ஷோபனா நாராயணன்
தமிழ்நாடு
ஷோபனா நாராயணன்
தமிழ்நாடு
இளங்காலையின் மென்வெளிச்சம் கண்களுக்குள் பரவத்தொடங்கிய போதுதான் படுக்கையின் மென் ஈரம் உறைத்தது. ஓ… இன்றைக்கு படுக்கையை நனைத்திருக்கிறேன். எத்தனை மாதங்களுக்குப் பிறகு இது… யோசனையை ஓட்டியவாறு எழுந்து போர்வை, பெட்ஷீட்டுடன் கழிவறைக்குள் நுழைந்தேன். கண்ணாடியில் தெரிந்த சோபையான முகத்தினை ஒரு நிமிஷம் பார்த்தேன். மறுபடி கவலை பீடிப்பதற்குள் மேடிட்ட வயற்றினை தடவிக்கொண்டு பல்துவக்கத் துவங்கினேன்.
சமீபமாகத்தான் இந்த படுக்கையை நனைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. ஏதோ கனவுகள் குழப்பங்கள் கலந்த மயக்கநிலை மாதிரி இருக்கும். தவறாமல் அத்தை வருவாள். ஏதாவது கத்துவாள். ஊர் பார்க்க சத்தமாக… ஏதேதோ கலவையான குரல்கள்.. கைகளை காட்டிக் காட்டி ஏதேதோ சொல்கிறார்கள். நான் தலைகுனிந்தபடி உள்ளாடையுடன் நிற்பேன். சட்டென உறக்கம் விழிக்கும் நாளில் படுக்கை நனையும். சில நாட்களில் பாட்டி வருவதாய் இருக்கும். தலையை தடவுவாள். அம்மாதிரி கனவுகளில் இடையில் விழிக்கவேண்டிய சிரமம் எழாது.
காலையில் இப்படி கனவு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் எப்படி. இந்த வாரம் அட்மிட் ஆகவேண்டும். இரண்டு மூன்று நாட்களில் குழந்தையை பார்த்து விடலாம் என்னும் போது பரபரப்பாக மகிழ்வுத்துள்ளலாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் நான் மட்டும் இப்படி பரிதவிப்பாய் இருக்கிறேன்?
எந்திரத்தனமான யோசனைகளுக்கிடையே டீயுடன் ஆதவ் வந்தமர்ந்தான். எனக்கும் நீட்டினான்.
என்ன மேடமுக்கு காலைலயே யோசனை?
ஆதவ்..ப்ளீஸ் சொல்லுங்க. குழந்தை யார் மாதிரி இருக்கும்?
ஆரம்பிட்சுடியா? சுமி.. இதோட எத்தனாவது தடவை கேக்கற இதை. யார் மாறி இருந்தா என்ன?
கேக்கறேன்ல.சொல்லக்கூடாதா?
மாட்டேன். ரெண்டு நாள் பொறு தெரியும்.
எழுந்து போய்விட்டான். ஒருமுறையாவது என்னை மாதிரித்தான் இருக்கும். உன்னை மாதிரி இருக்காது என்று சொல்லக்கூடாதா இவன். மெல்லிய பெருமூச்சோடு அலுவல்களை கவனிக்க எழுந்தேன்.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தக்கவலை.
முதலில் ஒன்றிரண்டு போட்டோக்களில் தான் என்னை பார்க்க அப்படித் தோன்றியது. ச்சே ச்சே இருக்காது . போட்டோ எடுத்தவன் சரியா எடுக்கல என்றிருந்தது. அதான் கண்ணாடி பார்க்கிறோமே தினமும். அப்படி இருக்காது என்றிருந்தது. கொஞ்சம் முடி முன்மண்டையில் கொட்டியிருக்கு. அதான் காரணம் என்றிருந்தது. அப்புறம் கொஞ்சம் நம்பித்தான் ஆகணும்னும்போது அம்மாவிடம் போன நாளும் கேட்ட கேள்வியும் இப்பவும் ஞாயபகம் இருக்கு.
