அன்பாதவன்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ராஜேந்திரன் ஐசியூ வார்டில் நுழைந்தபோது இரவு ஒன்பதரை இருக்கலாம்.
ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டு வந்த அனஸ்தீசியாக் கொண்டானை, கார்டியாக் ஐசியூ- வார்டுக்குள் செலுத்தப் படுக்கை தயாராகிறது. ராஜேந்திரன், ஐசியூவின் அங்கத்தினன் ஆகிய தருணமது!
ஆஹா! ராஜேந்திரன் இன்னமும் உயிரோடு... நலமோடு!
பிங்க்நிற சீருடைத்தரித்த செவிலியின் வாஞ்சையான குரலில், எங்கோ தூரத்திலிருந்தொலிப்பது போல, ராஜேந்திரனின் செவியுள் விழுந்தது!
“அப்பா... பசிக்குதாப்பா... கொஞ்சமாக்கஞ்சி தர்ரன்... மெதுவாக் குடிச்சுடுங்க!”
மயக்கத்தின் பிடியிலிருந்த ராஜேந்திரன், மய்யமாகத் தலையாட்டினான்!
‘கிர்ர்’ரென ஒரு சப்தம்! ராஜேந்திரன் பள்ளி கொண்டிருந்த படுக்கை சற்றே உயர்ந்தது! இப்போது அமர்ந்த கோலம்.
இளஞ்சிகப்புடைச் செவிலி, சிறியதொரு கோப்பையில் சுடுகஞ்சியை கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டினாள்.! உப்பில்லாக் கஞ்சி வயிற்றினிலே! மெல்ல மெல்லப் பருகியவன் மீண்டும் அரைப்பிரக்ஞையில் ஆழ்ந்தான்!
“படுக்குறம்மா. முடியல!”
”சரிங்கப்பா... பசிச்சாக் கூப்புடுங்க.”
”சரிம்மா...!”- சாய்ந்தான். கண்கள் சொருகின. ஞாபகச்சுழலில் ராஜேந்திரன்.
அப்போதுதான் தொடங்கியது அந்த வாதை !.
என்னயிது..? ஏனிப்படி வியர்க்கிறது? வலது தோள் தொடங்கி இடது தோள் வரையில் மார்புப்பகுதியில் எரிச்சல் தொடங்கியது. எரிச்சலெனில் உள்ளுக்குள் யாரோ பெரியதொரு தீப்பந்தத்தால் சுடுவது போன்ற அனலெரிச்சல்... நெஞ்செரிச்சல்!
தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் மிடறுமிடறாக விழுங்க லேசாய் தணிந்தது போல் போக்குக்காட்டி மீண்டும் ஆரம்பித்தது மார்பெரிச்சல் .
ஒருபுறம் தாளமுடியாத நெஞ்செரிச்சல், இன்னொருபுறம் தலையிலிருந்து தணியாத வியர்வை. இதென்ன புதுசாய்… நோயா.. அல்லது ஏதாவது நோய்க்கான அறிகுறியா?
ஐயோ ! தாளமுடியாத எரிச்சல் !நெஞ்சுக்குள் ‘திகுதிகு’வென எரிவதை உணர முடிகிறது. ஆனால் நெஞ்செரிச்சல் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர வேறெதையும் விவரிக்க முடியவில்லை.
ம்ஹூம்..இனியும் தனியாயிருப்பது சரியல்ல ..!
மனைவியை அழைத்தவன் “எம்மா கொஞ்சம் சீரகத்தண்ணிக் கொதிக்க வை .. “ பேசியபடியே சோபாவில் சாய்ந்தான் .
“ஏங்க என்னவாச்சு ஏனிப்படி டல்லா இருக்கீங்க? தலையெல்லாம் வேர்க்குது. நல்லாத்தான இருந்தீங்க... என்ன செய்யுது உங்களுக்கு..?” கேள்வியின் நாயகியாய் மனைவி.
இளஞ்சூடாக சீரகத்தண்ணீர் தர, துளித்துளியாய் விழுங்கினான் ராஜேந்திரன். நெஞ்செரிச்சல் கொஞ்சம் பரவாயில்லைபோல இருந்தது, ஆனாலும் குறையவில்லை. 62 வயதுக்குண்டான அச்சம் ராஜேந்திரனைச் சூழ்ந்தது. இதுதான் மரண பயமா..? மரணம் தவிர்க்கவியலாது தான்... ஆனாலும் சில மரணங்கள் ராஜேந்திரனை உலுக்கி விடுகின்றன.
