சென்னை
உங்களுக்கு எழுத்து மீதான ஆர்வம் வந்தது எப்பொழுது?
பள்ளிக்கூட நாள்களிலிருந்து எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. கட்டுரைகளை ஒழுங்காக எழுத நினைக்கும் எல்லா மாணவர்களுக்கும் இயல்பாக வருகின்ற ஆர்வம் என்பதற்கு மேல் அதில் ஏதும் இல்லை.
குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், நான் படித்த கெல்லெட் உயர்நிலைப் பள்ளியில் (இப்போது கெல்லெட் மேல்நிலைப் பள்ளி) திருக்குறள் போட்டிப் பரிசு நிதிக் குழு என ஓர் ஆசிரியர் குழு இயங்கியது. திருக்குறளை மையப்படுத்தி பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுப்பார்கள். எட்டாம் வகுப்பில் திருக்குறள் பேச்சுப் போட்டியில் முதன் முதலாகக் கலந்துகொண்டேன். அப்போது அந்தச் சிற்றுரையை எழுதக் கற்றுக்கொண்டதில் இருந்து ஆர்வம் தொடங்கியது.
எட்டாம் வகுப்பில் இருந்து எழுத்தார்வம் இருந்தது எனச் சொல்லலாம்.
நீங்கள் எழுதிய நாவல்களில் அல்லது நூல்களில் உங்களுக்கு பிடித்தது எது?
நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்த்து ‘வளையம்’ என்னும் குறுநாவல். எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்கலையை விவரிக்க அந்தக் குறுநாவலின் முதன்மைக் கதாபாத்திரங்களை சண்டைக்கலைஞர்களாக அமைத்தேன். மற்போர், குத்துச்சண்டை, கராத்தே, முவே-தாய் (தாய்லாந்தின் சண்டைக்கலை) இந்த நான்கு சண்டைக்கலைஞர்கள் குறுநாவலை நகர்த்திச் செல்வார்கள். நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தமான கதைக்களமும் மொழியும் அதில் அமைந்துள்ளன.
என்றேனும் வளையத்தை விரித்து நாவலாக எழுதும் எண்ணமும் உண்டு.
இலக்கிய விருது (ஆறுதல் பரிசு) பெற்ற உடல் வடித்தான் நாவலை பற்றி கூறுங்கள்.
வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டும் இளைஞனுக்குப் போகிறபோக்கில் ஓர் அரசியல்வாதி வேலை வாய்ப்புக் கனவை விதைக்கிறார். ஆணழகனாக உருவாகிப் போட்டிகளில் வெற்றி பெற்றால், விளையாட்டுத் துறை இடஒதுக்கீட்டில் அரசு வேலைகூடக் கிடைக்கலாம் என்று அவர் சொல்ல, அந்த ஆட்டோ ஓட்டும் இளைஞன் அதைத் தானும் முயற்சி செய்தால் என்னவென நினைத்து உடற்பயிற்சி உலகிற்குள் நுழைகிறான். புரத உணவுச் செலவு, ஆட்டோ நிறுத்த அரசியல்கள், விதியின் விளையாட்டு, ஒரு முஸ்லிம் இளைஞன் மேடையேறித் தன் உடலைக் காட்டுதல் இஸ்லாத்தில் கூடுமா? கூடாதா? என்னும் மார்க்கக் கேள்விகள், அரசு வேலை வாய்ப்புக்காகக் குறிப்பிட்ட வயதுக்குள் தேசிய அளவில் ஆணழகன் போட்டியில் பதக்கம் பெறவேண்டிய கட்டாயம், எனப் பல அழுத்தங்களுடன் போராடி அவன் வெல்கிறான்.
உடல் வடிப்பதில் இரண்டு வகையான ஆணழகர்களை நீங்கள் பார்ப்பீர்கள். வசதியான பின்புலத்தில் தன்னுடைய புரத உணவுக்கும் துணை உணவுக்கும் ஆகும் செலவுகள் ஒருபொருட்டாக இல்லாத ஆணழகர்கள் ஒரு வகை. தன்னுடைய உடல் வடிக்கும் ஆர்வத்துக்குத் தன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை உணவுக்காகச் செலவழித்து எளிமையாக வாழும் ஆணழகர்கள் இன்னொரு வகை. ‘கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது’ என்னும் வழக்குச் சொற்றொடர் இவர்களுக்குப் பொருந்தும். உடல் வடித்தான் நாவல் இந்த இரண்டாம் வகை ஆணழகனைப் பேசுகிறது.
