நூர் பாத்திமா
ஷார்ஜா
மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடே சிந்திக்கும் திறன் தான். மனிதனின் சிந்தனைகள் தான் அவனை மிகச்சிறந்த படைப்பாளியாகவும், வியாபாரியாகவும், எழுத்தாளனாகவும், கவிஞனாகவும் மாற்றுகின்றன. ஆனால், இன்றுள்ள AI உலகம் மனிதனை சிந்திப்பதிலிருந்து தடுக்கிறது. முக்கால் கணக்கு அரைக்கால் கணக்கெல்லாம் மனதிலே போட்ட காலம் சென்று இன்று எதற்கெடுத்தாலும் கைப்பேசியை பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது தெரிந்தால் கூட கைப்பேசியின் கால்குலேட்டர் சொன்னால் தான் நம்புவோம் என்ற நிலையில் இன்று பலர்.
எண்ணற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்று நம் கண்முன்னரே இருந்தாலும் மனிதர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் உள்ளார்கள் என்று சொல்கிறது கணக்கெடுப்பு.
மனிதன் சிந்தித்து தான் செயல்பட வேண்டும். சிந்தித்து தான் முடிவு செய்ய வேண்டும். இன்றைய சிந்தனைகள் தான் நாளைய செயல்களாகவும், மிகப்பெரிய மாற்றமாகவும் மாறுகின்றன.
சிந்தனைகளை சரியாக செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்
1. உலகில் இரைச்சல் அதிகமாகிவிட்டது, மனதிலும் தான். மனம் தேவையோ தேவை இல்லையோ பல ஆயிரக்கணக்கான சிந்தனைகள் மனதில் வந்து செல்கின்றன. இவையனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து மூச்சினை கவனிக்கலாம். மூச்சு மட்டும் தான் நாம் உலகில் இருப்பதற்கான இருப்பினை உறுதி செய்கிறது. நம்மில் உள்ள உள்ளுறுப்புகளையெல்லாம் இயங்கவைக்கும் மூச்சினை சிறிது நேரம் (15 நிமிடங்கள்) கவனிக்கும் போது, மனம் சற்று அமைதிப்படும். அமைதியான மனதினில் தான் தெளிவான சிந்தனகள் உண்டாகும்.
2. கேள்விகள் கேளுங்கள் : கேள்விகள் நமக்குள் நாமே கேட்க வேண்டும். உலகத்தில் இத்தனை பேர் இருக்கும் எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது என்ற சிந்தனை இருந்தால் அது எதிர்மறை. அதனால் உங்களுக்கும் உங்களை சுற்றிநுள்ளவர்களுக்கும் நன்மை இருக்காது. அப்படி அல்லாமல், இந்த சூழ்நிலை எனக்கு என்ன பாடம் கற்பிக்கிறது..? நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்..? என்று நினைக்கும் போது ஒட்டுமொத்த சூழ்நிலையும் உங்களுக்கானதாக மாறிவிடும்.
3. 5 நிமிட விதி : ஏதோ ஒரு எண்ணம் அல்லது ஒரு ரீல்ஸ உங்களை, நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை பாதிப்பமாக உணர்ந்தால். உடனடியாக 5,4,3,2,1 என்று ஆழ்ந்த மூச்சிற்கு பின் எண்ணிவிட்டு உடனே அந்த வேலையினை தொடங்கி விடுங்கள். இதனால் தள்ளிப் போடும் பழக்கம் குறையும்.
4. கைப்பேசியை அணைத்துவிடுங்கள்: கைப்பேசியினை அமைதியாக்கிவிட்டு உங்கள் பணியினை தொடருங்கள்.
எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் தொடந்து கவனம் செலுத்தினால் வாழ்வு செழிப்பாகும்.