சென் பாலன்
ஒமான்
ஊரின் பெயரைச் சொல்லாமல் அந்த ஊரில் நம்மை இறக்கிவிட்டால் கேரளத்து மூணாறு என்று தான் நினைப்போம். எந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமை, சலசலத்து ஓடும் நீரோடைகள், பஞ்சு போல உரசிச் செல்லும் மேகக்கூட்டங்கள், பாறை விளிம்பில் இருந்து வழியும் அருவிகள் என மலையாள தேசத்தின் மலை வாழ் நகரைப் போல இருக்கும் அந்த ஊர். ஆனால் அந்த ஊர் இருப்பது அரேபிய பாலைவனத் தீபகற்பத்தின் ஒமான் தேசத்தில் என்பது தான் நம்ப முடியாத செய்தி. அரேபியாவின் ஆபரணம் என் அழைக்கப்படும் அந்த ஊரின் பெயர் சலாலா.
மஸ்கட்டில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீ தூரத்திலும், நான் இருக்கும் நிஸ்வாவில் இருந்து சுமார் 850 கி.மீ தூரத்திலும் ஒமானின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர் சலாலா. மற்ற நேரங்களில் வறண்டு இருக்கும் அந்த ஊர் கரீஃப் காலம் (khareef) என்றழைக்கப்படும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் பசுமை போர்த்திக் கொள்ளும்.
இந்த சலாலா கரீஃப் காலத்தை நமது ஊரின் தென்மேற்கு பருவ காற்றோடு ஒப்பிடலாம். இரண்டின் இயங்கியலும் கிட்டத்தட்ட ஒன்று தான். வெப்ப மாதங்களில் அரபிக் கடலில் இருந்து ஆவியான மேகங்கள், தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி கன்னியாகுமரி முதல் மும்பை வரையிலும் தென் மேற்கு பருவ மழையை கொண்டு வரும். சலாலாவிலும் அதே போன்று தான். அரபிக் கடலில் இருந்து வரும் மேகக் கூட்டம் அப்படியே நகர்ந்து நிலப்பரப்பிற்குள் நுழையும். சலாலா நகரைச் சுற்றி “U” வடிவில் அமைந்துள்ள மலைகள் உள்நுழையும் மேகக்கூட்டத்தை தடுத்து மழையாக மாற்றுகின்றன.
உலகின் மற்ற எந்த மலை வாழ் இடங்களிலும் இல்லாத ஒரு மேஜிக், ஒரு மாயத்தன்மையை கொண்டது சலாலா. அந்த மாயத்தன்மையை காரில் சென்றால் மட்டுமே உணர முடியும். விமானத்தில் சென்றால் தவற விட்டுவிடுவோம். மஸ்கட்டில் இருந்து சலாலாவிற்கு ஆயிரம் கிலோமீட்டர் கடும் பாலைவனப் பயணம். எனக்கு இரவின் “லாங் டிரைவ்” மிகவும் பிடிக்கும் என்பதால் எங்கள் சலாலா பயணம் பெரும்பாலும் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும்.
ஆறு மணிக்கு பயணத்தை துவக்கினால், எரிபொருள் நிரப்பி, கொறிக்கும் தீனிகளுடன், ஒமானின் பறக்கும் சாலைகளின் வழியே 400 கிமீ தூரத்தில் உள்ள ஹைமா எனும் இடத்தை இரவு பத்து அல்லது பத்தரை மணிக்கு அடைந்து விடலாம். மணல் பறக்கும் ஹைமா பாலை நிலத்தில் இரவு உணவை முடிக்கும் போது, காரின் எஞ்சினில் இருந்து அடிக்கும் வெப்பம் பாலைவன சூட்டை மீறி நம்மைத் தாக்கும். காருக்கும் நமக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு 40% தூரத்தை அதற்குள் கடந்து விட்டோமே என நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அடுத்து தான் பாலையின் உண்மை முகமே.