கடந்த மாதத்தில் ஒரே வாரத்தில் தொடர்ச்சியான சில மரணங்கள் அவன் மூளையின் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு நகர்வதாயில்லை. சித்திமகன் கோபி, பக்கத்துவீட்டு லதாம்மாவின் தற்கொலை, சில மாதங்களுக்குமுன் மருத்துவமனையிலேயே இறந்துபோன சினேகிதன் இதயவேந்தனின் கடைசி நேரக் கண்கள், அந்திமழை இளங்கோவன்சாரின் அகாலமரணம் எனத்தொடர்ச்சியாய் அதிர்வலைகள். சரி இதையெல்லாம் மறக்கலாமென தொலைக்காட்சி இயக்கினால் இஸ்ரேலின் போர்வெறிக்கும் இனவெறிக்கும் பலியான காஸா மேற்குக்கரை குழந்தைகள். போர்விமானங்களுக்கு பள்ளிகளும் மருத்துவமனைகளும்தாம் குண்டு வீச மிகச்சிறந்த இடமோ?
யோசனைகளின் மேகத்திரள்கள்! யோசிக்க யோசிக்க நெஞ்சுக்குள் எரிச்சல் அதிகமானதைத் தவிர குறையவில்லை. நெஞ்செரிச்சல் ஓய்வதாயில்லை. உச்சந்தலையிலிருந்து வியர்வை அருவியுந்தான்.
தம்பி செந்திலின் கைப்பேசி அழைத்தது.” ஊருக்கு வந்துருக்கண்ணா… வர்ரயா வீட்டுக்கு?”
“காலையிலதான் பெங்களூர்லயிருந்து வந்தயா... மீனாட்சியும் வந்துருக்குதா?” என்றவனின் மங்கியக்குரலை உணர்ந்த செந்தில்” ஏண்ணா கொரலெல்லாம் டல்லா இருக்கு” என வினவ செந்திலிடம் மெல்லியதொனியில் நெஞ்செரிச்சல் விவரம் சொல்ல, அடுத்த பதினைந்தாவது நிமிஷம், தம்பியின் கார் ராஜேந்திரன் வீட்டு வாசலில் நின்றது.
“கெளம்புண்ணா சீக்கிரம்… டாக்டர் அருள்செல்வன் சார்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன். என்னன்னு செக் பண்ணிடுவோம்”
மிகமெதுவாக வழக்கமான மருந்துகளோடு பணமும் கடனட்டையும் எடுத்துக்கொண்டு தம்பியோடுக் கிளம்பினான்.
இதயநோய் நிபுணர் டாக்டர் அருள்செல்வன், ஈசிஜி-யில் தொடங்கி எக்கோ, ட்ரெல்மில் நடை என ஒன்றன்பின் ஒன்றாக சோதனைகளை மேற்கொண்டவர், தம்பியையையும் உள்ளே அழைத்தார்.
“சார்.. இது மைல்டுஅட்டாக்தான்… இப்போதைக்கு மாத்திர தர்ரேன், உடனடியா சென்னைக்கு கெளம்பிடுங்க.. எவ்ளோ சீக்கிரம் ரீச் ஆகிறிங்களோ அவ்ளோ சீக்கிரம் உங்க அண்ணனுக்கு நல்லது”
மாரடைப்பின் அறிகுறியை மரணத்தின் வருகையை நாசூக்காக கோடிட்டுக் காட்டியவர் மாத்திரைகளை அங்கேயே உட்கொள்ள வலியுறுத்தினார்.
நன்றிசொல்லி கிளம்பினர் இருவரும்… அதன்பின் நடந்ததெல்லாம் மாயயதார்த்தமெனில் மிகையில்லை.
----
அனஸ்தீசியா மருத்துவர் அருகில் வந்தார்.
“சார் ஒரு ஊசி போடுவேன் கொஞ்சநேரம் மயக்கமாயிருக்கும்.. பயப்பட ஒன்னுமில்ல சரிங்களா “
“சரிங்க சார் “
“எந்தூர் நீங்க”
“விழுப்புரம் சார் “
“விழுப்புரத்திலிருந்தா இவ்ளோ தூரம் மெட்ராஸ்க்கு வரீங்க.. அங்கல்லாம் பெரிய ஹாஸ்பிடல் இல்லீங்களா...”