உடல் வடிக்கும் ஒருவன் கதாநாயகனாக இருப்பதால் நாவலில் உடற்பயிற்சிகளையும், ஆணழகன் போட்டிகள் தொடர்பானவற்றையும் விவரமாக எழுதினேன். சென்னையில் மட்டுமல்லாமல், துபாயிலும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்பை நாவலின் வழியாகச் சொன்னேன்.
புதிய களத்தின் பின்னணியில் நாவல் அமைந்திருப்பதை வாசகர்கள் பாராட்டினர்.
கதாபாத்திரங்களில் கெட்டவர்களே இல்லாத ஒரு நாவல் எனப் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் நேரில் சந்திக்கையில் பாராட்டினார். போட்டி நடுவர்களுள் ஒருவராக இருந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இந்நாவலைப் பற்றித் தன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியத்தில் எனக்கும் ஒரு சிறிய இடத்தை உருவாக்கித் தந்த நாவல் உடல் வடித்தான்.
உங்களது சிறுகதைகளில் பெரும்பாலும் தென் சென்னை பேச்சு வழக்கு உள்ளது. அதன் வீச்சை வாசகர்கள் மறுமொழியாக கேட்டிருக்கிறீர்களா?
நுட்பமான கேள்வி.
சென்னை வட்டார வழக்கென்பது பொதுவாகச் சென்னையின் அனைத்துப் பகுதியிலும் வழங்கப்படும் வட்டார வழக்கு கிடையாது. வடக்கே எண்ணூரில் வழங்கப்படும் சென்னைத் தமிழுக்கும், தெற்கே பட்டினப்பாக்கத்தில் வழங்கப்படும் சென்னைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. இஸ்த்துக்குனு (இழுத்துக்கொண்டு), வல்ச்சுக்குனு (இழுத்துக்கொண்டு), ஒரே பொருள்கொண்டவை என்றாலும் வடசென்னையில் (பிராட்வே) அது இஸ்துக்குனு என்றும், தென்சென்னையில் (அயோத்தியா குப்பம்) அது வல்ச்சுனு என்றும் ஒலிக்கப்படும்.
என்னுடைய கதைகளில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் (‘போலி’ நாவல் தவிர்த்து) தென்சென்னையைச் சேர்ந்தவை என்பதால் அந்த உரையாடல்களில் தென்சென்னைப் பாணி இருக்கும். ‘இளைத்தவன்’ நாவலில் வடசென்னையில் பட்டாளத்தில் இருக்கும் உருது முஸ்லிம் கதாபாத்திரங்கள் அமைந்த்தால், அவர்களுக்கு இடையே நாவலில் நடக்கும் உரையாடல்களை உருது கலந்த பேச்சு வழக்கில் எழுதினேன்.
என்னுடைய கதைகளை, நாவல்களைப் படித்த நண்பர்கள் அவற்றில் இருக்கும் உரையாடலில் புழங்கும் சென்னைத் தமிழ் தொடர்பாக என்னிடம் சில பின்னூட்டங்களை நேரில் சொன்னதுண்டு.
உங்களுக்கு முன்மாதிரியாக நீங்கள் நினைக்கும் எழுத்தாளர் யார்?
நண்பர், எழுத்தாளர் இரா. முருகன். ராயர் காப்பி கிளப் மடலாற் குழுமத்தில் இரா. முருகனிடமிருந்து சிறுகதை எழுதக் கற்றுக்கொண்டேன்.
இரா. முருகனின் ராமோஜியத்தைக் கால விவரிப்புக்கும் பா.ராகவனின் இறவானை கதையின் வேகத்தும் நான் அடிக்கடிப் படிப்பேன். அவ்விரண்டையும் வாசிப்பதை நான் நாவல் எழுதுவதற்கு முன்பு செய்யக்கூடிய பயிற்சியாகவும் நினைக்கிறேன். எழுத்தாளர் பா. ராகவன் நடத்தும் பயிற்சிப் பட்டறையில் ‘நாவல் எழுதும்’ பயிற்சி வகுப்பில் பயின்றிருக்கிறேன்.
முதியவர்களுக்கான உடற்பயிற்சியின் அவசியம்? போதிய விழிப்புணர்வு இருக்கிறதா?
விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் உடற்பயிற்சி செய்வதில்லை.
நடந்தவன் கால்ல சீதேவி என எங்கள் பகுதியில் ஒரு பழமொழி உண்டு. நடந்தால் உடல் நலமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பொருட்செலவே இல்லாமல் கிடைக்கக்கூடிய அந்த எளிய உடற்பயிற்சியை எத்தனை பேர் செய்கிறோம்?
முதியவர்களுக்கான பயிற்சி அணுகுமுறை என்று வரும்போது, முதலில் அவர்கள் தங்கள் உடல்திறனைத் தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் எந்த உடற்பயிற்சியைச் செய்வது என ஆலோசித்து அதன்படி செய்யவேண்டும். எல்லாப் பயிற்சிகளும் உடல்திறன் தொடர்பானவையும் இணையவெளியில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதால் மருத்துவரிடமோ, தொழில்முறை உடற்பயிற்சியாளரிடமோ ஆலோசனை கேட்காமல் முதியவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
முதியவர்கள், குருதியழுத்தம் கூடாமலும், மூட்டுகளின் மீது அழுத்தம் உண்டாகாமலும் மெதுவாக நடப்பதற்கு மருத்துவரிடம் ஒரு வார்த்தை சொன்னாலும் போதும், ஆனால் உடற்பயிற்சிகள் எனும்போது ஆலோசனை கட்டாயம்.
அனைத்தும் நலம் என ஆரோக்கியமாக வாழும் முதியவர் தன்னுடைய ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். நடை, யோகா, உடலை வளைக்கும் பயிற்சிகள், அதிக பளுவில்லாத எடையை அமர்ந்தபடியே கைகளால் உயர்த்தி தாழ்த்திச் செய்யும் பயிற்சி, முடிந்தால் எடையில்லாமல், நாற்காலியின் உயரத்துக்கு அமர்ந்து எழுகின்ற தோப்புக்கரணம், கைகளைச் சுற்றுவது, கால்களை நேரில் உயர்த்தித் தாழ்த்தி, பக்கவாட்டில் உயர்த்தித் தாழ்த்தி, பின்பக்கமாக வளைத்துப் பிடித்து, பத்மாசனம் அல்லது சம்மணமிட்டு அமர்வது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
பணிசெய்த நாடுகள் மற்றும் அங்கு கற்றுக்கொண்ட முக்கியமான பழக்கங்கள்
முதல் பணி சென்னையில் தனியார் நிறுவனத்தில் தொடங்கியது. அதன் பின்னர் மின்சார வாரியத்தில் பணி. பெரும்பான்மையாகப் பணி என்றால் மக்கள் சென்னைக்குக் குடிபெயர்வார்கள், நான் மின்சார வாரியப் பணிக்காக மேட்டூருக்குக் குடிபெயர்ந்தேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய மேட்டூர் வாழ்க்கை எளிமையைக் கற்றுத்தந்தது.
வளைகுடாவுக்குச் சென்றதும் கற்றுக்கொண்ட முதல் பாடம், வேலையைச் செய் + பணம் சேமி. கடிகாரத்தைப் பார்த்துப் பழக்கப்பட்ட அரசுப் பணிக்கும், கடிகாரத்தைப் பார்க்கவே நேரமில்லாத வளைகுடாப் பணிக்கும் இடையே ஆறு வித்தியாசங்களுக்கும் மேல். உழைப்பைத் தவிர வேறெதையும் நினைக்க நேரமில்லாத அளவுக்குதான் அங்கு வேலை நேரம் இருந்தது. பணிமுடித்து வீட்டுக்கு வந்ததும் படுக்கையில் விழத்தான் உடலும் மனமும் கெஞ்சும். அன்றைய வளைகுடா அணுகுமுறை இப்போது சென்னையிலும் வந்துவிட்டதாக உணர்கிறேன். பணியழுத்தம் என்பது உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. அன்று முதன் முதலாகப் பணியழுத்தத்தை உணர்ந்ததை இங்கு குறிப்பிடுகிறேன் என்ற அளவில் இதைக் கடந்துவிடுங்கள்.
வளைகுடா நாட்டினர் தங்கள் மொழியில் ஏற்றுக்கொண்ட தளர்வுகள் எனக்குப் பிடித்தன. எந்த அரபியும் ஒழுங்காக அரபி பேசாத நம்மை ஏளனம் செய்ததில்லை. நம்மிடம் வேலை வாங்குவதற்காக அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டனர் என்றும் சொல்லலாம்.