ம்மா.. நான் அத்தை மாதிரி இருக்கனா பாக்க?
அம்மா இல்லேன்னு சொல்லணும்னு அத்தனை வேண்டுதல் வேறு மனசுக்குள்.
அத்தனையும் போட்டுடைப்பது போல அம்மா உடைத்தாள். ஆமாம். நீ உங்கத்தை மாதிரித்தான் இருப்ப. முன்ன அவ்ளோ தெரில. வயசாக வயசாக அப்படியே சுந்து அத்தை ஜாடை வருது என்றாள்.
அன்றைக்குத்தான் குழந்தைப்பருவத்திற்குப் பிறகு அத்தனை வருடம் கழித்து படுக்கையில் சிறுநீர் கழித்தது..
இப்போது போல் இருக்கிறது. அந்த நாள்..
யோசித்தபடியே நடந்து வந்த அழகில் கண்ணாடி முன் வந்து நின்றிருந்தேன். மறுபடி என் முகம்
அதே நிறம்.. அதே நெற்றி… அதே கண்.. தாடை மட்டும் அம்மா..மூக்கு அப்பா..
ச்சை. இதென்ன உடற்கூராய்வு போல. நான் எவரெவரின் மிச்சம் என முகக்கூறு ஆராய்ச்சி. இது நான்தான். நானேதான். கோடுகளை எல்லாம் அழி.
முகத்தில் சில்லென்ற தண்ணீரைக்கொண்டு அடித்துக் கழுவினேன். கொஞ்சம் இதமாக இருந்தது.
அப்படி இப்படி என மனதைச் செலுத்தி அறை நாளினைக் கடந்தாயிற்று. அம்மா இடையில் இரண்டுமுறை வந்து பேச்சுக்கொடுத்தும் எதிலும் மனம் செல்லாமல் தவிப்பாக இருந்தது.
என்னாச்சும்மா. உடம்பு ஏதும் சரியில்லையா சுமி என்றாள் அம்மா. எதாவது அசெளகரியமா இருக்கா சொல்லு. கஷாயம் எதும் வேணுமா? இப்படி என்னென்னவோ..
ஒண்ணும் வேண்டாம்மா என்று சொல்லியும் விடாது சுத்தி வந்து கொண்டிருந்தாள்.
சுமி.. என்னாச்சுடா. எங்கிட்ட சொல்லக்கூடாதா என்றாள் மறுபடியும்.
இல்லம்மா.. என்னவோ யோசனை. குழந்தை யார் ஜாடைல பொறக்கும்மா?
என்னடி இது? உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? எத்தன தடவை எல்லாரையும் இதை கேப்ப? என்ன உனக்கு இதில? நல்லபடியா பிரசவம் ஆகி தாயும் புள்ளையும் பொழைச்சு வரணுமேன்னு நானே கவலைல இருக்கேன். நீ என்னடான்னா…
ப்ச்.. சொல்லுமா.
யார் மாறி இருக்க போகுது? உன்ன மாறியோ மாப்ள மாறியோதான?
அப்ப நான் மட்டும் ஏன்ம்மா அத்தை மாதிரி இருக்கேன்?
அம்ம கொஞ்ச நேரத்திற்கு பேசவில்லை. அமைதியாக இருந்தாள். கைகளை ஆதூரமாகப் பற்றிக் கொண்டாள். சுமி.. நீ இன்னும் அதை மறக்கலையா? இன்னுமா வயத்துப்பிள்ளையோட இதை யோசிச்சிட்டு இருக்க? அதையெல்லாம் தாண்டி வரணும் டா கண்ணு என்றாள்.