“ இருக்குங்க சார் , ஆனா கடந்த பத்து வருஷமா நம்ம ஹாஸ்பிடல் தான் அனுவல் உடல் பரிசோதனை செஞ்சுக்கிறேன்.. அதனாலதான் இங்கயே வந்தன்…”
“ ஓ வெரிகுட்... இன்ஜெக்க்ஷன் போட்டாச்சு… அப்படியே படுத்துருங்க… ஓகேவா..”
“ ஓகே சார் நன்றி சார்”
CATHLAB- என்பது இதயநோயாளிகளுக்கான பிரத்யேகமான சிகிச்சைக்கான இடம். இதயத்தின் இரத்தக்குழாய்களில் காணப்படும் அடைப்புகளை, ஆஞ்சியோ முறையில் கண்டறிந்து அதற்குரிய வகையில் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சை மூலமாக ‘ஸ்டெண்ட்’ வைப்பதோ ‘பலூனிங்’ முறையிலோ தேவைப்படின் பைபாஸ் அறுவைச் சிகிச்சையோ... நோயாளியைப் பொறுத்து, சிகிச்சையும் வேறுபடும்.
ராஜேந்திரன் ஞாபகங்களின் பிடியிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தான். கேத்லேப் அறையிலிருந்த அதிகபட்ச பதனக்குளிரால் தலை வியர்வை குறைந்ததிருந்தது. இதயவலியும் தாங்குமளவில் இருந்தது. கண்கள் சொருகி கொஞ்சங்கொஞ்சமாக மயக்கநிலைக்கு பயணப்படுகிறான்.
மயக்கமா... உறக்கமா... கலக்கமா… துலக்கமா… அதீதவெளிச்சம், கூடுதல் குளிர், யாரோ நடக்கிறார்கள்… எவரோ எவரிடமோ எதையோ கேட்கிறார்கள்… இன்னொருவர் பதில் சொல்கிறார். ஒன்றும்புரியாத் தெளிவின்மை. மொழியின் குப்பை.
ராஜேந்திரனுக்குள் ஏதேதோ சிந்தனைகள் .
யார்நீ? நீயென்பது உருவமா அல்லது ஸ்தூல உடலா..? பெயரா... வடிவமா..! நீ ஆடைகளா... பதவியா..? படிப்பா...பணியா..? யார் நீ? அல்லது யார் நான்? அரூப மனசா… ஆத்மா ஜீவாத்மா... பரமாத்மா என்னும் தத்துவமசியா? எந்திரம் போல் உழைப்பவனா? சிந்திக்கும் எந்திரனா? இறப்பென்பது காற்புள்ளியா? முற்றுப்புள்ளியா..? கேள்விகளின் சுழலில் முங்கி மூச்சு முட்டியது ராஜேந்திரனுக்கு..!
INTENSIVE CARE UNIT - என்பது விரிவாக்கமென்றாலும் தன்னந்தனியானச் சின்னஞ்சிறு உலகம்! எல்லோருக்குமங்கே அனுமதியில்லை! தீவிர சிகிச்சைப் பிரிவென்பது உடல்நிலை மிகவும் சரியில்லாத மற்றும் சிறப்பு கவனமோ, ஆதரவோ தேவைப்படும் நோயாளிகளுக்கான சிறப்புச் சிகிச்சை மையமெனப் புரிந்து கொள்ளலாம்.
24மணிநேர மருத்துவர் / செவிலியர் சேவையுடன், வென்டிலெட்டர் , அவசரகாலச் சிகிச்சைக்கேற்ற ஆக்சிஜன், இசிஜி, எக்கோ போன்ற உபகரணங்களின் உடனடிப் பயன்பாடும், நோயாளிகள் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் , முக்கிய மருந்துகளின் இருப்பும் , உயிர்காக்கும் உன்னத பணியை செவ்வனே செய்ய உதவுகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவர்களோடு மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை, நவீனத் தொழில்நுட்பமும் இணைய, மகத்தான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதான் ஐ.சி.யூ-வின் முக்கிய நோக்கமெனலாம்.
ஐசியூ- ஜோதியில் கலந்த இரண்டாம்நாள் காலை ஓங்கி உலகளந்த பெருமானாய் ஒரு மருத்துவர், கூடவே துணை மருத்துவர்கள் கூட்டம்.
