விஜி சம்பத்
சேலம்
சேலம்
அருணுக்கும், இந்துவுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்ததில் அருணின் அம்மாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும், திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே, கணவனை விவாகரத்து செய்து விட்டுப் பிறந்த வீட்டோடு வந்து விட்ட மகள் சுமதியை நினைத்துப் பெற்ற மனம் கனத்துப் போனது...! சுமதியின் கணவன் வாசுவின் குடிப் பழக்கத்தால் மனம் வெறுத்துப் போன சுமதி, அவனை விவாகரத்து செய்து விட்டாள்.
விவாகரத்தாகி மூன்று வருடங்களாகியும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பிடிவாதமாக சுமதி ஒத்துக் கொள்ளவில்லை.
எத்தனை காலம்தான் தங்கைக்காக அருண் காத்திருப்பான்? அவன் காத்திருக்கலாம்... அவனுக்கென்றே பிறந்தது முதல் காத்திருக்கிறாளே தன் அண்ணன் மகள் இந்து. அவளுக்கென்ன பதில் சொல்வது? என்று யோசனை, கவலைகளுக்கிடையே அல்லாடிக் கொண்டிருந்தாள் மங்களம். திடீரென்று அவளுடைய அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்ததே அதிசயம் என்றாகி விட்டது.
அவருக்காக உடனடியாக இந்து-அருண் திருமணத்தை நடத்த வேண்டியதாகி விட்டது. இருபத்தி எட்டு வயதில் வாழாவெட்டியாக மகள் இருக்கையில், புதுமணத் தம்பதிகளின் சந்தோஷம் பாதிக்கப் பட்டால் என்ன செய்வது...? அவர்களைப் பார்த்து சுமதி வேதனையில் மனம் புழுங்கினால் என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்த மங்களம். ஒரு முடிவுக்கு வந்தாள்.
அன்றிரவு மணமக்களைத் தனியறைக்கு அனுப்பி விட்டுத் தன் கணவரிடம், "என்னங்க...நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த வாரக் கடைசில நான், நீங்க, சுமதி மூணு பேரும் நம்ம கிராமத்து வீட்டுக்குப் போயிடலாம். நீங்களும் ரிடையரானதில இருந்தே சொல்லிகிட்டு இருக்கீங்க இல்ல" என்றாள். தன் மனைவியின் உள்ளத்தை அணுவணுவாகப் புரிந்து கொண்டிருக்கும் சுந்தரத்துக்குத் தெரியாதா அவள் மனப் போராட்டம்?
“அதுக்கென்னம்மா... தாராளமா நீ சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்...! இப்ப நீ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு” என்றார் பரிவும், பாசமுமாக...!
அங்கே தனியறையில் ஆசை… ஆசையாய்த் தனக்காகக் காத்துக் கொண்டிருந்த அருணிடம், "அருண்...நான் ஒண்ணு சொன்னா நீ கோவிச்சுக்காம கேப்பியா?" என்றாள் இந்து.
"ஒண்ணு...என்ன...? ரெண்டு, மூணுன்னு எத்தனை வேண்ணா சொல்லேன்...தாராளமாக் கேக்கறேன் "என்றான் அருண் காதலும்... அசடும் வழிய!
"நான் கொஞ்சம் சீரியசா பேசறேங்கறதைப் புரிஞ்சுக்கோ அருண். எனக்கு இப்ப நம்ம கல்யாணம் நடந்ததில இஷ்டமே இல்ல..."
"அடிப் பாவி என்ன சொல்றே…? உம் மனசுல வேற யாராவது?" என்று அதிர்ச்சியான அருண் தலையில செல்லமாகக் குட்டிய இந்து ..
"பொறுமையாக் கேளு அருண்…! சுமதிக்கு நல்லதா ஒரு வாழ்க்கைய அமைச்சுக் குடுத்து, அத்தை, மாமாக்கு மனநிம்மதி கிடைச்சப்புறமாதான் நாம கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அப்பாவுக்காக இப்ப அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சு. அதனால என்ன...?
எவ்வளவு சீக்கிரமா சுமதி மனசை மாத்தி, அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கைய ஆரம்பிச்சுக் குடுக்கறோமோ...அன்னைக்குத்தான் நாம நம்ம வாழ்க்கையையும் ஆரம்பிக்கணும்...இதுக்கு உன்னுடைய சம்மதமும், ஆதரவும் வேணும்..."என்று கெஞ்சலாகக் கேட்க, இந்துவுக்கு தன் தங்கையிடமும், பெற்றோர்களிடமும் இருக்கம் அக்கறை தன்னிடம் இல்லையே என்று மனசுக்குள் வெட்கமும் வருத்தமும் அடைந்த அருண் இந்துவின் கரங்களைப் பற்றி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் "ஓ.கே கண்மணி" என்றான் மன நெகிழ்வோடு..!