எம்.சங்கர்
தமிழ்நாடு
தமிழ்நாடு
“சிவகாமி” என்று அலறிய குரலிலிருந்தே சிதம்பரத்தின் கோபம் உச்ச நிலைக்கு ஏறிவிட்டது என்று புரிந்துவிட்டது அவர் மனைவி சிவகாமிக்கு. அவரது கோபத்திற்கான காரணத்தை ஓரளவு யூகித்து 11 மணிக்கு அவருக்குத் தரவேண்டிய குளிர்ந்த மோரை 11:30-க்கு கொண்டு வந்து அவர் முன்னால் நின்றாள்.
“நீ இந்த வேலக்காரங்களுக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுத்து கெடுத்து வச்சிருக்க. 11 மணிக்குத் தரவேண்டிய மோரை தராமல் வெளியில போயிட்டா இந்த சமையக்காரி...”
“இல்லீங்க நான்தான் அவள மாவரைக்க வெளியில அனுப்பிச்சேன். அவகூட அய்யாவுக்கு மோரக் கொடுத்துட்டு போறேன்னுதான் சொன்னா. நான் கொடுக்கறேன்னு சொல்லி அனுப்புச்சேன். என்னோட மிஸ்டேக்குதான்”
“நேத்து ராத்திரி நான் மீட்டிங் முடிச்சுட்டு லேட்டா வரேன்… வாட்ச் மேன் கேட்டத் திறந்து வச்சுட்டு தூங்கிகிட்டு இருக்கான்.”
“அவனுக்கு ஹை ஃபீவர்.. நான்கூட வீட்டுக்கு போகச்சொன்னேன்… அவன்தான் அய்யா வந்ததும் போறேன்னான். பாவம் தூங்கிட்டான் போல”.
“இப்படியே நீ இவங்களுக்காக வக்காலத்து வாங்கிவாங்கி அவங்க நல்லாக் கண்டுகிட்டாங்க. இத பாரு சிவகாமி இவங்கள எல்லாம் வைக்கற இடத்துல வைக்கணும் இல்லேன்னா தலைக்கு மேலே ஏறிடுவானுக.”
“பாவங்க அவங்களும் மனுஷங்கதானே... கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்துக்கலாமே “.
“எனக்கு நீ சொல்லித்தரையா? சரி சரி இன்னிக்கு சாயங்காலம் முக்கியமான மீட்டிங் இருக்கு. பெரிய ஆளுங்கள்ளாம் வராங்க. பேசுறதுக்குத் தயார் பண்ணனும். பிஸியா இருப்பேன். கரெக்டா ஒரு மணிக்கு லஞ்ச், 3 மணிக்கு காஃபி, 5 மணிக்கு ட்ரைவர் வரணும். வரலேன்னா எல்லாரையும் சீட்டக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவேன். அப்பவும் நீ இந்தச் சோம்பேறிங்களுக்காக பரிஞ்சுகிட்டு வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்..”
“சரி சரி அதெல்லாம் வந்துடுவாங்க. நீங்க 5 மணிக்கு கிளம்பிப்போய் நல்லா பேசிட்டு வாங்க…” என்றபடி சிவகாமி உள்ளே சென்றாள்.
அவள் சொன்னபடியே நேரத்தில் எல்லோரும் வந்து அவருக்குத் தேவையானதைச் செய்தனர். 5 மணிக்கு ட்ரைவர் வந்து இவரைக் கூட்டிப் போகும்போது விழா தலைவர் இவருக்கு ஃபோன் செய்து விழாவில் சில மாற்றங்கள் இருப்பதாகவும் இவர் பேசும் இடத்தில் வேறு ஒருவர் பேசுவார் என்றும் சொல்ல, சிதம்பரம் வெகுண்டார்.
“ அதெப்படி என்னை சிறப்பு பேச்சாளராக அழைத்து விட்டு வேறு ஒருவரை பேசச் சொல்லலாம். இது எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா..? “ எனக் கோபமாய்க் கேட்கவும், “சிதம்பரம் சார்.. தயவு செய்து கோபிக்காதீங்க. உங்களுக்கு ஒரு அவமானமும் இல்லை. ஏனென்றால் சிறப்பு பேச்சாளர் யார் என்று அறிவிப்பு செய்யலை. சரியான நபர் பேசுவார் என்றுதான் சொல்லியிருந்தோம். அதனால கடைசி நிமிஷத்தில மாற்றினது யாருக்கும் தெரியாது. நீங்க கண்டிப்பா வரணும். ஏன்னா நீங்கதான் சிறப்பு விருந்தினர். சிறப்பு பேச்சாளரை கௌரவிக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதையும் அப்போது நான் விளக்குவேன்” என்று சொல்லி ஃபோனை துண்டித்து விட்டார்.