“ குட் மார்னிங் மிஸ்டர் ராஜேந்திரன்.. ஹவ் யூ ஃபீல் நவ்..?”
“ பெட்டர் சார்”-சன்னக்குரலில் ராஜேந்திரன்.
நெஞ்சு முதுகு என ஸ்டெதஸ்கோப்பால் சோதித்தவர் , பிளட் சுகர், பிபி சோதனை அறிக்கை பார்த்தார்.
“ நல்லது ராஜேந்திரன் அவர்களே உங்கள் இருதயத்தின் ரத்தக்குழாய் ஒன்றில் இரு அடைப்பு இருப்பதை எங்கள் மருத்துவக்குழு உறுதி செய்திருக்கிறது. தற்காலிகமாய் தங்களுக்கு தீவிரச சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிவீர்கள் என்றாலும் தங்களுக்குப் பைபாஸ் ஆபரேஷன் சிகிச்சை உகந்ததென எங்கள் மருத்துவக்குழுக் கருதுகிறது. அதேநேரம் சிற்சிலச் சோதனைகளுக்குப் பிறகே இதுகுறித்து உறுதி செய்யப்படும் , அஞ்சவேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்றவரின் கோட்வில்லை அவர் பெயர் டாக்டர் மணிக்கண்ணன் என்றது.
---
”அப்பா உங்களுக்கு விசிட்டர் வந்து இருக்காங்க”
முதல் நாளில் அனஸ்தீசியா மயக்கம் சற்றே குறைந்த மாலை நேரம்.
ஐசியூ- வில் பார்வையாளர்களை அனுமதிப்பார்களா..? கேள்வி அவனுக்குள் எழுகையில் ஸ்கிரீனை விலக்கி மெதுவாக படுக்கை அருகே வந்தவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அது ராஜேந்திரனின் இல்லத்தரசி பார்வதி.
“எப்படி இருக்கீங்க”- வினவியவள் விழிகளில் நீர்த்தாரை .
“ஏம்பா அழுவுற .. உன்னோட தாலிபாக்கியம்தான் என்னையக் காப்பாத்திடுச்சே..”
“ நீங்க நல்லபடியா சொஸ்தமாயி வந்தபிறகு குலதெய்வம் மலையனூரம்மா கோயிலுக்கு போகணும் சரியா...”
“ஆகட்டும் .. பூரணமாக் குணமாகட்டும்.. பார்க்கலாம்...“ சரி நீ கவலைப்படாமப் போ. தம்பி… பாப்பாவ... மாப்பிள்ளையை கவல இல்லாம இருக்கச் சொல்லு அம்மா கிட்டேயும் பதமா விவரம் சொல்லு.. பத்தரமா போங்க..” கண்ணீரைத் துடைத்தபடி மெல்ல நடந்து பார்வையில் இருந்து மறைந்தாள்.
உண்மைதான் இயற்கையின் அழைப்பு இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘ போனஸ் வாழ்க்கை தரேன் வாழ்ந்துக்க தலைவா ‘ என மரண தேவதையின் மாயக் குரல்.
‘எதற்காக இந்த மரண ஒத்திவைப்பு தீர்மானம்..? ஏதோ நல்லதுக்காகத்தான் இருக்க வேண்டும்!. இந்த சமூகத்துக்கு நான் செலுத்த வேண்டிய கடன்கள் நிலுவையில இருக்குதோ... every thing for goodsake என்பார்களே... அதுபோல எல்லாமும் நன்மைக்கேவா…’ ராஜேந்திரனின் மனதில் அடுக்கடுக்காய்ச் சிந்தனை வளையங்கள் .
“அப்பா பிபி செக்பண்ணிடவா“ செவிலியின் அழைப்பு எதார்த்த உலகுக்கு அவனை அழைத்து வந்தது .
மனைவி சென்ற சிறிது நேரம் கழித்து பாசப்பறவையான அவன் தம்பி செந்தில் வருகை. மெதுவாக சப்தமின்றி படுக்கையின் அருகில் வந்தவன் அழகுவின் கை விரல்களை வாஞ்சையோடு கோர்த்துக் கொண்டான்.
“எப்படி இருக்கண்ணா...” உணர்ச்சி மேலிடலில் அவன் குரலிலொருத் ததும்பலான நெகிழ்வு.
