கார்த்திகேயன் மாதயன்
திருவண்ணாமலை
கார்த்திகேயன் மாதயன்
திருவண்ணாமலை
சேலம் அஸ்தம்பட்டி பரபரப்பான சாலை வாகனங்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன. தமிழின் ஆட்டோவில் கொஞ்சி குலாவி கொண்டு வந்த காதல் ஜோடி காந்தி ரோட்டில் இறங்கிக் கொள்ள, வேறு எதுவும் சவாரி வருமா என ஒரு ஓரமாக காத்திருந்தான்.
அப்போது அம்மாவிடம் இருந்து போன் வர, 'சொல்லும்மா' என்றான்.
'தம்பி எல்லாம் எடுத்தாச்சு... இன்னும் நக மட்டும்தான் பாக்கி' என அம்மா சொன்னபோது, ஆட்டோவின் அருகே வந்த ஒரு பெரியவர் கொஞ்சம் பதட்டமாய் "தம்பி கொஞ்சம் அர்ஜென்ட் ஜங்ஷன் வரை போகணும், வர்றீங்களா..?" என்றார்.
'போலாம் சார்" என்றதும் "எவ்வளவுப்பா..?" என்ற அவரின் கேள்விக்கு "அதிகமால்லாம் கேட்க மாட்டேங்க... இங்க இருந்து அங்க போக குறைஞ்சது 150 ஆகும், அதையே கொடுங்க" என்றதும் அவர் தலையாட்டியபடி ஏறிக் கொண்டவர் கையிலிருந்த பையை தனக்கு வலப்புறமாக வைத்துக் கொண்டார்.
தமிழ் ஆட்டோ ஓட்டிக் கொண்டே இயர் ஃபோனில் அம்மாவிடம் பேச ஆரம்பித்தான்...
'ம்ம் சொல்லுமா..'
'அதாம்பா நக மட்டும் எடுக்கணும்... கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு...'
'நகதானே... தங்கச்சி கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சிடலாம் நீ ஒன்னும் கவலைப்படாத. பணம் தரதா பீட்டர் அண்ணன் நம்பிக்கையா சொல்லி இருக்காரு. 'சாயந்திரம் வரும்போது அவர பாத்துட்டு நான் வீட்டுக்கு வரேன்... வச்சிடுறேம்மா'
"தம்பி ட்ரெயினுக்கு டைம் ஆச்சு கொஞ்சம் சீக்கிரமா போப்பா..." என்றார் பெரியவர்.
"சரிங்க" என்றபடி ஆக்ஸிலேட்டரை முடுக்கினான்.
பெரியவருக்கு போன் வந்தது.
'சொல்லுப்பா...'
'அப்பா அம்மா நிலைமை இன்னும் மோசமா இருக்கு கொஞ்சம் சீக்கிரமா வாப்பா ட்ரெயின் ஏறிட்டியா..?'
'இந்தா ஜங்ஷன் போயிட்டே இருக்கேன்ப்பா அஞ்சு நிமிஷத்துல ட்ரெயின் ஏறிடுவேன்...'
ஜங்ஷன் வாசலில் இறங்கிய பெரியவர் 200 ரூபாயைக் கொடுத்த கையோடு மீதம் வாங்காமல் அவசரமாய் அங்கிருந்து சென்று விட்டார்.
'50 ரூபாயை வாங்கமலே போயிருச்சே பெருசு.' என நினைத்தபடி பின் இருக்கையைப் பார்க்க அங்கே பெரியவர் மறந்துவிட்டுப் போன பை இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே ஓடி, எல்லாப் பக்கமும் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வேறு வழி தெரியாமல் பணப்பையை பத்திரமாக ஆட்டோவில் வைத்துக் கொண்டான்.
சாயந்தரம் பீட்டரைப் பார்க்க, அவரோ இப்போது கையில் பணம் இல்லை என்று கையை விரிக்க, கவலையோடு வீடு வந்து சேர்ந்தவன், அந்தப் பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
"தம்பி சொன்ன மாதிரியே பணத்தை ரெடி பண்ணிட்டு வந்துட்டியா" என்று கேட்டபடி பேக்கை வாங்கிய அம்மா, அதில் நிறைய பணம் இருப்பதைப் பார்த்து, "தம்பி என்னப்பா நிறைய பணம் இருக்கு..?" என்றாள்
"என்னம்மா சொல்ற.. பணமா...?" என்ற படி வாங்கிப் பார்த்து "ஆய்யோ பாவம்... எதுக்கு எடுத்துப் போன பணமோ" என்றபடி தலையில் கை வைத்துக் கொண்டான்.
"பாவமா... அப்போ பீட்டர் கிட்ட வாங்கின பணமில்லையா இது"
"இல்லம்மா... பீட்டர் அண்ணன் இப்ப கையில பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு... காலையில பாப்போமுன்னு சொன்னார்" என்றவர் எல்லாரும் அப்ப இது ஏது என்பதைப் பார்க்க, காலையில் நடந்த விபரத்தை ஒண்ணுவிடாமல் சொல்லி முடித்தான்.
"தமிழ் யாரோ என்னவோ என்ன பிரச்சனையோ பேசாம பணத்தை கொண்டு போய் அவங்க கிட்டயே கொடுத்திருப்பா.." என்றாள் அம்மா.
