறையிலே ஆர்வமா இருக்கா ரகு? இரு, குடிக்க டீ போட்டுட்டு வரேன்” என்று ராகவன் சார் எழுந்து சென்றார்.
நான், கோபால் சாரை கடத்தி, ஒரு டன் இரும்பை தங்கமாக்கிவிடலாமா, என்று யோசித்தேன். அந்த தங்கக்காப்பை எடுத்து வந்தாலாவது இந்த மாதத்தை ஓட்டிவிடலாமே என்றும் தோன்றியது.
மெதுவாக எழுந்தேன். சற்று பயமாகவும் இருந்தது. இரும்பு தங்கமானது நிஜமா?... மனோவசியமா? என மனம் குழம்பியது. ராகவன் சார் பார்க்கிறாராவென எட்டிப்பார்க்க, அவர் ஒரு டீ டம்ளரில் ஏதோ ஒரு மாத்திரையை பொடித்துக் கலக்குவது தெரிந்தது.
‘உன் மூளைக்கு இன்னும் உயிரியல் துறையிலே ஆர்வமா இருக்கா ரகு?’ என்ற அவரது கடைசிக் கேள்வி என் முதுகுத்தண்டில் ஜிலீரென்று கத்திபோல் பாய்ந்தது. தங்கத்தின் மீதான ஆசை உயிர்ப்பயமாய் ரஸவாதம் செய்ய, அவரை பார்த்தபடியே பின்புறமாய் நடந்தேன். வெளிப்புற ஜன்னல் வழியே ராகவன் சார் தனக்குள் பேசிக்கொண்டே டீயை ஊற்றுவது தெரிந்தது. என் முதுகு அவர் மாளிகையின் கேட்டில் மோதிய சத்தம் கேட்டு சட்டென்று நிமிர்ந்த அவர் வேகமாய் ஜன்னலின் கண்ணாடியில் முகம் புதைத்து என்னையே வெறித்துப்ப்பார்த்தார். அவர் பார்வையின் கோரம் தாளாமல் படாரென கேட்டைத் திறந்து ஓட்டம் பிடித்தேன்.