“நீதான் காக்கும் கடவுளாக கொண்டாந்து சேத்து காப்பாத்திட்டியே.. அண்ணனை மீட்ட சுந்தரபாண்டியன்...”
“கொழுப்பு குறையலையே இன்னமும்”
“கூடப்பொறந்ததாச்சே அவ்ளோ சீக்கிரம் குறையுமா..? மீனாட்சி எங்க வெளியிலயா ஒக்காந்திருக்கு..”
“ஆமா மீனாட்சி… திலீபன்... தாரகன்... மூணு பேரும் வெளியே ஒக்காந்து இருக்காங்க... எல்லாரையும் உள்ள விட மாட்டாங்களாம்... சரிண்ணா... முக்கியமான விஷயம் என்னன்னா...”
“ என்ன… ஹாஸ்பிடல் பில் விஷயமா… ”
“ஆமா… பேசலாமா... ஒனக்கு ஒன்னும் பிரச்னையில்லையே..?
“ஐசியூ வுல இருக்கிறவனுக்கு என்ன.. வெளியிலத் திண்டாடுற ஒனக்குத் தான் எல்லாக்கவலையும்... சொல்லு”
“மீனாவோட கிரெடிட்கார்டில இருந்து 50,000, உன்னோட கிரெடிட்கார்டுல இருந்து நாப்பதாயிரம் அட்வான்ஸ் கட்டியிருக்கிறன்... பிஆர்ஓ சரவணன் சார் கிட்டப் பேசி இருக்கேன். இன்சூரன்ஸ்பார்ம் எல்லாம் எடுத்துக்கிட்டு இன்னிக்கி வரேன்னு சொல்லியிருக்காரு . உன்னோட ஒரு மொபைல் என்கிட்ட தான் இருக்கு...”
“ நல்லது யார் அழைப்பையும் எடுக்காத இப்போ தேவையில்லாம PANIC ஆக்க வேணாம் .திலீபன் கிட்ட பேசு... கொஞ்சம் பயந்திருப்பான் போல...”
“ நானுந்தான் பயந்துட்டேன் ஆனா வெளியே காட்டிக்கல தெரியுமா... டாக்டர் என்னாசொன்னார் தெரீயுமா... GOLDEN HOUR ன்ற சரியான நேரத்துக்கு அவர கொண்டாந்து அட்மிட் பண்ணிட்டீங்க சார்ன்னாங்க”
“தாயுமானவன் தந்தையுமானவனா ஒன்னையப் பாத்திருக்கேன் இப்போ எனக்கு ஆபத்பாந்தவானாவும் ஆயிட்ட..” புன்னகைத்தப்படியே கை கூப்பினான் ராஜேந்திரன். அவன் விழிகளில் நன்றி மின்னும் கண்ணீர் வைரம்.
“பேச்சைக் குறைண்ணா... உணர்ச்சி வசப்படுற நேரமா இது...”
“சரிப்பா.. சாரிப்பா... ஆனால் S O S, I O U போன்ற அப்ரிவேஷனுக்கு எல்லாம் பொருள் விளங்கிய நேரம் இது “
“வுட்டா கதாகாலேட்சேபமே நடத்துவியே... சரி கெளம்புறேண்ணா.. கவனமா இரு… ஒடம்ப பாத்துக்க..”
கவனமாய் இருக்க வேண்டும். இனிமேல்தான் மிக கவனமாக இருக்க வேண்டும். ராஜேந்திரன் மனதோடு பேசினான். புதிய பிரதிக்ஞைகளைப் பதித்தான்.
ஐசியூ வார்டின் ஆச்சரியங்களில் ஒருவர் டாக்டர் ரத்தினவேல் அவ்வளவு சீரியஸான மருத்துவமனையில் புன்னகைப் பூமுகத்தோடு வலம்வரும் அவரைப் பார்த்தால் நோய்களும் பயந்தோடிப் பறந்தோடும்.
“குட் டே சார்..ஹவ் யூ ஃபீல் நவ்…”
“இப்போ பெட்டரா ஃபீல் பன்றன் சார்… நெஞ்செரிச்சலோ இதயவலியோ இல்ல... தலயிலிருந்து ஊத்தன வேர்வையும் நின்னுடுச்சு...”
“அப்புறமென்ன…நீங்க பெர்பெக்ட்லி ஆல்ரைட்…“
“ அதெல்லாம் சர்தான் சார்… எனக்கு என்னதான் ஆச்சு… ஒரு பேஷண்ட்டா இத நான் தெரிஞ்சுக்கலாமில்லையா..?
