ஸ்ரீராம்
சென்னை
ஸ்ரீராம்
சென்னை
யார் நீ
"உங்க ரசனையைதான் பார்க்கறேனே... எனக்கு நீங்க பொண்ணு பார்க்க வேணாம்... பழம் பழமா பார்ப்பீங்க.. நானே பார்த்துக்கறேன்... இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்..."
வினோத் சத்தமாக பேசினான்.
"இப்படியே சொல்லு... நாலு வருஷமா கேட்டுக்கிட்டிருக்கோம்... பொண்ணு கிடைக்கறது அவ்வளவு சுலபம்னு நினைச்சியா? இப்படியே போனா கல்யாணமே ஆகாதுடா..." மூர்த்தியும் எரிச்சலுடன் கொஞ்சம் சத்தமாகவே பேசினார். அது அவர் இயல்புக்கு மாறானது.
"அப்படியே இருந்துட்டுப் போறேன் போ..."
ஸ்வாமி முன் அமர்ந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்த ரேணு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அப்படியே கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்லோகத்தில் கவனமானாள்.
"எப்படியோ உன் அக்கா இந்துவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்... உங்க ரெண்டு பேரோட பெரிய பாடா இருக்கு... ச்சே...."
மூர்த்தி வெளியேறினார். வாரத்தில் மூன்று நாட்கள் அவர் அந்தத் தெரு முனையில் இருக்கும் உணவகத்துக்குச் செல்வார். அங்கு கிடைக்கும் பொங்கலும், இட்லி சாம்பாரும் அவருக்கு அவர் பழைய நாட்களை நினைவு படுத்துகிறதாம். அங்கே ஆற அமர அமர்ந்து சாப்பிட்டு விட்டு மெதுவாகத்தான் வருவார். ஓய்வுபெற்று ஒரு வருடம் ஆன நிலையில் இது சமீப காலங்களின் வழக்கம் ஆகிப் போயிருந்தது.
அதுவும் இது மாதிரிப் பேச்சுகள் சமீப காலமாய் வீட்டில் அதிகமாகி இருந்தன. 'அவர்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். நீங்கள்தான் பார்க்கவேண்டும், முடிக்க வேண்டும்' என்று நண்பர்களும் உறவினர்களும் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களுக்கு தன் வீட்டின் நிலை தெரியவில்லையே என்று நினைத்துக் கொள்ளுவார் மூர்த்தி. பிடிவாதக்கார மகன். 'உனக்கு முடிச்சுட்டுதான் சின்னவனுக்குப் பார்க்கவேண்டும்' என்று சொன்னால் கூட, 'ஓ.. அப்படி எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறீர்களா?' என்பவனை என்ன சொல்வது?
இந்துவிடம் சொல்லிப் பேசிப்பார்க்கச் சொன்னார். அவளும் முயன்று பார்த்து "அப்பா... பேச்சை எடுத்தாலே கத்தறான்.." என்று விட்டாள்.
ஹோட்டல் வந்து விட்டது. உள்ளே நுழையும்போதே கல்லாவில் இருப்பவர் புன்னகைத்து, தலையசைத்து வரவேற்பை வெளிப்படுத்தினார். உள்ளே பார்த்தார்.
ஏ ஸி அறையினுள் நுழைந்து இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டார். அப்படி அமர்ந்தால் பரிமாறுபவர் மெதுவாகத்தான் அவர் இருப்பிடம் வருவார். அது அவர்களுக்குள் உடன்பாடு. மெதுவாய் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். சமயங்களில் கையில் டைரியோடு வருவார். எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்.
உடனே செல்ல வேண்டும் என்றால் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவார். ஆனால் அங்கு எந்த வேளைகளிலும் நெருக்கும் கூட்டம் எப்போதுமே இருக்காது.
இவர் அமர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உள்ளே நுழைந்த ஒரு இளம்பெண் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, போன் பேசியபடியே இவர் இருக்கைக்கு வந்தாள். சின்ன குரலில் பேசியபடியே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அழகாக இருந்தாள்.
