மலர்மதி
சென்னை
சென்னை
உஷா ரவீந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். காதல் என்றால் கண்மூடித்தனமான காதல். தன் காதலை அடைய அவள் எந்த அளவுக்கும் போகத் துணிந்துவிட்டாள்.
அவள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.
ரவீந்தர் கொடுத்த ஐடியாபடி இன்றிரவு பணம், நகையுடன் வீட்டை விட்டு அவனுடன் ஓடிப்போக முடிவெடுத்துவிட்டாள்.
அதே நேரம் –
ரவீந்தர் தன் நண்பன் முத்துவுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“உண்மையா நீ உஷாவை மணந்துக்கொண்டு வாழப்போறியா?” என்று கேட்டான் முத்து.
“அடப்போடா பைத்தியக்காரா… அவள் கொண்டுவரும் நகை, பணம் முடிகிறவரையில் அவளுடன் ஜாலியா இருந்துட்டு, கம்பியை நீட்டிடமாட்டேன்?” என்று சொல்லி சிரித்தான் ரவீந்தர்.
“உனக்கு கொஞ்சங்கூட கடவுள் பயம் இல்லையா?”
“பயந்தால் அனுபவிக்க முடியாது தலைவா!”
“அடப்பாவி!”
அன்றிரவு பெட்டியுடன் ரவீந்தர் சொன்ன இடத்தில் காத்திருந்தாள் உஷா.
ரவீந்தர் ரெடியாகி சீட்டியடித்தவாறே தன்னை மறந்த நிலையில் உஷாவின் வாழ்வை நாசப்படுத்தும் குரூர எண்ணத்தில் மிதந்தவாறு நடந்தான்.
யாருமற்ற சாலையை அவன் கடக்க முயன்றபோது அசுரவேகத்தில் வந்த லாரி ஒன்று அவன் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே உயிர் பறிபோனது.
சாட்சி ஒன்றும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்ட லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் பறந்துவிட்டான்.
இதையறியாத உஷா தன் கண்ணாளனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.