“ஒய் நாட்..உங்க உடம்பப்பத்தி நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும். எதிர்பாராத் தருணத்தில நாம எதிர்பாராதவை நிகழும் காலம் இது..! எதுவும் நிகழலாம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். YES it's an unpredictable world. Unpredictable Time “ ரத்தினவேல் சாரின் கண்களில் ஏதோ ஒரு வெளிச்சம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசினாலும் குரலில் வலிய உறுதி .
“யெஸ்… அக்ரீட் சார்”
“இந்தச் சூழலில் ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்க்கவே இயலாது. பழகும் குடும்பத்தில... பயணிக்கும் சாலையில... பணி செய்யுற சூழலில... எங்கேயும் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மன அழுத்தத்தோட மாயநிழல். பல நேரங்கள்ல ஸ்ட்ரெஸ்-ன்றது கடுமையான நோய்களுக்கானப் பன்னீர்த்தெளிப்பு.
உங்களுக்கிருக்கிறது ரெண்டு பிளாக் தான் .அதனால ஸ்டென்ட் வைக்க வேணாம். இப்போதைக்கு ரத்தக்குழாய விரிவாக்கின பலூனிங் [Ballooning ] செய்திருக்கிறோம்.”
“பலூனீங்ன்னா..”
“ ஒன்னும் பயப்பட வேணா.. .இரத்தக்குழாய்ப் பாதையை கொஞ்சம் அகலப்படுத்தி ரத்த ஓட்டத்த சீராக்கி இருக்கோம் அவ்ளோ தான் அநேகமாய் உங்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் தேவைப்படலாம். ஆனா இப்போதைக்கு உறுதியா சொல்ல முடியாது. இன்னும் ரெண்டு மூணு டெஸ்ட் எடுத்துட்டு கன்ஃபார்ம் பண்றோம். அதே நேரத்தில நாங்க கொடுக்குற மருந்து மாத்திரைகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. டயட் ஃபுட் மெயின்டைன் பண்ணுங்க.. சரியா..! டயட் உணவு உங்க வெயிட்டை குறைக்கும். டயபடிஸ் கொஞ்சம் கொஞ்சமா ரெடியூஸ் பண்ணி நார்மாலாக்கும் .
‘இரத்தக் குழாய்ல அடைப்பு பத்தி கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க சார்..”
தமனி (Arteries)ந்றது நம்ம இருதய அமைப்பின்படி, இதயத்தில் இருந்து உடலில் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை விநியோகிக்கும் Swiggy Boyன்னு சொல்லலாம். நம் உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களை, ஹார்மோன்களை மட்டும் உயிர் வலியைப் பரவலாக்குவதில் முக்கியப் பங்காற்றுவது தமனிகள்.
தமனிகள் இதயத்திற்கு வெளியே ரத்தம் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடுபவை ஆனா. VEINSன்ற ரத்தநாள நரம்புகள், இதயத்துக்கே ரத்தம் எடுத்துசெல்பவை. அப்போ அதையெல்லாம் எப்படி ஒருத்தரு பாதுகாக்கனுமுன்னு புரிஞ்சுக்குங்க.
இருதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு BLOCK என்பதெல்லாம் இப்போ சர்வ சாதாரணமானக் குறைபாடா இருக்கு சார். அது மரண தண்டனை இல்லைன்றத புரிஞ்சுக்கணும்.
உங்கள் நடைமுறை வாழ்க்கையில் நீங்க மேற்கொள்ளக்கூடிய சில மாற்றங்களை Lifestyle changes சரியாக் கடைபிடிச்சா இந்த குறைபாட்டை முழுசுமே சரி செய்யலாம்.
சொன்னேனில்லையா... தமனின்றது உடல் முழுக்க இரத்தத்தக் கொண்டுப் போகிற குருதிப்பாதை. இந்தப் பாதைல கொழுப்பு அல்லது வேறு ஏதோ ஒன்னால அந்த தமனி சைஸ் குறுகி ரத்தப்பயணம் தடைபடறதத் தான் அடைப்புன்றோம். அப்படி இரத்தக் குழாய்ல அடைப்பு ஏற்படும்போது இதயத்தோட செயல்பாட்டில பிரச்சினை வருது... புரியுதுங்களா...”
