புனிதா பார்த்திபன்
தமிழ்நாடு
புனிதா பார்த்திபன்
தமிழ்நாடு
வழியறியாது கால் போன போக்கில் சென்று எங்கோ ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான் அரவிந்த். பிடிக்காமல் படித்த படிப்பு, அதன் வழியே கிடைத்த பணியில் மட்டும் எப்படி பிடித்தம் தரும்?
மூன்று முறைகள் செயல்திறனில் குறைபாடு உள்ளது என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வேலையை விட்டே நீக்கியிருந்தனர். அவனும் அப்பணியைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தான், தூங்காமல் கற்றுப் பார்த்தான். என்ன முயன்றும் இந்த ஐடி நிறுவனங்களின தொழில்முறை அவன் மூளையில் ஏறவேயில்லை. நடப்படும் எல்லா மரங்களும் ஒரே பலனைத் தந்திடுமா? அவன் முடங்கிப் போனான்.
'பத்து லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சதுக்கு, எங்கள நடுத்தெருவுல நிறுத்திட்ட' எனக் கசப்பை உமிழ்ந்தார் அப்பா.
‘எனக்கு வரலப்பா’ என எத்தனை முறைகள் மனதுக்குள் கத்தித் துடித்திருப்பான்.
இங்கு, குழந்தைப் பருவம் கடந்ததுமே, மரமோ, மனிதனோ கல்லடி பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பழம் நிச்சயம் விழ வேண்டும். உடைந்து போய் ஓய்ந்து அமர்ந்தவனைச் சுற்றி ஏதேதோ எதிர்மறை எண்ணங்கள் எட்டி உதைத்தன.
காலடிச் சத்தமொன்று அருகில் கேட்டதில், நிமிர்ந்து பார்த்தான். ஒருவர் கை நிறைய அரிசியை மரத்தடியில் கொட்டிச் சென்றார். பாய்ந்து வந்த கோழிக் கூட்டம் கொத்த ஆரம்பித்தது. முதலில் வந்தவையும், முண்டித் தள்ளியவையும் வாய் நிறைய அள்ளின. கொஞ்சம் பலமற்றவைக்கு இடம் கிடைக்கவில்லை. அவன் தன்னை அவற்றோடு ஒப்பிட்டுக் கொண்டான்.
கோழிகள் முண்டிக் கொண்டு உண்டதில், இரை நாலா பக்கமும் சிதறியது. அவ்வழியே கடந்து சென்ற பெரியவர் ஒருவர், பின் வரிசையில் இரைக்காகப் போராடிய கோழிகளருகே வந்தார்.
"குருட்டுக் கோழிங்களா! எத்தனை இரை சிதறிக் கிடக்குது? அதக் கொத்த வேண்டியது தான. கிடைக்காததுக்கு சண்ட போட்டு வெறும் வயித்தோட போகப் போறீங்க. கிடைச்சத எடுத்துக்கத் தெரியாத மக்குகளா!” என்றபடி அக்கோழிகளை சிதறிய இரையின் பக்கம் இழுத்து விட்டுச் சென்றார்.
அவர் வார்த்தைகள் அவனுள் சுருக்கெனத் தைத்தன. வாய்ப்புகள் சிதறிக் கிடக்கும் இக்காலத்தில், தானும் ஒரு குருட்டுக் கோழி என்பது அவனுக்குப் புரிந்தது. சிதறிக் கிடந்த இரைகள் இப்போது அவன் கண்களுக்கும் தெரிந்தன.