செழியன்
மதுரை
செழியன்
மதுரை
அன்றொரு மழைநாளிரவில்
அழையா விருந்தாளியாய்ப்
பிழையாய் அவள் வந்திருந்தாள்...
அகன்ற விழிமூடி
அலகை உயர்த்தி
அழகிய சிறகினைச்
சுழற்றி உதறினாள்..
வெடவெடத்து நடுங்கியவளை
வெதுவெதுப்பாக்கிட என்
விரலகளால் வருடிவிட்டேன்...
விரல்களிடையே
விருட்சம் கண்டவள்
அழகிய அலகால் என்
அங்கம் வருடினாள்...
மென்மையாய்க் கீச்சினாள்..
அவள் கீச்சுமணிபோலவே
அலைபேசி மணியடிக்க
அரண்டுபோய்க் கிறீச்சிட்டாள்..
நானும்
அவளை அருகில் விட்டுவிட்டு
அளவளாவத் தொடங்கியிருந்தேன்...
’மரங்களைத் தொலைத்த
மனிதகுலம் மண்ணாகுமென்று…’
அசட்டை செய்துவிட்டதாய் எண்ணி
அகன்றுவிட்டாள் போலும்..
அதன்பின் அவள் வரவேயில்லை..
ஆனால் இன்றோ
குவளை நீருக்கென
கூட்டம் கூட்டமாய் அலைகிறோம்…
நாவில் நுரைதள்ள
நடையாய் நடக்கிறோம்...
அவள் கிறீச்சிட்ட சாபம்தான்
பலித்துவிட்டதோ என்னவோ...