“நல்லாவேப் புரியுதுங்க சார்... ஆனா LIFESTYLEந்னு சொன்னீங்களே அதக்கொஞ்சம் வெளக்க முடியுமா..?”
“பெருசா ஒன்னும் இல்ல சார்... உடல் எடையை குறைக்கிறது... மனப்பதட்டமோ மன அழுத்தமோ இல்லாம இருக்கிறது. போதுமான உடற்பயிற்சி… முக்கியமா நடைபயிற்சி.. சரிவிகித சத்தான உணவுன்னு வாழ்ந்தாலேப் போதும். இவ்ளோ தான் நம்ம லைப் ஸ்டைல். இதுலத்தான் இருக்கு நம்ம நலம். உங்களுக்கு புரியும்னு நம்புறேன் “ ரத்தினவேல் சாரின் கண்ணாடியில் இருந்து இரண்டு ஆனந்த விழிகள் நம்பிக்கைத் தூவிப் புன்னகைத்தன.
‘வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியில்’ சுசீலாம்மா ராஜேந்திரனின் செவி அருகே பாடினார்.
நோயல்ல இது இயற்கை தரும் எச்சரிக்கை. தோணும் போதெல்லாம் சாப்பிடாதேடா செல்லம். சரிவித உணவை சரியான நேரத்துக்கு சாப்பிடு... மன இறுக்கம் தவிர்… கோபம் குறை… மயிர் பிளக்கும் விவாதங்களில் மணித்துளிகளை கரைக்காதே… முக்கியமாய் ..முகநூல் குப்பையைக் குறை..! ஆழ்மனசுக்குக் கட்டளையிட்டான் ராஜேந்திரன்.
இந்த நாள் அவனைப் பொறுத்தவரை புதிய நாள். காலை 8 மணிக்கு ரத்தினவேல் எனும் நற்காற்று அறைக்குள் வந்தது .
“ மிஸ்டர் ராஜேந்திரன் நேற்று எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் பார்த்தேன், ஹார்ட் டிஷ்யூஸ் உங்களுக்கு ரொம்ப வீக்கா இருக்கு. இப்போ பைபாஸ் சர்ஜரி செய்கிறது பேஷண்ட்டுக்கு உதவாது. பேஷண்டுக்கு பெனிஃபிட் இல்லாத எதையும் நாமேன் முயற்சிக்கனும். அதனால ஆபரேஷன் செய்யணுமா… மருந்து மாத்திரையிலேயே உங்க ஹார்ட் பிளாக்கை குணப்படுத்தலாமேன்னு என்று எங்க டாக்டர்ஸ் டீம் நம்புது. So..” ஷண நேர மவுனம் . டாக்டரின் முகத்தையே பார்த்தான் ராஜேந்திரன்.
“So உங்களுக்கு இப்போதைக்கு ஆபரேஷன் பண்ணல.. இன்னைக்கே டிஸ்சார்ஜ்-ம் செஞ்சுடுவோம் சரிதானே... ராஜேந்திரனுக்குள் பெரிய உணர்வுகள் ஏதும் எழவில்லை அறுவை சிகிச்சைக்கு தயாராகவே இருந்தவனுக்கு சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.
“நல்லது சார் .நன்றி!”
புயல் வெளியேற செந்திலும், மீனாவும் கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்தனர்.
டிஸ்சார்ஜ் ஆனாலும் சார்ஜ் இருக்கே.. மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்த தயாராகிக் கடனட்டையோடு வெளியேறினாள் மீனாட்சி .
மெல்லப்படுக்கையிலிருந்து எழுந்த ராஜேந்திரன் பயணத்துக்குத் தயாராக, சில நொடியில் உள் நுழைந்தார் மருத்துவர் மணிக்கண்ணன். உடன் தம்பி செந்தில் மட்டும்.
“குட்மார்னிங் மிஸ்டர் ராஜேந்திரன். டாக்டர் ரத்னவேல் டீடெயில்ஸ் சொல்லி இருப்பாரே. மெடிசின்ஸ் எழுதித் தரேன். பத்து நாள் கழிச்சி ரிவியூக்கு வாங்க”
“ ஓகே சார்… ஏதும் கண்டிஷன் உண்டா..?”
“ நிச்சயமா... நிறையவே இருக்கு .சொல்றேன்.