சிதம்பரத்திற்கு ஒரே குழப்பம். தன்னைப் பேச அழைத்துவிட்டு வேறு யாரையோ பேச வைப்பது அவருக்கு ஆத்திரம் அளித்தாலும், தன்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கான மகிழ்ச்சியும் கடைசி நிமிஷத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தை அறியும் ஆவலும் அவரை விழாவுக்கு போகத் தூண்டியது.
விழாவிற்குச் சென்ற சிதம்பரத்தை மேடையில் அழைத்து அமர வைத்துவிட்டு பேசத் தொடங்கினார் விழாத் தலைவர். முதல் 5 நிமிட பேச்சை அதிகம் கவனிக்காத சிதம்பரம், சிறப்புப் பேச்சாளரை விழாத் தலைவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று சொல்ல ஆரம்பித்த போது ஆர்வத்துடன் கவனிக்கலானார்.
இன்று தொழிலாளர் தினம். இதைப் பற்றி சிறப்புரை ஆற்ற ஒரு சிலரை மனதில் வைத்திருந்தேன். அதே சமயத்தில் காந்திஜியை பற்றிய ஒரு குறிப்பை படிக்க நேர்ந்தது அதாவது காந்திஜியிடம் ஒரு முதியவர் வந்து தன்னுடைய பேரன் அதிகமாக இனிப்புகளை சாப்பிடுவதாகவும் அவனிடம் அதிகமாக இனிப்பு சாப்பிடுவது கெடுதல் என்று காந்திஜி அறிவுரை சொல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.அவன் காந்திஜியிடம் அதிகமாக மதிப்பு வைத்திருந்ததால் அவர் அறிவுரை சொன்னால் அவன் கேட்பான் என்று அவர் நம்புவதாகவும் கூறினார். அதை அமைதியாக கேட்ட காந்தி அவரை இரண்டு வாரம் கழித்து பேரனைக் கூட்டி வருமாறு சொன்னார் அதேபோல் இரண்டு வாரம் கழித்து அவர் பேரனைக் கூட்டி வந்தார். காந்தியும் அவனிடம் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் என்று சொல்லி அறிவுரை சொன்னார். பெரியவருக்கு குழப்பம்.
"காந்திஜி நான் இரண்டு வாரத்துக்கு முன்பே இந்த அறிவுரையை சொல்லச் சொன்னேன். ஆனால் நீங்கள் இரண்டு வாரம் கழித்து வா என்று சொல்லி அந்த அறிவுரையை இப்போது சொல்கிறீர்களே, அதை அன்றைக்கே சொல்லி இருக்கலாமே” என்று கேட்டார். அதற்கு காந்தி புன்னகைத்தவாறே “இரண்டு வாரத்திற்கு முன்பு நானே அதிகமாக இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நான் அவனுக்கு இனிப்பு சாப்பிடாதே என்று சொல்வதற்கு முன் நான் முதலில் இனிப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதைக் குறைப்பதற்கு எனக்கு இரண்டு வாரம் தேவைப்பட்டது. இப்பொழுது நானும் குறைத்துதான் இனிப்பு சாப்பிடுகிறேன். இப்போது எனக்கு அறிவுரை சொல்ல தகுதி இருக்கிறது” என்றார்.
இந்தக் குறிப்பை படித்ததும் எனக்கு பளிரென ஒரு ஐடியா தோன்றியது. தொழிலாளர் தினத்தின் சிறப்பு உரையை ஆற்றுபவர் முதலில் தங்களுடைய தொழிலாளர்களை எப்படி நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய தொழிலாளர்களை நன்றாக நடத்தாதவர் எங்ஙனம் இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்ற முடியும்? அதனால் நான் ஒரு முடிவெடுத்தேன். நான் பேச அழைப்பவர்களின் வேலைக்காரர்களை ரகசியமாக சந்தித்து மறைமுகமாக அவர்களை அவர்கள் முதலாளி எப்படி நடத்துகிறார் என்று கேட்டேன். என்ன ஆச்சரியம்? நான் பேச அழைக்க நினைத்த பேச்சாளர்கள் தங்களுடைய வேலைக்காரர்களை மோசமாக நடத்துவதாக சொன்னார்கள். ஒரே ஒரு இடத்தில் மட்டும் தங்களை நல்லபடியாக நடத்துவதாக ஒருவரை குறிப்பிட்டு சொன்னார்கள்.
அந்த ஒருவர் தான் இன்று நமக்கு சிறப்புரை ஆற்ற வருகிறார். அவரை பொன்னாடை போற்றி கௌரவப் படுத்துவதற்காக சிதம்பரம் அவர்களை வேண்டுகிறேன் என்று பேச்சை முடித்து சிதம்பரத்திடம் பொன்னாடையை கொடுத்தார்.
கையில் பொன்னாடையை வைத்துக்கொண்டு யாரந்த சிறப்புப் பேச்சாளர் என்று பதட்டத்துடன் காத்திருந்தபோது, சிரித்துக் கொண்டு கைகளை கூப்பியபடியே மேடைக்கு வந்தாள்…
அவர் மனைவி சிவகாமி!