ம்மா.. வளரும் போது பெருசா எதும் தெரில்லம்மா. இப்ப தினம் தினம் கண்ணாடி பாக்கற போதும், சும்மா ஒரு செல்பி எடுத்தாலும் எந்த போட்டோ பாத்தாலும் என் ஜாடை அத்தையா இருக்கறத பாக்கறப்ப ரொம்ப தாக்கமா இருக்கும்மா என்றேன்.
உனக்குத் தெரியுமாம்மா, நான் என் கல்யாண ஆல்பத்தைக்கூட பாக்கறதில்ல. ஒளிச்சு வைச்சிருகேன். ஆதவ் எத்தனையோ தடவை கேட்டுட்டார். ஏன் நம்ம போட்டோவ பிரேம் பண்ணி மாட்ட்க்கூடாதுன்னு. கஷ்டமா இருக்கும்மா என்று தேம்பத்துவங்கினேன்.
சுமி.. என்று அம்மா ஆறுதலாய் முதுகை தடவினாள். விட்டுடணும் சிலத.. என்று நகர்ந்துவிட்டாள்.
இரண்டு நாட்களும் நாளொரு சிந்தனையும் பொழுதொரு கவலையுமாய் அழகாக நகர்த்தி கொண்டிருந்தேன்.
என்ன சதா சிந்தனை.ஒண்ணும் ஆகாது பயப்படாத என்ற ஆதவிடம் நாம ரொம்ப வெறுக்கற ஒரு விஷயத்த தவிர்க்கவே முடியாத விஷயமா காலம் நம்மகிட்ட தரும்போது என்ன பண்ணனும் ஆதவ் என்று தத்துவமாய்க் கேட்டேன்.
அத்தை மாதிரி தெரியக்கூடாது என இதுவரை என்னென்ன நான் செய்தேன் என்று கண்மூடி யோசித்தேன். பொட்டு ஸ்டைலை மாத்துவது, தலையலங்காரத்தை மாற்றுவது, குறிப்பிட்ட கோணல் பாணியில் செல்பி என எனது குரங்குசேஷ்டைகளை எண்ணி புன்னகைக்கக்கூட செய்தேன்.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நாள். அட்மிட் ஆக போய்க்கொண்டிருக்கிறேன். கண்களை மூடிக்கொண்டால் அத்தை வருகிறாள். தலையைக் குலுக்கிக் கொண்டேன். பலனில்லை. சடசடவென ப்ரவாகமாய் எண்ணங்கள். எத்தனை விஷயங்களைத் தாண்டியும் ஏன் மனம் அதில் திரும்பத்திரும்ப சுழல்கிறது என கேட்கும் நேரம் அம்மா விஷ்ணு சஹஸ்ரநாமத்தை துவங்கியிருந்தாள். அது என்னை என்னிடமிருந்து பிரித்து அத்தையின் வீட்டிற்குள் தள்ளியது. அங்கு நான் எட்டிப்பார்க்கிறேன். அத்தை அதிதீவிரமாய் ஸ்ரீராம ராமேத்தி என்றிருந்தாள்… மெல்ல நடந்து வீட்டிற்கு வெளியில் வருகின்றேன். அப்போது தற்காலத்திலிந்து விடுவித்துக் கொண்ட எனக்கு ஆறு வயது.. வெள்ளை ப்ராக் சகிதம் தூக்க கலக்கத்தில் ஒரு குட்டி பஞ்சுப்பொதி போல இருக்கின்றேன்.
சர்ர்ர்ர்ர்ர்க்க்க்… மருத்துவமனை வந்தாயிற்றா.. தற்காலத்திற்குள் மீண்டும் பொறுத்திக் கொள்வது எத்தனை பாதுகாப்பாக இருக்கின்றது..
மெல்ல இறங்கு சுமி..பாத்து, பத்திரம் போன்ற வார்த்தைகள் தான் எத்தனை வெதுவெதுபானவை.. பாப்பாவ உள்ள விடுங்க டீச்சர். பாவம் சின்னப்புள்ள என்று அன்றொலித்த குரல்களைப் போலவே..