“டெய்லி முடிஞ்ச வரைக்கும் நடங்க... மெதுவாச் சீரான வேகத்தில் நடங்க.. வாக்கிங் ஷூ யூஸ் பண்ணி நடக்கிறது நல்லது. நிறையத் தண்ணீர் குடிங்க... டயட் ஃபுட் கண்டிப்பாக மெயின்டன் பண்ணனும். நடக்கிறப்ப இன்னொருத்தரக் கம்பேர் பண்ணி நடக்காதீங்க... உங்களால முடிஞ்ச வரைக்கும் நடங்க... ஆயில் புட் குறைக்கணும்… எக் ஒயிட் மட்டும், குழம்பு மீனும், குழம்பு சிக்கனும் கொஞ்சமா சாப்பிடலாம். பழங்கள் சுண்டல் எடுத்துக்கலாம். சாப்பாட்டை மூன்று வேளைக்குப் பதிலா அஞ்சு வேளையா பிரிச்சு எடுத்துக்கறது நல்லது. கார்போஹைட்ரேட் குறைச்சு புரோட்டின், ஃபைபர் நிறைய எடுத்துக்கணும், கொலஸ்ட்ரால் அயிட்டம் கொறைக்கணும். செல விஷயமெல்லாம் கூடவே கூடாது. ஆல்கஹாலை மறந்துடுங்க… ஸ்மோக்கிங் ஹாபிட் இல்லை தான ..நல்லது! எங்களோட மருந்துகளாலேயே உங்க இதய அடைப்பை கறச்சிடலாம்னு நம்புறோம். குட் லக் டேக் கேர்”
“தேங்க்யூ சோ மச் சார் ..உங்களோட கைராசி தான் என்னோட உயிரை காப்பாத்திக் கொடுத்திருக்கு..!”
“ ம்ம் அப்படியா..” என்று தம்பி செந்திலைப் பார்த்து விட்டு புன்னகைத்தபடி கிளம்பினார் டாக்டர் மணிக்கண்ணன் .
“கெளம்புவோமாண்ணா..?” தம்பி செந்திலின் பாசக்குரல்.
இழுவைப் பெட்டியை இழுத்துக் கொண்டவன், பைல் மற்றும் மருந்துப் பையை மீனாட்சியிடம் கொடுத்தான்.
“அண்ணா… வீல்ச்சேர் சொல்லட்டுமாண்ணா..?” மீனாட்சியின் குரலில் அக்கறைக் கூடிய நிஜமான பாசத்வனி .
“இல்லம்மா.. வேணாம். மெதுவாக நடக்கிறேன்...”
வார்டில் இருந்த பணியாளர்களிடம் நன்றி சொல்லி, லிப்டில் இறங்கி தரைத்தளம் இறங்கினான்.
காரோடு காத்திருக்கிறான் செந்தில். அதே வாகனம்; அதே ஓட்டுநர்; அதே துணைவி மீனாட்சி.
மூணுநாளைக்கு முந்தி பகலில் உயிரைக் கையில் பிடித்தபடி பயணித்த ராஜேந்திரன் இப்பொழுது மருந்து மாத்திரைகளைக் கையில் பிடித்தபடி பயணிக்கிறான். ஆம் இன்றும் அவன் உயிரோடு நலமுடன் இருக்கிறான்.
மருத்துவமனையின் இடதுபுறம் திரும்பி கிண்டி செல்லும் சாலையில் பயணிக்கிறது வாகனம். மாலைச்சூரியன் பிரகாசமாய் ஒளிர்ந்தான். தாம்பரம்... கூடுவாஞ்ச்சேரியெல்லாம் எங்கள் காருக்குப் பின்னால்…
“டீ சாப்பிடலாமா”
செங்கல்பட்டு நகரம் தாண்டி சாலையோர தேநீர் விடுதியொன்றின் முன் நின்றது கார். அது தேநீர் விடுதி மட்டுமல்ல... சிறு உணவுகள், பேக்கரி வகைகள் என அது இதுவென பலவும் கிடைக்குமிடம்.
“உனக்கு சுண்டல் வாங்கிடவாண்ணா...?
“வேற என்ன இருக்கு...?”
“மொளகா பஜ்ஜி, முட்டை பஜ்ஜி சிக்கன் பக்கோடா...”
“மூணுத்திலேயும் ஒவ்வொரு பிளேட் சொல்லு... டேஸ்ட் பாத்துடுவோம்”
திடுக்கிட்டுத் திரும்பினாள் மீனாட்சி...!