அரசு அலுவலகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துத் தொடர்பாடல்களிலும் அரபி மொழி பேசாமலே ஆண்டுக்கணக்கில் வளைகுடாவில் வாழமுடியும். துபாய் போன்று வெளிநாட்டவர் அதிகமான அளவில் குடியிருக்கும் நகரங்களில் இது சாத்தியப்படுவதை இங்கு குறிப்பிடவில்லை; தாயிஃப், ஹஃபூஃப் போன்று உள்நாட்டவர் அதிகமாக வாழும் சவூதி அரேபிய நகரங்களிலும் அரபி மொழித் தளர்வு உள்ளது.
வளைகுடாவில் பணியில் இருக்கையில் அரபிகளின் மொழித்தளர்வுக்குப் பின், ஜப்பானியர்களிடம் கற்றது செயல்முறைகளிலிருந்து இம்மியும் மாறாத தன்மை. கோடு போட்டற் போலச் செல்வது அவர்களது வழக்கம். நேரந்தவறாமை அவர்களுக்கு இயல்பு.
எகிப்தியர்களின் நீளமான வாக்கிய அமைப்புகள் பிடிக்கும். வளைகுடா வாழ்க்கையின் கடைசி ஏழு ஆண்டுகள் எகிப்தியப் பொறியாளர்களுடன் கழிந்தது. உரையாடலை எவ்வளவு சுருக்கமாக முடிக்கலாம் என நாம் யோசிப்போம்; எவ்வளவு விளக்கமாக உரையாடலாம் என அவர்கள் யோசிப்பார்கள். உரையாடல் கலையில் சிலவற்றை அவர்களிடமிருந்து பெற்றேன்.
தேவைக்குக் கீழ்ப்படியும் குணத்தை பிலிப்பைனியர்களைப் போல் நமக்குக் கற்றுத்தர வேறு நாட்டவர்கள் கிடையாது. பதினான்கு ஆண்டுகள் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களுடன் தொடர்பாடலில் இருந்தேன். தொழில் நுட்ப உரையாடல்களில் தங்கள் மேலாளரிடம் மாற்றுக்கருத்தை அதிமென்மையாக முன்வைப்பார்கள். குறிப்பிட்ட பணியை மட்டும் திறம்படச் செய்யும் தன்மை பிலிப்பைனியர்களிடம் உண்டு.
முன்னெல்லாம் ஊருக்கு ஒரு இஞ்சினியர் இருப்பாங்க, இப்ப எங்க பாத்தாலும் இஞ்சினியர் இருக்காங்க என்கிற எள்ளலை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
முன்பெல்லாம் ஊருக்கு ஒரு பெரிய மனிதர் இருப்பார், இப்போது அப்படியா? என்னும் எதிர்க்கேள்வியுடன் இதற்கான பதிலைத் தொடங்கலாம்.
நல்ல பொறியாளர்களின் தேவை எப்போதும் இருக்கிறது. கட்டிடங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், கட்டிடக்கலைஞர்களின் வேலை வாய்ப்பை அதனுடன் தொடர்புபடுத்துங்கள். தெருவில் நீங்கள் பார்க்கும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், அது தொடர்பான பொறியாளர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்பை அதனுடன் இணைத்துக் கணக்கிடுங்கள். போலவே, மென்பொருள், தொலைதொடர்பு, தொலைக்காட்சி என ஒவ்வொரு துறையிலும் பொறியாளர்களின் தேவை இருக்கிறது, அதற்காகப் படித்து அந்தந்தத் துறையில் செயல்பட பொறியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இயல்பாக நடக்கும் இதில் எள்ளி நகையாட ஏதும் இல்லை.
அவர்கள் திறமையான பொறியாளர்களா? இல்லையா? வேலைபெறுந்திறன் (எம்ப்ளாயபிலிட்டி) அவர்களிடம் உள்ளதா? என்னும் நிர்வாகவியல் பாணிக் குறுக்குக்கேள்விச் சரடுகளைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் விவாதம் செய்யலாம். அது தேவையற்றது.
சந்தையில் வேலை வாய்ப்புக்காகப் பொறியியலின் பக்கம் மாணவர்கள் சாய்கின்றனர் என்ற அளவில் இந்தக் கேள்வியைக் கடப்பது நல்லது.
