புனிதா பார்த்திபன்
தமிழ்நாடு
புனிதா பார்த்திபன்
தமிழ்நாடு
"என்னாச்சு ஈஸ்வரி, ரெண்டு மூணு நாளா நானும் பாக்குறேன், சிடுசிடுனே இருக்க. யார்ட்டையும் ஒழுங்கா பேச மாட்ற, என்ன உன் மகன் அவன் பொண்டாட்டி பேர டாட்டூ போட்டுட்டு வந்துருக்கான்னு இப்படி பண்றியா?" எனக் கேட்டார் கணபதி.
"ம்... என்னதான் தூக்கி வளர்த்து ஆளாக்குனாலும், நேத்து வந்தவளுக்காக தான இந்தப் பசங்க மாறிடுறாங்க" என்ற ஈஸ்வரியை புருவத்தை உயர்த்திப் பார்த்த கணபதி,
"நான் என்னமோ பேச்சுக்கு கேட்டா, நீ அதான் பிரச்சனைங்குற! இதென்ன புது எண்ணம் ஈஸ்வரி? அன்புங்குறது காத்து மாதிரி எல்லா திசைகள்லையும் இருக்கணும். தன் மேல மட்டுமே அன்பா இருக்கணும்னு இங்க யாராலையும், எந்த உறவுக்குள்ளையும் நினைக்க முடியாதுல" என்றார்.
"ம்... சரிதாங்க... ஆனா அப்ப அந்த அன்போட வெளிப்பாடு என் மேலயும் தான இருக்கணும். என்னதான் சொல்லுங்க, இனி நான் ரெண்டாம் பட்சம் தான. புதுசா ஒரு உறவு வந்ததும் நான் தள்ளிப் போயிடணும்ங்குறதுதான நியதி"
"ஈஸ்வரி, மொதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோ. ‘உன் மேல, நான் ரொம்ப அன்பா இருக்கேன்னு’ வெளிப்படுத்துறதுதான் இந்த மாதிரி டாட்டூ போடுறதெல்லாம். ஆனா ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்குற உறவு அப்படி சொல்லிக்காமிக்கக் கூடியதா? இது உள்ளங்கையோட இணைஞ்ச ரேகை மாதிரி! நிலாவும் அழகும் மாதிரி. இது வேற எந்த உறவோடையும் ஒப்பிட முடியாதது. மருமக வந்ததும் மகன்ட்ட இருந்து நீ ஏன் தள்ளிப் போறதா நினைக்குற, அவளுக்கும் போதுமான இடம் குடுக்குறதா நினச்சுக்கோயேன்."
"நான் சரியாதாங்க இருக்கேன். முக்கியமா அப்படியே தான் இருக்கேன்" என்றார் ஈஸ்வரி லேசான சிடுசிடுப்புடனே.
"சரி, ஒன்னே ஒன்னுக்கு மட்டும் உன் மனசக் தொட்டு பதில் சொல்லு. கடைசி வரைக்கும் அவன் எல்லா பாசத்தையும் உன் மேல மட்டுமே காட்டணும்னு நினைக்கிறியா? அஞ்சு விரலுமே கைக்கு முக்கியமில்லையா?" எனக் கேட்டார்.
சில நொடிகள் மெளனத்திற்கு பிறகு, மெதுவாய் தலையை ஆட்டிய ஈஸ்வரி, "புரியுதுங்க" என்றார் சுரத்தையின்றி.
"ஈஸ்வரி, இந்த வயசுல கூட நான் ஒரு புடவை எடுத்துக் குடுத்தா நீ எவ்வளவு சந்தோசப்படுற, அதே தான அந்தப் பொண்ணுக்கும். எப்பவுமே ஒரு விஷயத்த நினைவுல வச்சுக்கோ. தலை, கை ரெண்டுமே உடம்புல முக்கியம்தான். அதுக்காக கிரீடத்த எடுத்து கையில மாட்டிக்க முடியாது. அந்த மாதிரி ஒவ்வொரு உறவுக்கும் அதுக்கான அன்பு, ஒவ்வொரு பாணியில வெளிப்படுத்தக் கூடியதா இருக்கும். அத மனசார ஏத்துக்கப் பழகிக்கோ" என்றவர் நகர்ந்து சென்றார்.
மெளனமாய் கணவரின் வார்த்தைகளை தனக்குள்ளே சொல்லிப் பார்த்து, தனக்குத் தானே தலையாட்டிக் கொண்ட ஈஸ்வரியின் மனதுக்குள் கனத்த ஏதோ ஒன்று மெல்ல வடிய ஆரம்பித்திருந்தது.