அம்மு ராகவ்
தேனி
அம்மு ராகவ்
தேனி
நான் ஒரு பயணத்தில்
முத்தமொன்று பெற்றேன்
முன்னும் பின்னும் உதாரணமில்லாதது
முத்தத்தை ஒன்றோ இரண்டோ
பிரதிகள் எடுத்திருக்கலாமாக இருந்தது.
பிரதி எடுக்கப்பட இயலாத
முத்தம்
வெளியில் கலந்து கரைகிறது.
இன்னொரு பயணமும் அப்படி வராது
இறுக்கமான மார்புக் கச்சத்தைப் போல
நினைவுகள் பற்றிக் கிடக்கிறது.
ஒரு மீன்
இன்னொரு மீனை விழுங்குவது போல
உன் முத்தத்தை விழுங்கி இருக்கலாம்.
என்முத்தம்
தவறி விழுந்து பூக்கூடையிலிருந்து
ஒரு பூ
அவளின் புதிய மூக்குத்தியாகியிருக்கிறது
நாபிக்கமலத்தின் கீழே
வலுக்கட்டாயமாக
பெற்றுக் கொண்ட முத்தம்
இப்போதும் தழும்பாகக் கிடக்கிறது
உஷ்னமேறிய ஒரு கோப்பையின்
பாணத்தை உறிஞ்சுபவன் போல
முத்தத்தை உறிஞ்சினேன்
தேனில் விழுந்த
இறகின் முனையிலிருந்து உருளும்
அபூர்வத்துளியானது அவளின் முத்தம்
கைய்யாமின் பழைய கோப்பை ஒன்றில்
அவளோடு கூடிய ஓட்கா இரவொன்றில்
அறையெங்கும்
இறகின் முனையிலிருந்து
விழுந்த துளிகள் பெரும் சுனையானது
முத்தங்கள் மூழ்கிக் களித்த பொழுதொன்றில்
அறை கடலானது
செங்குத்தான பாறையில்
நாணயம் போல உருளுகிறது
உன் முத்தத்தின் நினைவு
தனித்தனியாகக் கிடக்கும் முத்தங்களைக்
கூட்டிப் பொதிந்து சமணக்குகையில்
வைக்க எத்தனிக்கையில்
பாறையில் உருண்டு நழுவிய
முத்தப் பொதியை அடிவாரக்
குளத்தின் மீன் விழுங்கியது
நினைவுகள் வரும் போதெல்லாம்
அந்தக் குளம் நழுவி
என் கண்களில் விழுகிறது.