ஹேமா
கொச்சி
ஹேமா
கொச்சி
சமூக விலங்குகளுக்கிடையே சண்டை.
ஓயாத போர்.
மிகப் பெரிய போர்.
ஆண்டாண்டு காலங்களாக
உயிர்வதைகள்.
இரத்த வாடை காற்றில் கனக்கிறது.
எங்கும் ஓலங்கள்.
மறுதலிக்கப்படுகிறது
மனிதம்.
கொத்துக்கொத்தாய் மனித சடலங்கள்.
தேசப்பற்று, இனப்படுகொலை என்று எந்தப் பெயரும் பொருந்தும்.
கோடிட்ட இடங்களை நீங்களே
நிரப்பிக் கொள்ளுங்கள்.
இங்கு
போரை வரவேற்பவர்களுமுண்டு.
அவர்களுக்கு என்ன பெயர் என்று
நான் சொல்லத் தேவையில்லை.
போர்களில்
வல்லரசுகளும் வல்லினங்களுமே
எப்போதும்
வெற்றி கொள்கின்றன.
அவர்கள் வாகையில்
அவர்கள் அருந்தும் மதுவில்
அழுகிய உடல்களின்
நாற்றம் அடிப்பதைக் குறித்த
கவலையொன்றும் அவர்களுக்கு இல்லை.
புனிதத்தைக் கொண்டு வந்து நாட்டுப்பற்றில்
இடைச் சொருகுவார்கள்.
குழந்தைகள்
பெரும்பட்டினியில் சாவதை
கண்டுகொண்டே உணவு உண்கிறோம் நம் உணவுமேசையில்.
கண்முன்னே பெண்களும் குழந்தைகளும் துடிதுடிக்கச் சாகிறார்கள்.
சாமானியர்களின் சாவு வெறும் எண்ணிக்கைகளாக
மிஞ்சுகிறது செய்திகளில்.
போருக்குப் பிந்திய காலங்கள்
போரைவிடத் துயரமானவை.
தொடர்ச்சியான இச்செய்திகளால்
நாம் மனநலம்
பாதிக்கப்பட்டவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.
நாம் சாபத்தின் சாட்சிகளாக
இந்தக் காலகட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதைத் தவிர
நம்மால் செய்யவியன்றது
ஒன்றுமேயில்லை.
ஆம்..
சாபத்தின் சாட்சிகள் நாம்...