கல்வியின் முக்கியத்துவம் பற்றி?
கல்விதான் நம்மை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கேனும் இருக்குமா?
தற்காலத்தில் சமோசா விற்பனையைச் சுட்டிக்காட்டி சமோசா விற்பவர்கள் கல்வி கற்றவர்களைவிடவும் அதிகமாக சம்பாதிக்கின்றனர் என நிறுவிக் கல்வியைக் கேள்விகேட்கும் விழியங்கள் சிலவற்றைப் பார்க்க முடிகிறது. கல்வியைப் பொருளீட்டுவதுடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கும் அணுகுமுறை இருக்கும் வரையில் இப்படியான சமோசாவுக்கும் கல்விக்குமான ஒப்பீடுகள் இருக்கும். வணிகம் தவறல்ல, சிறுவியாபாரம் தவறல்ல, ஆனால் எப்போதும் அதைக் கல்வியுடன் தொடர்புபடுத்திக் கேள்வி கேட்பது தவறு.
பட்டயப் படிப்பை முடித்துவிட்டு இயந்திரவியலில் வேலைக்குச் சேரும் கதாநாயகன் ஒருகட்டத்தில் இயந்திரவியல் பட்டதாரியாக ஆகாமல் பதவி உயர்வு கிடைக்காது என்னும் களநிலவரத்தை உணர்ந்த பின்னர், மாலை நேரக் கல்வியில் தன் பட்டப்படிப்பைத் தொடர்வதைக் கதைக்கருவாகக் கொண்டு ‘மின்தூக்கி’ என்னும் நாவலை எழுதினேன். கல்வியின் அவசியத்தைப் பேசும் நாவல் அது.
கல்வி முக்கியமானது.
சாட்ஜிபிடி போன்ற ஏஐ காலம் இப்போது. இது எழுதும் கலையைப் பாதிக்குமா!?
இப்போதைக்கு எழுதும் கலையைப் பாதிக்காது. ஆனால் அதிகமான எழுத்துகள் சந்தைக்கு வரும். ஏஐ மூலமாக எதையெனும் எழுதி அல்லது மொழிமாற்றி எடுத்துக்கொண்டாலும் அதைப் பதிப்பிக்கும் முன்னர் எழுத்தாளர் திருத்தம் செய்து சிறப்பாக்கி வெளியிடவெண்டுமென்றால், அவர் எழுதும் கலை அறிந்தவராகத்தான் இருக்கவேண்டும். ஏஐ தருகின்ற மொழி நடையைப் படித்து அதன் வாக்கிய அமைப்புகளில் திருத்தம் செய்யத் தெரிந்த ஆசிரியராகவும் அந்த எழுத்தாளர் இருக்கவேண்டும்.
எழுத்தாளர்களின் பாணியையும் மொழிநடையையும் அதுவாகப் படித்து அறிந்து நகலெடுத்து அடிபிறழாமல் கதை எழுதும் அளவுக்கு ஏஐ வளர்ந்த பின்னர், அது எழுதும் கலையைப் பாதிக்கும். அந்தக் காலகட்ட்த்தில் குறைந்தபட்சம் ஏஐயினை ஏவுவதற்குத் (ப்ராம்ப்ட்) தரும் விவரங்களையாவது சரியாக எழுதும் திறனும் கற்பனையும் ஏஐயினைப் பயன்படுத்தப்போகும் எழுத்தாளருக்கு வேண்டும்.
சவூதி, துபாய் வளைகுடா வாழ்வை ஒட்டுமொத்தமாக துண்டித்து விட்டு சென்னைவாசியாக மாறியதை எவ்வாறு உணர்கிறீர்கள்?
அது இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்ட நகர்வு என்பதால் மனச்சாய்வின் அடிப்படையில் ஏக்கங்கள் கிடையாது. ஆனால், திட்டத்தில் எதிர்பாராதவிதமாக கொரோனாக்காலம் இடையில் நுழைந்ததால், ஒரு கட்டத்தில் தவறான முடிவினை எடுத்ததாகவும் உணர்ந்தேன். கொரோனா இடர்கள் தவிர்த்து வேறு எந்த இடர்பாட்டையும் உணரவில்லை.
