ஆர். வி. சரவணன்
சென்னை
'மலரே மலரே உல்லாசம்…
உந்தன் நினைவோ நினைவோ சங்கீதம்…
உன்னை தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்…
இதயம் எழுதும் கவிதை நீ...........'
சில பாடல்கள் கேட்க நல்லாருக்கும். சில பாடல்கள் காட்சியாகப் பார்க்க நல்லாருக்கும். ஆனா கேட்கவும் பார்க்கவும் நல்லாயிருக்கிற பாடல்களில் ஒன்று 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' படத்தில் வரும் இந்த மான்டேஜ் சாங்.
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளை, இளையராஜா தன் இசையால் அழகுபடுத்த, ஜானகி தன் குரலால் பாடலை வசப்படுத்த, நான் மட்டும் விட்டு விடுவேனா என்றபடி இயக்குநர் பாலுமகேந்திரா ரஜினி மற்றும் மாதவியை கொண்டு தன் கேமரா கண்களால் கோர்த்திருக்கும் காதல் கவிதை இது.
பாடலில் வரும் சில வரிகளுக்கு நியாயம் செய்ய வேண்டி அவற்றை காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர். உதாரணத்திற்கு, முதல் சரணத்தில் தொடங்கும் 'தாவணி கோவிலில் காவடி சிந்துகள். யாரிசை சேர்த்ததோ. யார் மனம் வேர்த்ததோ .....' வரிகளுக்கு ஏற்றார் போல் மாதவி பாவாடை தாவணியில் துளிசி செடியை சுற்றி வருவார்.
'வீடெங்கும் காதலன் வாசனை வீசுதோ ........' வரிகளுக்கு மாதவி ரஜினியின் மடியில் படுத்தபடி அவரை ரசித்து கொண்டிருப்பார். 'தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ......' வரிகளுக்கு மாதவி ரஜினியின் காதை நிமிண்டுவார். 'வானிலே வெண்ணிலா யாரை தான் தேடுதோ. மோக நோய் தீரவே நீரில் தான் மூழ்குதோ.......' வரிகளுக்கு நிலா ஆக்ரமித்திருக்கும் நீர்நிலையை காட்சிப்படுத்தியிருப்பார்.
பாடல் முழுக்கவே ரஜினி, மாதவி இருவரும் உண்மையான காதலர்களின் உணர்வுகளை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள். அவற்றில் நான் ரசித்த தருணங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
0.22 நொடியிலிருந்து 0.24 நொடிக்குள் வரும் ரஜினியின் அந்த குறும்புச் சிரிப்பு.
1.33 நொடியிலிருந்து 1.39 செகண்டிற்குள் தலைகோதியபடியும் தலையை சிலிர்த்தபடியும் படகில் உலா வரும் ரஜினி மாதவியின் அந்த உற்சாகம்.
1.51 நொடியிலிருந்து வரும் காட்சியில் ரஜினி பேசி கொண்டிருக்க, மாதவி அவரது நெஞ்சில் சாய்ந்த படிரசித்து சிரிப்பது.
2.20 நொடியில், மீன் எப்போது தூண்டிலில் சிக்கும் என்று காத்திருந்து, சிக்கியவுடன் மௌனம் கலைத்து வெளிப்படுத்தும் உற்சாக துள்ளல்.
2.57 முதல் 3.01 நொடிக்குள் வரும் ரஜினி, மாதவியின் சிரிப்பு.
இப்படி இந்த பாடல் காட்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா அதகளப்படுத்தியிருக்கிறார்.
பாடல் முழுக்க ரஜினியும் மாதவியும் பேசிக் கொண்டே ஊட்டியை நடந்தே சுற்றி வருகிறார்கள். ரொம்ப நடந்துகிட்டே இருக்காங்களே என்று சில இடங்களில் இயக்குநர் அவர்களை அமர வைக்கிறார். நிற்கவும் வைக்கிறார். ஆக மொத்தத்துல நம்மை ரசிக்க வச்சிடறார். (ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சில காட்சிகள் மீண்டும் வருகிறது)
1985 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தப் படத்தை கும்பகோணம் மீனாட்சி திரையரங்கில் பார்த்தேன். இந்தப் பாடல் மட்டும் இத்தனை வருடங்களாக என்னோடு ஒட்டி கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன் என்பது கணக்கிலடங்கா.
இந்த பாடல் தந்த ஈர்ப்பினால் எனது முதல் நாவலுக்கு நான் வைத்த பெயர் இளமை எழுதும் கவிதை நீ....( இதயத்தை இளமையாக்கி கொண்டேன்).
இந்த பாட்டைக் கேட்கிறப்ப கண்மூடி கற்பனை பண்ணி பாருங்களேன். இரவு மழை நேரத்தில் காதலியோடு கை கோர்த்து குடை பிடித்து நடக்கிற மாதிரி. வார்த்தைகளில் கொண்டு வர இயலாத உணர்வு அது. அது இளையராஜா தந்த இசைக் கொடை.
பாடலில் ஒரு வரி இப்படியாக வரும் ' நீ பாடும் ராகம். உன் வாழ்வின் யோகம்......' என்று. இளையராஜாவை தான் மு.மேத்தா இப்படி சொல்லியிருப்பதாக எடுத்து கொள்ள தோன்றுகிறது.