என்னைச் சுற்றி பம்பரம் போல் ஆதவும், ஏக பிராத்தனைகளுடன் அம்மாவும் சூழ்ந்திருக்க நான் மட்டும் மறுபடி மறுபடி பொள்ளாச்சியின் அந்த குறுகிய கிராமத்தெருவில் குளிர்காலையில் மிதந்தபடி இருந்தேன்.
பாட்டியின் ரசம் நினைவில் வர நாவும் கண்களும் ஒரு சேர சுரந்தது. அன்றும் பாட்டி ரசம் தான் வைத்துக்கொண்டிருந்தாள். வீட்டு வாசாலில் எழுந்த கூச்சலான கலவையான சத்தங்கள் அவளை அவளது கதகதப்பான சமையலறை கித்தான் சாக்கில் இருந்து வெளி வரச் செய்திருந்தது..
பேஷண்ட்ட கூட்டிட்டு வாங்க.. நர்ஸ் வந்து நின்றதும் மெல்ல இடுப்பைப் பிடித்து எழுந்து மெல்ல நினைவுக்கூட்டிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.
முதல் பிரசவமா..பயம் வேணாம் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சிரித்த அந்த இளம் நர்ஸின் முகத்தைப் பார்த்து ஒரு கணம் இவள் யார் ஜாடையாய் இருப்பாள்? ஒரு வேளை இவளுக்கும் அவள் அத்தை ஜாடையா என்று குழம்பினேன்.
விறுவிருவென குறித்த படி அலுவல்கள் நடைபெற, அறுவை அரங்கில் இருந்தேன். சில்லென்ற அறையில் சுற்றும் முற்றும் மருத்துவர் குழு சூழ, சுமித்ரா ச்சீர் அப்.. சீக்கிரம் பேபியை பார்க்கலாம் என புன்னைகத்தவாறே என்னைப் புரட்டி மரப்பு மருந்தை தண்டுவடத்தில் செலுத்தினர். அது ஏன் மறப்பு மருந்தாக இருக்கவில்லை என்றிருந்தது.
பின்னர் அவர்கள் மருத்துவரானர்கள் அவ்ர்கள் வேலையை துவங்கினார்கள். நான் மெல்ல அரை மயக்கத்தில் பஞ்சுப்பொதியானேன். ஆறுவயது சிறுமியானேன்.
வெள்ளை கவுன்..பனிக்காலை.. தூணருகில் அழுதபடி நிற்கும் பாட்டி. அத்தையின் ஸ்ரீராம ராமேத்தி..
கலையும் அரைத்தூக்கத்தில் வீட்டு வாசலில் இருக்கும் பாத்ரூமிற்குள் நுழைந்து இடுப்பளவுள்ள தண்ணீர் தொட்டியில் முகத்தைப் பார்க்கிறேன். அதிர்ஷ்டவசமாக அது அன்று அத்தையைப்போல ஜாடையில் இல்லை. அருகில் இருக்கும் முற்றத்தொயொத்த பள்ளத்தில் இறங்கி பல் துலக்க வேண்டும். முந்தய நாள் அங்கு கண்ட பூரான் என் தூக்கதின் இடுக்கிலும் வர மெல்ல பயத்தில் முற்றத்தில் இறங்காமல் தொட்டிக்கு அருகில் அமர்ந்து கொட்டவியுடன் சிறுநீர் கழிக்கத்துவங்குகிறேன். திடீரென அத்தையின் குரல். அது ஸ்ரீராம ராமேத்தியல்ல..
அய்யோ அய்யோ அய்யோ..என்னத்த பண்ற.. கழுத. மடியா குளிக்க வெந்நீர போட்டுவச்ச அது இருக்கற அண்டாக்கிட்டயா அசிங்கம் பண்ணுவ? இதைத்தான் சொல்லித்தந்தாள உங்கம்மா? என தரதரவென இழுத்து வந்து பாத்ரூம் வெளியில் தள்ளினாள். திகைப்பில் நான் அழத்துவங்க, பாது சிறுநீர் கழித்துவிட்ட ப்ராக்கை கழட்டி எறிந்துவிட்டு உள்ளாடையுடன் தெருவில் தள்ளினாள்.