வளைகுடாவிலிருந்து சென்னைக்குத் திரும்பும் திட்டத்தை இந்தக் கடைசி முயற்சிக்கு முன்பும் இரண்டு முறைகள் முயன்று, தோற்று, மீண்டும் வளைகுடாவுக்குப் புறப்பட்டதால் உணர்வின் அடிப்படையில் எந்தப் பாதிப்பும் கிடையாது. இது இப்படித்தான் இருக்கும் என்பது முன்பே தெரிந்துவிட்டால் அங்கு திகைப்புக்கு வாய்ப்பில்லை.
மூளைக்குச் சிறிது ஓய்வுகொடுத்துவிட்டு மனச்சாய்வின் அடிப்படையில் மட்டும் இந்தக் குடியிருப்பு மாற்றத்தை அணுகினால், நான் துபாய் மாநகரின் பக்கம் சாய்ந்தவனாகவும், என் மனைவியும் குழந்தைகளும் ஜித்தா மாநகரின் பக்கம் சாய்ந்தவர்களாகவும் இருக்கிறோம்.
துபாயின் உள்கட்டமைப்பும், சாலை விதிகளும், நீக்கமற நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களும் எனக்குப் பிடித்தவை. எண்ணற்ற விண்ணுயர் கட்டிடங்கள் உள்ள நகரமாதலால் என் தொழிலான மின்தூக்கி வடிவமைப்பில் நிறையக் கற்றுக்கொள்வதற்கு துபாய் வாய்ப்பளித்தது, அதனால் துபாயை எனக்குப் பிடிக்கும்.
ஜித்தாவில் குடும்பத்தினருடன் நான் வாழ்ந்த காலகட்டத்தில் அங்கு திரையரங்கங்களும் பொது நிகழ்ச்சிகளும் கிடையாது. அலுவலகம், அலுவலகம் முடிந்தால் வீடு, மாலையில் கண்டிப்பாக்க் குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்வது, தமிழ்ச் சங்கம், கல்விச் சேவைகள் என அனைத்தும் சுற்றிச்சுற்றி நட்பும் சுற்றமும் சூழ்ந்ததாகவே அமைந்து வேலை நேரம் தவிர்த்த மற்ற நேரம் முழுக்கக் குடும்பத்துடன் இருக்கும் வாய்ப்பு இருந்ததாலும், குழந்தையின் பள்ளிப்பருவம் ஜித்தாவில் தொடங்கியதாலும், அந்தச் சூழல் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
இவ்விரண்டு மனச்சாய்வுகள் தவிர்த்து வேறெதுவும் பெரிதாக ஏக்கங்கள் இல்லை.
வளைகுடா - சென்னை இடமாற்றம் தொடர்பாக மக்கள் சொல்லத் தயங்கும் முக்கியமான விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். வளைகுடாவில் இருக்கையில் நமக்குச் சுற்றத்தில் இருக்கும் மதிப்பு வளைகுடாவை விட்டுத் திரும்பிய பின்னர் இருப்பதில்லை. நமது வளைகுடா வருமானத்தை விடவும் அதிகமாகச் சென்னையிலேயே பொருளீட்டும் சுற்றமாக இருப்பினும், அந்தச் சுற்றமும் நாம் வளைகுடாவில் இருப்பவரென்றால் தனி மதிப்பு தரும். இன்னும் பலருடைய பார்வையில் வளைகுடா வாழ்க்கையென்றால் பெரும்பணக்காரர்கள் என்னும் நினைப்பு இருக்கிறது.
எழுத்து, இலக்கியம் தாண்டி மூதலீடு, சேமிப்பு குறித்த உங்கள் நிபுணத்துவம் எப்போது ஆரம்பித்தது?
நிபுணத்துவம் என்னும் வார்த்தையைத் தயைகூர்ந்து தவிர்த்துக்கொள்ளுங்கள். முதலீட்டில் நான் நிபுணத்துவம் பெற்றவன் அல்லன்.