"மோ நீ சும்மா இருமா.. இந்த காலத்துல பாவம் புண்ணியம் எல்லாம் பார்த்தா பொழைக்க முடியாது. இது அடிச்சு புடுங்குற உலகம். இவன் என்ன அடிச்சா புடுங்கனான் தானா வந்தது. இவன் அந்தப் பெரியவர தேடிப் பார்த்து கிடைக்கலைன்னு தானே வந்து இருக்கான்.கடவுள் ஒருமுறைதான் நமக்கு வாய்ப்பு கொடுப்பாரு கரெக்டா தக்க வச்சுக்கணும்" என்றான் தமிழின் நண்பன்.
"என்னடா சொல்றே..?"
"ஆமா... இந்தப் பணமும் இல்லைன்னா நம்ம தங்கச்சி வாழ்க்கை என்ன ஆகும் கொஞ்சம் நினைச்சு பாரு. நாம அசிங்கப்பட்டு தான் நிக்கணும். இப்புடி எல்லாரும் புலம்புறத விட்டுவிட்டு போய் நகை எடுத்துட்டு வர வழிய பாருங்க. பின்னாடி வர பிரச்சனைய அப்புறம் பேசிக்கலாம்".
"இல்லடா... அது தப்பு" என்றவன் தனது தங்கச்சியின் அருகில் போய் "நீ என்னம்மா சொல்ற..?" எனக் கேட்டான்.
"நீ என்ன முடிவு எடுக்குறியோ எடுணா... உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணு. அதுல எனக்கு பூரண சம்மதம்" என்றாள்.
பணப்பையை எடுத்துக் கொண்டு அம்மாவையும் நண்பனையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி கிளம்பினான்.
நகை கடையை தாண்டி ஆட்டோ சென்றது
"டேய் நிறுத்துடா நிறுத்துடா இங்க தான்டா.." எனக் கத்தினான் நண்பன்.
"தம்பி எங்கப்பா போற..?" என்றாள் அம்மா.
அவன் பதில் சொல்லவில்லை.
ஒரு மணி நேரத்தில் ஆட்டோ மீண்டும் வீடு திரும்பியது.
அம்மா எதுவும் பேசாமல் அழுது கொண்டே உள்ளே சென்றாள்..
"உன்னல்லாம் நண்பன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமா இருக்குடா..." தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான் நண்பன்.
"என்னண்ணா ஆச்சு..?"
"அத அவன் கிட்டயே கேளும்மா..."
"அண்ணே என்ன நடந்துச்சு..?"
தமிழ் தயக்கத்துடனே "பணத்தை போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்துட்டேம்மா..." என்றான்.
"சரி விடுண்ணே அது நம்ம பணம் கிடையாது யாருக்கு போய் சேரனும்னு விதி இருக்கோ அவங்களுக்கு தான் போய் சேரும்..."
"தங்கச்சி நீ என்ன வேணா சொல்லு நான் ஒத்துக்க மாட்டேன்.
டே.. ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு எப்படிடா உனக்கு இப்படி பண்ண மனசு வந்தது. அந்த புள்ள முகத்துக்காகவாவது நீ யோசிக்க வேணாமா... சீ போடா" என்று நண்பன் வெளியே கிளம்பி விட்டான்..
அன்று இரவு முழுவதும் வீடே அமைதியாக இருந்தது.
அடுத்த நாள் காலை தமிழின் வீட்டிற்கு முன் போலீஸ் ஜீப் வந்து நின்றது. தெருவே என்னவோ ஏதோ என்று பார்க்க, அதிலிருந்து காவல்துறை அதிகாரியும், பணத்தை விட்ட அந்தப் பெரியவரும் இறங்கினர்.
"டேய் தமிழ் வீட்டு வாசலில் யார் யாரோ நிக்கிறாங்கடா கொஞ்சம் வெளிய வந்து பாரு..." எனக் குரல் கொடுத்தான் நண்பன்.
வெளியே வந்த தமிழின் கையைப் பிடித்து அந்த பெரியவர்,
"தம்பி என் பொண்டாட்டி கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல சீரியஸா படுத்திருந்தா அவளை குணமாக்கத்தான் இந்த பணத்தை எடுத்துட்டு நான் அவசர அவசரமா கோயம்புத்தூர் போனேன்... ஆனா அவசரத்துல பணத்தை உங்க ஆட்டோவிலேயே விட்டுட்டேன். நல்ல வேலையா நீங்க ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுத்துட்டீங்க. கரெக்டான நேரத்துல இவங்களும் என் கிட்ட பணத்தை ஒப்படிச்சிட்டாங்க. நீங்க மட்டும் இல்லேன்னா என் பொண்டாட்டிய நான் பார்த்திருக்கவே முடியாது"
என்று கண்ணீரோடு கைகளைப் பிடித்துக் கொண்டார். நண்பன் தலை குனிந்திருக்க, தமிழ் தலை நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
"அன்னைக்கு ஆட்டோவில் உங்க தங்கச்சி கல்யாணத்தை பத்தி நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். இந்தாங்க இந்த பணத்தை வச்சுக்கோங்க இது உங்க நேர்மைக்கு கிடைத்த பரிசு."
என்றபடி வேனில் ஒருந்து ஒரு சிறு பேக்கை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் இந்த நிகழ்வு ஃபோட்டோவுடன் பத்திரிக்கையில் வர, அதைப் பார்த்த தமிழின் தங்கச்சி மாப்பிள்ளை குடும்பத்தார், 'உங்கள் வீட்டுப் பெண்ணை கட்டிக்கொள்ள எங்களுக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம்' என்று கூறிவிட்டனர்.
தமிழை அந்த ஊர் மக்கள் கொண்டாடினர்.