பாலமுருகன். லோ
தமிழ்நாடு
கேலக்ஸி பதிப்பக வெளியீடான, எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் அவர்களின் ‘மழையில் நனையாத குடை’ நூலிலிருந்து ‘முன்பனியும் பின் மறையும்’ என்னும் சிறுகதை குறித்து எனது வாசிப்பனுபவம் இது.
கமீலா மற்றும் அமீர் குடும்பங்களைச் சுற்றி வரும்படி கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியிருப்பார் கதையாசிரியர். இருவர் வீட்டிலும் ஆட்களின் எண்ணிக்கை அதிகம்.
அமீருடைய நண்பன் சிராஜ், இவனைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. சிராஜ் தனது சொந்த ஊருக்குப் போக வேண்டி, பேருந்தில் ஏறி சன்னல் ஓர இருக்கையாகப் பார்த்து அமருகிறான். அந்தச் சமயத்தில் பேருந்து நிலையத்தில் தேநீர்க் கடை தொடங்கி, பூக்கடை, மிட்டாய்க் கடை, பேக்கரி, உணவகம், அங்கும் இங்குமாக நடமாடும் மனித கூட்டம், அதுமட்டுமா பாதசாரி வியாபாரிகள் தங்களது தலையில் தின்பண்டங்களைச் சுமந்து கொண்டு பேருந்தினுள் ஏறியும், இறங்கியும் அவர்களது வியாபாரத்தை மேற்கொள்கிற அழகையெல்லாம் தெளிவாக உள்வாங்கித் தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார் ஆசிரியர்.
நிறத்தை வைத்துப் பாகுபடுத்திப் பெண்களைப் பார்க்கும் கும்பல் இன்னும் இவ்வுலகில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வு இவ்வுலகி நிலைத்து நிற்கிறதா அல்லது சின்னாபின்னமாக மாறி விடுகிறதா என்பதைப் பேசுவதுதான் கதையின் களம். இதில் என்ன வேதனையான விஷயமென்றால் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருத்தியைக் கல்யாணம் கட்டிக்கொண்டு அவனது வீட்டிற்குக் கூட்டிவந்த பிறகு அவளுக்கு இழைக்கப்படும் துன்பங்களைச் சொல்லும் கதையாய் நகர்வதுதான்.
"கொட்டிய வார்த்தை அள்ள முடியாது" என்பதற்கு ஏற்ப அமீரின் தாய், கமீலாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று தீர்ப்பாள். மேலும் அமீர் கல்யாணம் செய்து கூட்டிக்கொண்டு வந்த நாட்களிலிருந்து கமீலாவை இரவு தேவைகளுக்கு மட்டும் உபயோகப்படுத்தும் ஒரு போதைப் பொருளாகத்தான் வைத்திருப்பான். அவன் அவளைத் தன் மனைவியாக ஒரு நாளும் சிந்தித்ததில்லை.
கமீலா எப்படியெல்லாம் அமீரின் குடும்பத்தாருடன் போராடினாள் என்பதை விரிவாகத் தனது எழுத்துகள் மூலம் நமக்குத் தெரியப் படுத்தியிருப்பார் கமீலா அவளது வாழ்கையை மாற்றி அமைத்துக்கொண்டாளா? அல்லது அவளது வாழ்வை அந்தப் பாழும் கிணற்றில் விழுந்து தனது வாழ்வை மேலும் கஷ்டமாக்கிக் கொண்டாளா? என்பதை கதையை முழுமையாக வாசிக்கும் போது உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த மழையில் நனையாத குடை தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகளை உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒன்றை ஒன்று தழுவி இருக்காது, ஆசிரியரின் வர்ணிப்பு அழகாக அமைந்திருக்கிறது. ஆக மொத்தத்தில் கதைகள் யாவுமே படிப்பவரின் மனதைத் தொடும் என்பதில் எந்த வித ஐப்பாடுமில்லை. கதையைத் தேடித்தேடிப் படிப்பவருக்கு இந்த மழையில் நனையாத குடை ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கட்டாயம் ஏற்படுத்தும். ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
இந்தப் புத்தகத்தின் விலை 180 ரூபாய். இதை வாங்க வேண்டுமானால் கேலக்ஸி புக்ஸ் இணையத் தளப் பக்கத்தில் www.galaxybs.com என்ற இணையப் பக்கத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.