அவள் வந்ததால் அருகே வந்தார் சர்வர். வந்தவள் ஃபோனை அமர்த்திவிட்டு "ஸ்டார்ட்டர் என்ன இருக்கு?" என்று கேட்க, அவளிடம் மெனு கார்டை கொடுத்துவிட்டு இவரைப் பார்த்தார் சர்வர்.
"சாம்பார் இட்லியா? கொண்டுவந்து விடவா?"
தலையாட்டினார் மூர்த்தி. சர்வர் அகன்றார்.
நேரம் ஊர்ந்தது.
அவள் ஓரிருமுறை இவரைப் பார்ப்பதும், ஏதோ யோசிப்பதுமாக இருந்தாள். ஏதோ ஒரு தவிப்பு அலலது ஆயத்தம் தெரிந்தது அவளிடம். வேறு இருக்கைக்கு மாறலாமா என்று யோசித்தார் மூர்த்தி. நல்ல யோசனை என்று தோன்றவே எழ ஆயத்தமானார்.
இவரைப்பார்த்து புன்னகைத்தாள் அந்தப்பெண். "குட் ஈவினிங் அங்கிள்... ரொம்பக் கவலையாய் இருக்கீங்க போல.."
'அதைப்பற்றி உனக்கென்ன' என்பது போல ஆச்சர்யத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவர் நெற்றியைச் சுருக்கினார். "என்னையா கேட்கிறாய்?" என்றது நெற்றிச் சுருக்கம்.
"என் பெயர் வினோதினி அங்கிள்... இன்ஃபோசிஸ்ல வேலை பார்க்கறேன். இப்போதைக்கு 70,000 தர்றாங்க..."
"இதை எல்லாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"
"நீன்னே சொல்லலாம் அங்கிள்... சின்னப் பொண்ணுதான் நான்.."
அதற்குள் சர்வர் அவளுக்கு அவள் கேட்ட மஷ்ரூம் சூப் கொண்டுவந்து கொடுக்க, அவளை அதை எடுத்து ஸ்பூனால் அளைந்தாள். எதிரில் இருந்த சிறு டப்பாவிலிருந்து பெப்பர் எடுத்து சூப்பில் தெளித்துக்கொண்டாள்.
'பெயர் விநோதினியா? என் பையன் பெயர் வினோத்... என்ன பொருத்தம்! இப்படிப் பேர் இருந்தாலே அனா பினாவா இருப்பாங்க போல'
"ஸாரி அங்கிள்... அதிகப்ரசங்கி போல பேசறேனா? உங்க ஏகாந்தத்தைக் கெடுக்கறேனா?" புன்னகையுடன் கேட்டாள் அந்தப் பெண்.
ஒன்றும் பேசாமல் அவளை பார்த்துவிட்டு சர்வர் வருகிறாரா என்று பார்த்தார் மூர்த்தி. 'ஏதாவது ஏமாத்துப் பொண்ணோ? பணம் கிணம் பறிப்பாளோ... ஏதாவது ஏடாகூடம் ஆகிடுமோ...'
இட்லி சொல்லாமல் கிளம்பி இருக்கலாம் என்று தோன்றியது மூர்த்திக்கு. இப்போதான் என்ன போச்சு? கிளம்பி சர்வரிடம் போய் வேண்டாம்னு சொல்லிட்டு நடந்துடலாம். மறுபடியும் எழ நினைத்தார்.
அதற்குள் சிறு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டிக் கொண்டுவந்து வைத்து விட்டு, 'வடை வேணுமா?' என்று கேட்டு விட்டு ஒரு அதிருப்தியான மறுப்பை பதிலாய்ப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார் சர்வர்.
ஸ்பூனால் இட்லிகளை யோசனையுடன் மெதுவாய்ச் சிதைத்து சாம்பாரில் ஊறவிட்டார் மூர்த்தி. ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பார்வை சங்கடப்படுத்தியது. சாம்பாரில் ஊறிய இட்லியின் ருசி கூட மனதில் பதியவில்லை.
"வினோத் ரொம்பப் படுத்தறானா அங்கிள்?
சட்டென நிமிர்ந்தார் மூர்த்தி. "யார் நீ?"
(தொடரும்)