சதிஷ்குமார்
அபுதாபி
சதிஷ்குமார்
அபுதாபி
முகநூல் , வாட்ஸாப் , ட்விட்டர் போன்ற அனைத்துச் சமூக தளங்களிலும் காதலர்தினக் கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள் நிரம்பி இருந்தன. தன்னை அறியாமல் புன்னகைத்துக் கொண்டே , புதிய தரவுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். மனம் என்னவோ காதலர்தினம் என்ற ஒற்றை வார்த்தையில் சிக்கி நின்றது.
இத்தனை ஆண்டு ஆன பின்னும், காதல் இன்னும் உயிர்ப்பாக உள்ளுக்குள் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிப்பருவத்தில் முளைவிட்ட முதல் காதல், அறியாத முகம் கண்டு வந்த தெரியாத காதல், பேருந்து பயணத்தின் போது பூத்த ஒற்றை ரோஜா சூடி வரும் சகவயது பெண்ணின் மீதான பெருங்காதல், தொடர்வண்டி பயணத்தின் போது தொடர்ந்த காதல், இரயில் பயணம் முடிந்த பின்னும் முடியாத பயணமாய் தொடர்ந்த காதல், உறவினர் சந்திப்பில் உதித்த காதல், கல்லூரி நாட்களில் கடந்து வந்த பருவ காதல், அலுவலக சந்திப்பினால் ஏற்பட்ட அலுக்காத காதல் என... சில பல நினைவுகள் பசுமரத்து ஆணி போல் மனசுக்குள்… ஆழமாய் அசை போட்டு கொண்டிருந்தான். ‘இத்தனை காதல் ஒரு மனிதனுக்கு வருமா..?’ என்ற கேள்வி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு காரணமாக நீல நிற உடை அணிந்து கொண்டு, இன்று யாரிடம் எப்படி வாழ்த்து சொல்வது என்று மனதில் ஒத்திகை பார்த்தான். பரபரப்பாக கிளம்பியவன் பின் வாசலில் தடால் என்று சத்தம் கேட்டதும் அங்கு ஓடினான். நேற்று இருமிக் கொண்டிருந்தான் என்பதற்க்காக தண்ணீரில் துளசி இட்டு குடிக்க சொல்லலாம் என்று துளசி பறிக்கச் சென்ற பாட்டி கால் இடறி கீழே விழுந்து, தண்ணீர் குழாயில் தலை அடிபட்டு வலியால் துடித்தாள்.
அலுவலகத்துக்கு அரை நாள் விடுமுறை சொல்லிவிட்டு , ஆட்டோவில் பாட்டியை ஏற்றி கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றான். மருத்துவர் சோதித்து பார்த்து, ‘வயசான காலத்துல ஜாக்கிரதையா இருக்க சொல்ல கூடாதா..? அவங்கள ஏன் வேலை பாக்க விடுறீங்க..?’ என்று கடிந்து கொண்டு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டுவிட்டபடியே , ரத்தம் அதிகம் வந்ததால் உடல் அயற்சிக்கு குளுக்கோஸ் போட்டு இருப்பதாகவும் வெளியே காத்திருக்க கூறினார். தனக்காக உதவ போய் பாட்டி தன்னை வருத்தி கொண்டாள் என்று வருந்தி கொண்டிருந்தான். மருந்து வாங்கி வர சொல்ல... மருந்தக பிரிவில் மருந்துக்காக காத்து கொண்டு இருந்தான்.
கதறி அழுதபடி ஒரு தம்பதியினர் O-ve ரத்தம் ஒரு யூனிட் வெண்டும், உதவி செய்யுமாறு மருந்தக பிரிவில் கூறிக்கொண்டு இருந்தனர். தன பாட்டியை கவனித்து கொண்டு இருந்த நர்ஸ் அவர்களை ஆசுவாசப்படுத்தி தான் அவர்களுக்கு உதவுவதாக கூறினாள். அவன் பக்கம் வந்தவள் O-ve ரத்தம் கொஞ்சம் அரிதான குரூப், நீங்க கொஞ்சம் உங்க நட்பு வட்டாரத்திலோ அல்லது வாட்சப், பேஸ்புக்லயோ கோரிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
வாட்சப் மற்றும் பேஸ்புக்-ல் போஸ்ட் செய்தவனுக்குள் தனக்கும் O-ve ரத்தம்தானே என்று தோன்ற, நர்ஸிடம் சென்று விவரம் கூறினான். நன்றி கூறியவளாய் உடனே அவன் ரத்தம் வழங்க ஏற்பாடு செய்தாள். இரத்தம் கொடுத்து முடித்தவன் பழச்சாறு குடிக்க வெளியே வந்தான். வழியில் அந்த குழந்தையின் தம்பதியினர் காலில் விழுந்து நன்றி சொல்ல முற்பட்டனர். அவர்களை தடுத்து தைரியமாக இருங்கள் என்று கூறியவனாய்.. வெளியில் இருந்த பழமுதிர் சோலையில் சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக் குடித்து கொண்டு இருந்தான்.