வளைகுடாவிலிருந்து சென்னைக்குத் திரும்பிய முதல் முயற்சியின்போது முதலீடு தொடர்பான விழிப்புணர்வு கிடைத்தது. ஆண்டு இரண்டாயிரத்து ஏழில் இது நடந்தது. ஈநாடு, வரவேற்பு என நீங்கள் பார்த்திருக்கக்கூடிய மலையாளத் திரைப்படங்களில் நாட்டுக்குத் திரும்பும் வளைகுடாவாசிக்கு என்ன நடக்கிறதோ, சரியாகத் திட்டமிடாமல் நாட்டுக்குத் திரும்பியோருக்கு என்ன நடக்கிறதோ, அது எனக்கும் நடந்தது. தொடங்கிய தொழிலில் வெற்றிபெற முடியாமல், சேமிப்பாக இருந்தவை கரைய, சில மாதங்களில் எதிர்காலம் கேள்விக்குறியாகி, தீயணைப்பு முயற்சியாக மீண்டும் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்ற அனுபவம், அதன் பிறகு யோசித்து முதலீடு செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
முதலில் சேமிப்பது, குறிப்பிட்ட அளவு அந்தச் சேமிப்பு வளர்ந்ததும் அதனை எடுத்துக் குறைந்த இழப்பு உண்டாக வாய்ப்பிருக்கும் முதலீடுகளுக்கு மாற்றுவது, அதில் ஓரளவு பணம் சேர்ந்த பின் அதிலிருந்து அதிக இழப்பு உண்டாக வாய்ப்பிருக்கும் முதலீடுகளுக்கு மாற்றுவது, அனைத்தையும் தேவைக்கேற்ப சமன் செய்துகொண்டே முதலீடுகளைத் தொடரும் அணுகுமுறை இன்றைக்கு அனைவரும் அறிந்தது.
இந்த அணுகுமுறையைக் கற்றுத் தர அன்று ஆசிரியர்கள் இல்லை. வங்கிச் சேமிப்புதான் முதலீடென்றும், சென்னைக்கு அருகில் திண்டுக்கல்லில் காணி நிலம் வாங்குவதுதான் முதலீடென்றும், செய்கூலி சேதார விலைக்கூட்டல்களுடன் நகை வாங்குவதுதான் சேமிப்பென்றும் அறியப்பட்ட காலகட்டத்தில் வளைகுடாவில் வாழ்ந்து பழக்கப்பட்டவர் நாங்கள்.
பங்குச்சந்தையைக் கற்றுத்தரவும் ஆள்கள் இல்லை. ‘டிமேட்’ கணக்கென்ற ஒன்றே வழக்கத்தில் இல்லாத காலகட்டத்தில் எங்காவது அறிந்தவர் தெரிந்தவர்களிடம் பங்கு விண்ணப்பப்படிவம் வாங்கி வரைவோலை எடுத்துப் பதிவு அஞ்சலில் அனுப்பி, பங்கு ஒதுக்கப்பட்ட விவரத்தையும் பதிவு அஞ்சலில் அவர்களிடமிருந்து பெறக் காத்திருந்து, நுரை தள்ளிய காலகட்டத்தைக் கடந்திருக்கிறோம்.
டிமேட் உண்டான பின் அனைத்தும் அனைத்தும் சொடுக்கில் நடக்கின்றன.
மீண்டும் கேள்விக்கு வருவோம். நிபுணத்துவம் அடையவில்லை, கற்றுக்கொண்ட பாடங்கள் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொடுத்தன. முதலீட்டில் அடைந்த இலாப நஷ்டங்கள் முதலீட்டைப் பிரித்து வைக்க வேண்டிய கட்டாயத்தைக் கற்றுத் தந்தன. இன்றைக்கு மிகவும் எளிதாக இளைஞர்கள் செய்யக்கூடிய குறுகிய இலாபம் - நீண்ட காலத் திட்டம் என முதலீட்டை இரண்டாகப் பிரிக்கும் அணுகுமுறையைக் கடினமான பாதையில் சென்று நாங்கள் கற்றுக்கொண்டோம்.
30+ ஆண்டுகால வளைகுடா வாழ்க்கையில் 15+ ஆண்டுகளாகத்தான் இந்த விழிப்புணர்வு என்னிடம் உள்ளது.
இன்றைய வளைகுடாவாசிகளுக்கான உங்கள் அறிவுரை என்ன?
இன்றைய வளைகுடாவாசிகள் அனைவரும் சேமிப்பிலும் முதலீட்டிலும் கெட்டிக்காரர்கள். அளவில்லாத ரீல்ஸ்களும், யூட்யூப் சானல்களும், புத்தகங்களும், இணைய வகுப்புகளும் முதலீடு தொடர்பாகக் கற்றுத் தருகின்றன. அவர்களுக்கு அறிவுரை எனத் தனியாக எதுவும் தேவையில்லை. ஆனால், அனுபவப் பகிர்வு என வேண்டுமானால் சிலவற்றைச் சொல்கிறேன்.