நான் கூசிப்போனேன்.. அம்மா அப்பாவின் மீது கோபமும் இய்லாமையில் அழுகையுமாய் நின்றேன். குளிரில் உடல் கிடுகிடுக்க… அழுகையும் அவமானமுமாய் நின்றேன். என் முன் நின்று கத்தத்துவங்கினாள்.
இனி எப்ப நான் மடியா வெந்நீர் போட்டு குளிச்சு பூஜை முடிச்சு சாப்ட்டு ஸ்கூல் போக முடியும்? உனக்கு அறிவில்ல? இதல்லாம் சொல்லித்தராம என்னத்த பண்றா உங்கம்மா? நல்லா வளர்த்திருக்கா பொண்ணை என்று பிசாசு போல மாறியிருந்தாள் அத்தை.
அந்த ஊரும் என்னைப் போலச் சின்னது. சின்னச் சின்னத் தெருக்கள் சின்னச் சின்ன வீடுகள், சின்னசின்னதாய் கடைகள்.. வாசல் வந்தால் கம்பீரமாய் நிற்கும் மலை மட்டும் பெரிது..அந்த ஊர் மக்கள் மனது போல.. ஒரு குரலுக்கு ஓடி வந்துவிடும் கிராமம்.
ஏங்க டீச்சர் என்னதிது பாப்பா என்ன பண்ணிடுச்சுன்னு இப்படி திட்றிங்க? பாப்பாவ உள்ள விடுங்க டீச்சர், பாவம் சின்னப்புள்ள, விடுங்க டீச்சரே, அம்மா அந்த புள்ளைய உள்ளவுடு நீ மொதல்ல, அதுக்கொரு துணியக்குடுங்க டீச்சர் தப்புங்க டீச்சர் இது, என்று சகல திசைக் குரல்களையும் முகம் பார்க்க திராணியற்று பாட்டி வருவாளா என வீட்டுவாற்படியை பார்த்து தேம்பிக்கொண்டிருந்தேன். சததம் கேட்டு ஓடி வந்த பாட்டி அத்தையின் கத்தலை பார்த்து மிரண்டு போனாள்.
விடு சுந்தரா.. பாவம் அவ தெரியாம பண்ணிட்டா, நான் வெந்நீர் போடறேன் மணியாறந்துங்கறேல்ல நீ போ என விதமாய் மன்றாடினாள். அத்தையின் ஸ்ரீராம ராமேத்தி எங்கோ ஒளிந்து கொண்டது. காளியாகியிருந்தாள். போம்மா நீ என்று கத்தினாள்.
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுந்து கொண்டே இருக்கிறேன். ஊர்திரும்பும் வரை.. அப்பாவின் விரல்களை பற்றியவாறு நடக்கும் போது ஊர்க்கண்கள் மொத்தமும் மேலே ஊறுவது போல இருந்தது.. அந்த பூரானைப்போல…
இனிய என்ன ஆனாலும் இந்த அத்தையின் முகத்தில் விழிக்கவே கூடாது என சபதம் கட்டிக்கொள்கிறேன்…
யாரோ சட்டென கன்னத்தை தட்டுகிறார்கள்.. மெல்ல அந்த கிராமத்தை விட்டு அதன் குறுகிய தெருவினை விட்டு, மெல்ல அப்பாவின் கையை விட்டு கண்ணைத்திறக்கிறேன்..
சுமித்ரா சுமித்ரா..இங்க பாருங்க.. இட்ஸ் அ கேர்ள் என்கிறார்கள்.
நான் கம்மிய குரலில் கேட்கிறென்.
டாக்டர்.. குழந்தை அத்தை ஜாடையில் இல்லை தான?
******