ஜெஸிலா பானு
துபாய்
நம் மனம், துடுப்பில்லாத படகுபோல் நடுக்கடலில் சிக்கியதற்கு ஒத்தது.
வேலைக்குச் செல்லும் போது எதிர்கொள்ளும் போக்குவரத்து, மேலாளர் அவருக்கு இருக்கும் பிரச்சனையைச் சம்பந்தமே இல்லாமல் நம் தலையை உருட்டுவது, கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது பலவிதமான வெளி மன அழுத்தத்தை வீட்டில் கொண்டு வந்து கொட்டுவது, இப்படி மன அமைதியின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
சிறு குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று சமயங்களில் நமக்குப் புரிந்து கொள்ள முடியாதே, அதேபோல் சில நேரங்கள் என்னவென்றே புரியாமல் நமக்குக் கோபம் வரும், எரிந்து விழுவோம். ஏதோ ஒருவித எண்ணற்ற பாரம் குடி கொண்ட உணர்வு எழும். குழப்பமான மனநிலைக்குத் தள்ளப்படுவோம்.
“இன்னும் இவ்வளவு பணி இருக்கா முடிக்க?”, “ஏன் எதுவுமே சரியாக நடக்கவில்லை?”, “ஏன் இப்படி நடந்தது?” என்று சிந்திப்பதும், நண்பர் ஒரு சிறிய தவறு செய்தால் அதற்குப் பெரும் மனச்சோர்வு கொள்வதும், சின்ன விஷயமோ பெரிய விஷயமோ அதற்கு மீளவே முடியாது என்பதாகச் சோகம் சூழ்வது, என்று உணர்வுகளின் சிக்கல்களில் நாம் மாட்டிக் கொள்கிறோம்.
எது எதற்கோ திறன் வளர்க்கும் பயிற்சிக்குச் செல்கிறோம். அல்லது இணையத்தில் தேடி தேவையானவற்றைத் தெரிந்து கொள்கிறோம், கற்க முயற்சிக்கிறோம். அதுபோல் மன சுமைகளுக்கு இடையில் மன அமைதியை நிலைநிறுத்துவதும் நமக்குத் தேவையான திறமைதான். அது நம் மனதை நிம்மதி நிறைந்த ஓய்வுக்குக் கொண்டு செல்லும்.
அன்றாட வாழ்க்கை உதாரணங்கள்:
மாலை நேரம், வீட்டிற்குப் போகும் போது: ஒரு கடுமையான நாளை கழித்த சோர்வில், வீட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள். குழந்தைகள் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்டு நிற்கின்றனர். மனைவியும் உங்களிடம் தன் அலுவலக வேலை சுமை பற்றிப் பேசுகிறார். இதனால் உங்கள் மனதில் பதட்டமும் சலனமும் அதிகமாகிறது. அப்படியில்லாமல் இந்தப் பொழுதை நீங்கள் சீராக்க முயற்சி செய்யலாம். சில நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, கண்களை மூடி, "இதுவும் கடந்து போகும்" என்று மனதை நிம்மதியாக்கலாம். மூச்சு பயிற்சி மனதை சாந்தமாக்கும் ஒரு முக்கியப் பயிற்சி.
அடர்த்தியான போக்குவரத்தில் நின்று கொண்டிருக்கும்போது: விரைவில் சென்று சேர வேண்டிய இடம் இருப்பினும், நெரிசல் காரணமாக நின்று கொண்டிருக்கிறீர்கள். மனதில் அன்றைய அழுத்தங்கள் அலைப்பாயும், வேலை பற்றிய சிந்தனைகள் மனதில் தடுமாறும். அந்த நேரத்தில் நம் சிதறிய எண்ணத்தில் கவனம் செலுத்தி. அது அன்றாட நிகழ்வுதானே என்று ஏற்றுக்கொண்டு, “இப்போது இது என்னுடைய நேரம், இதில் நமக்கு மகிழ்ச்சி தரும் செயலைப் பற்றி சிந்திப்போம்” என்று தன்னைத்தான் ஆற்படுத்துவதும் ஒருவித கலைதான்.
ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் நம்மை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும் போது: அதனால் நம் மனதில் இன்னல் புகும், ஏதோ ஒரு வகையான சோர்வு உண்டாகும். ஆனால் “நான் அவர்களை மாற்ற முடியாது, ஆனால் என் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்” என்று எண்ணுவது மிகவும் முக்கியம்.
மன அமைதிக்கான சில வழிகள்:
1. தன்னைக் கவனித்துக்கொள்ளுதல்
உங்கள் மனம் சோர்வு அடைந்தால், அதன் அடிப்படை காரணத்தை உணர்ந்து, அதிலிருந்து மீண்டுவிட்டாலே, அந்தச் சிந்தனையிலிருந்து விடுபட்டாலே பேருதவி. சிறிது நேரம் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். அல்லது நீங்கள் விரும்பிய பொழுதுபோக்கில் மனம் கரையலாம். நூல் வாசிக்கும் பழக்கமிருந்தால் அதில் மூழ்கலாம். இது உங்கள் மனதிற்குச் சிறிய ஓய்வைப் பெற்றுத் தரும்.
2. அன்றாட நன்றி உணர்வு
சின்ன வெற்றி, ஒரு சிறு புன்னகை, அன்பான வார்த்தை போன்றவற்றுக்கு நன்றி கூறுங்கள். உதாரணமாக, காலை எழுந்ததும் “இன்று என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கிறது” என்று நினைத்து மகிழுங்கள். காலை உணவு சுவையாக இருந்தால், பாராட்டி நன்றி தெரிவியுங்கள். இரவில் உறங்க செல்லும் முன் அன்று நடந்த நல்லவற்றை நினைத்து மன ஆறுதல் பெறுங்கள்.
3. எதிர்பார்ப்புகளைக் குறைத்தல்
“அவர்களிடமிருந்து முழுமையான புரிதலை எதிர்பார்க்கமாட்டேன்” என்று நினைத்தாலே போதும், மன சுமை குறையும். நீங்கள் செய்த உதவிக்குப் பிரதிபலம் எதிர்பார்க்காமல், உதவியாக இருந்தது குறித்து நினைத்தாலே மனம் மகிழும்.
4. நிம்மதியான மூச்சுப் பயிற்சி
சோர்வான, பதட்டமான நேரங்களில் மூச்சை ஆழமாக இழுத்து விட்டாலே. நிமிடங்களில் மனதில் அமைதி தரும்.
5. தியானம்
மதியம் சாப்பிட்ட பின், 5 நிமிடம் கண்களை மூடி அமைதியாக அமருங்கள். அன்றாட எளிய முயற்சி தான் நம் மனதை வலுப்படுத்தும்.
நிறைவாக…
நம் மன சுமைகள் ஒரு மாலை அசுவாசமோடு வீசும் காற்றுப்போல, அதுவும் தளர்ந்து போகும். ஆனால் அதற்கிடையில் நாம் மனதில் அமைதியைத் தாங்கிக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் சவால்கள் மற்றும் சந்தோஷங்கள் எல்லாம் நமது மனதிற்குள் ஒரு சமநிலை உருவாக்கும் வரை பயிற்சி தொடர வேண்டும்.
“அமைதி என்பது வெளியில் காண்பது அல்ல, உள்ளே உணர்வது.”
நாம் நம் உள்ளார்ந்த அமைதியோடு வாழும் போது, வெளியுலகின் குழப்பங்களும் நமக்குப் பெரிதாய் தாக்காது. அந்த அமைதி தான் நம் மனதில் உண்மையான மகிழ்ச்சியையும், சோர்வு இல்லாத ஓய்வையும் கொடுக்கும்.