Ø உங்களுடைய சம்பளத்தை யாரிடமும் சொல்லத் தேவையில்லை.
Ø வளைகுடாவில் முதல் சம்பளம் பெற்ற நொடியிலிருந்து உங்கள் சேமிப்பு தொடங்கவேண்டும்.
Ø உங்கள் ‘வெளிநாடு வாழ் இந்தியர் வங்கிக் கணக்கு’ உங்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும்.
Ø நிலச்சொத்துகள் அனைத்தும் உங்கள் பெயரில் மட்டும் பதிவு செய்யப்படவேண்டும். சொத்துகளின் பத்திரங்கள் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும்.
Ø உங்கள் சேமிப்பு, முதலீடு, வங்கியிருப்பு அனைத்தையும் எழுதிவைத்தோ, எக்செல் ஷீட்டில் இட்டோ யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைப்பதும், குறிப்பிட்ட இடைவெளியில் அதை இற்றைப்படுத்தி வைப்பதும் முக்கியம்.
Ø பிரித்து முதலீடு செய்வது நல்லது. அசெட் அலக்கேஷன் என்பார்கள். வைப்பு நிதி, பரஸ்பர நிதி, பங்குச்சந்தை, தங்கம், டிஜிட்டல் தங்கம், நிலச்சொத்துகள், நிறுவனப் பத்திரங்கள் எனத் தேவைக்கேற்பப் பிரித்து முதலீடு செய்யவேண்டும்.
Ø அனுபவம் உள்ள நல்லவர்களிடம் முதலீட்டு ஆலோசனை பெறவேண்டும்.
Ø திருக்குறள்தான், சொன்னால் தேய்வழக்கென இளைஞர்கள் ஒதுக்குவார்கள். ஆனால், எல்லா அறிவுரைகளும் சுற்றிச்சிற்றி அங்குதான் வந்து நிற்கும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை
குறள்: 478
பொருள்:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
— மு. வரதராசன்
வளைகுடாவிலிருந்து சென்னைக்கு வந்து எழுத்தை முதன்மையாகக் கொண்ட பின் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை - தமிழ் இலக்கியம் படித்தீர்கள், பின்னர், முதுகலை – தமிழ் எனப் படிப்பைத் தொடர்கிறீர்கள். தமிழ் பயில்வதற்கான காரணம் என்ன?
தமிழின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழ் பயில்கிறேன்.
இலக்கியத்தையும் இலக்கணத்தையும் அறிந்துகொள்ள இணையப்பெருவெளியில் வாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பாடத்திட்டங்கள் வாயிலாக ஒரு மாணவனைப் போலப் பயின்று தேர்வெழுதினால் என்னவெனத் தோன்றியது, மூன்றாண்டுகள் தொலைவழிக் கல்வியாக இளங்கலை – தமிழிலக்கியத்தில் சேர்ந்தேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆர்வத்தில் முதுகலை – தமிழ் பயிலச் சேர்ந்து கல்வியைத் தொடர்கிறேன். அதில் முதலாம் ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளையும், நன்னூலின் சில பகுதிகளையும், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், இவற்றின் பகுதிகளையும், சங்க இலக்கியத்தையும், இடைக்கால இலக்கியத்தையும், இக்கால இலக்கியத்தையும் பாடத்திட்டத்தின் வழியாகப் படித்துத் தேர்வெழுதி மதிப்பெண் பெறுவது சுறுசுறுப்பாக இயங்கச் செய்தது.
கணினியில் தமிழில் 30000+ வார்த்தைகளில் நாவல் எழுதிப் பழகிய பின், தேர்வுக்கூடத்தில் வினாக்களுக்கு 300 வார்த்தைகளில் விளக்கம் எழுதுவதும், 1000 வார்த்தைகளில் கட்டுரை வரைவதும் முதலாம் ஆண்டுத் தேர்வில் இயலாததாகத் தோன்றின. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்று மணி நேரத்தில் விடைத்தாளில் 20+ பக்கங்கள் தமிழில் எழுதுவது பழக்கப்பட்டது. மேற்சொன்னதுபோல் இந்தக் கல்வி என்னைச் சுறுசுறுப்பாக்குகிறது.
நன்றி.
சார்ஜா