தூரத்தில் ஒரு முதியவர் ஓவ்வொருவராக ஏதோ கேட்டு வந்து கொண்டிருந்தார். இவன் அருகில் வந்தவர், ‘தம்பி ரொம்ப பசிக்குது’ என்றார். இவன் ஒரு பத்து ருபாய் நீட்டினான், பெரியவர் மறுத்து, சாப்பாடு பார்சல் மட்டும் வாங்கி கொடுக்குமாறு கூறினார். ‘ஏன் பார்சல்..?’ என்று கேட்டதற்கு நடக்க முடியாத மனைவி வீட்டில் இருப்பதாக கூறினார். அனுதாபப்பட்டவனாய் இரண்டு பார்சல்களை வாங்கி கொடுத்து விட்டு மருத்துவமனை வந்து சேர்ந்தபோது, பாட்டி அவனை பார்த்து ‘எங்கப்பா போனே..?’ என்று கேட்டவாறே கிளம்ப ஆயத்தம் ஆனாள்.
இருவரும் கிளம்ப எத்தனிக்கும் போது , சற்று தூரத்தில் இருந்த நர்ஸ் , ‘எக்ஸ்க்யூஸ் மீ புளூ ஷர்ட்’ என்று கூப்பிட, ‘நானா…’ என்பது போல திரும்பி பார்த்தான். ‘ஆமாம் உங்களை தான்’ என்று கூற , ‘இரு பாட்டி வந்திறேன்’ என்று நர்ஸ் அருகில் சென்று என்ன விபரம் என்று கேட்டான்.
‘ரிப்போர்ட் எல்லாம் வாங்காம போறீங்க..?’ என்றவளிடம் ‘அடக் கடவுளே மறந்துட்டேங்க... நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க’ என்றபடி வாங்கிக் கொண்டு, தாங்க்ஸ் என்று கூறி நகர்ந்தவனிடம், ‘என்ன சார் இன்னைக்கு புளூ ஷர்ட்... காதலர் தின ஸ்பெஷல் ஏதும் உண்டோ..?’ எனக் கிண்டலாகக் கேட்டுவிட்டு, ‘ரத்தம் கொடுத்து உதவியதற்கு நன்றி’ என்று கைகுலுக்கினாள் நர்ஸ்.
அந்த ஒரு நொடி மருத்துவமனை மலர்த்தோட்டமாக மாறியது அவனுக்கு. நர்ஸ் நிலவென மாறினாள். அந்த ரம்மியமான சூழல், ‘ஓகே சார் தேங்க்ஸ்’ என்ற நர்சின் குரலும் , ‘போலாமாடா’ என்ற பாட்டியின் குரலும் ஒரு சேர மாற்றி அமைத்தது. ஒருவேளை மருத்துவ முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் உண்மைதானா என்று தோன்றியது அவனுக்கு.
பாட்டியும் அவனும் டாக்ஸியில் திரும்பிக் கொண்டிருந்தனர். அதில் வேலன்டைண்ஸ் தின சிறப்பு தொலைபேசி நிகழ்ச்சி ஒன்று எப்.எம். வழி ஒலித்து கொண்டிருந்ததது.
விளம்பர இடைவேளைக்குப் பிறகு பேசிய நேயர் ஒருவர், ‘சார் காதல் என்றாலே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உண்டான மோகம்ன்னு தப்பா நினைக்கிறாங்க சார். அது இல்ல. காதலுக்கு பல பரிமாணம் இருக்கு, அன்பு, பாசம், நேசம், உதவி. உதாரணத்திற்கு பசிக்கு சாப்பாடு வாங்கித்தர துடிக்கும் மனசு, உயிர் பிழைக்க சற்றும் யோசிக்காம உதவுற மனசு, முன்ன பின்ன அறிமுகம் இல்லாத நபர்களிடம் நாம் காட்டும் கனிவு, உறவுகளிடம் நாம் காட்டும் பாசம் என எல்லாத்துக்கும் பின்னாடி இருக்கிறது காதல் தான் சார். அதுக்கு பேரு உதவி, நேசம், அன்பு, பாசம்... இது எல்லாமே காதலன்னு நினைக்கிறது சிறுபிள்ளைத்தனம்... காதல் பெருகட்டும், மனிதம் தளரட்டும்’ என்று கூறி தான் ஒரு நர்ஸ் ஆக வேளை பார்ப்பதாக பேசி முடித்தார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், ‘புனிதமான வேலை பார்க்கும் நர்ஸ் நீங்க... ரொம்ப அருமையா பேசினீங்க, நேயர்களே... காதல்ன்னா ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உண்டான மோகம்ன்னு தப்பா நினைக்கிறாங்க. அது இல்ல. காதலுக்கு பல பரிமாணம் இருக்கு, அன்பு, பாசம், நேசம், உதவி.. இப்படி நிறைய .. ஆதலால் அனைவரையும் காதல் செய்வீர் .. காதல் பெருகட்டும், மனிதம் தளரட்டும்.. நம்ம நர்ஸ்க்காக இந்தச் சிறப்பு பாடல்’ என்று கூறி நிறுத்திய அந்த சிறிய நொடிப்பொழுதில் இவன் மனதில் விண்ணில் காணும் பவுர்ணமி நிலவாக மருத்துவமனையில் கண்ட நர்ஸ் தோன்றினாள் . இவன் காற்றில் அசையும் மரமாக உணர்ந்தான்.
"காதலின் தீபம் ஒன்று..... ஏற்றினாளே என் நெஞ்சில்” என்ற பாடல் ரம்மியமாக ஒலித்து, டாக்ஸிக்குள் நிறைந்தது… அவன் மனசுக்குள்ளும்.