ஆங்கில கவ் பாய் படங்களில் காட்டுவார்களே மணலில் பாதி புதையுண்ட மாட்டின் எலும்புக் கூடு, அதைப் போன்றதொரு பாலைவனம். கண்ணுக் கெட்டும் தூரம் வரை பொட்டல்வெளி. திடீரென சாலையின் ஓரங்களில் குவியும் மணல் காரின் சக்கரங்களை வாரிவிடும். இதனால் பயண வேகமும் குறைந்துவிடும். 200 கிலோமீட்டருக்கு ஒருமுறை தான் பெட்ரோல் ஸ்டேசன். அங்கு தான் தண்ணீர், தேநீர் கிடைக்கும். மற்ற இடங்களில் ஆள் அரவமே இருக்காது. கார் கண்ணாடியை இறக்கினால் புழுதியும் வெப்பமும் கன்னத்தை புண்ணாக்கும். உடும்பு, முயல், நரி போன்ற பல விலங்குகளின் மின்னும் கண்களை சாலை ஓரங்களில் பார்க்கலாம். அப்படியான இருட்டுச் சாலையில் கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் பயணித்து ஒரு பெட்ரோல் ஸ்டேசன் வெளிச்சத்தை பார்க்கும் போது மீண்டும் காரை நிறுத்தி ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்கத் தோன்றும்.
எந்த மாதிரியான திறமையான ஓட்டுநருக்கும் கடுமையான காலம் என்றால் அது அதிகாலை மூன்று மணி. அதுவும் 600 கிமீ ஏற்கனவே வாகனம் ஓட்டிய பிறகு சற்றே அசந்தாலும் காரையே கவிழ்த்து விடும் பாலை மணலில் அதிகாலை மூன்று மணிக்கு வாகனம் ஓட்டுவது பெரும் சவால். அதைக் கடந்து பயணம் செய்தால் சலாலாவின் அடிவாரமான தும்ரைட் நகரை நான்கு மணிக்கெல்லாம் அடைந்துவிடலாம்.
இப்போது தான் பொறுமை முக்கியம். இன்னும் அரை மணி நேரத்தில் சலாலா என அவரசமாக மலை ஏறி விடக் கூடாது. தும்ரைட் நகரின் நெடுஞ்சாலைகளில் தேநீர்க்கடைகளும், அவற்றின் எதிரே ஓய்வு எடுக்க நாற்காலிகளும் இருக்கும். குழந்தைகள் விளையாட ஊஞ்சல் கொண்ட பூங்காக்களும் இருக்கும். அங்கு விடியும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஐந்தரை மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினால் மலையேற்றம். அரை மணி நேரம் மெதுவாக மலை ஏறும் போது உதயசூரியன் கிழக்கில் இருந்து எழும்பி ஊரையே வெளிச்சக் காடாக மாற்றும். நீண்ட பொட்டல் வெளி கண்ணுக்குத் தெரியும்.
அப்போது தான் அந்த மேஜிக் நிகழும். கடும் பாலை நிலத்தில் எங்கிருந்தோ வந்த மேகங்கள் திடீரென சூழும். நாற்பது டிகிரிக்கு மேல் கொதித்த வெப்பநிலை 20 ஆகும். காரின் கண்ணாடியில் பனி படரும். கையை வெளியில் நீட்டினால் ஈரமாகும். இதுவரை இருந்த பாலை எங்கே சென்றது எனத்தோன்றும். இந்த மாற்றத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது, அனுபவித்தால் தான் இதன் மகத்துவம் புரியும்.
ஐந்து நிமிடங்களுக்கு முன் வரை ஊனை உருக்கும் பாலை. ஐந்து நிமிடங்களில் உள்ளம் குளிரும் குளுமை. உணவு எப்போதும் இன்பமானது. ஆனால் நீண்ட பசிக்குப் பிறகு கிடைக்கும் உணவின் சுவை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதைப் போன்றதொரு மேஜிக் தான் சலாலா. உலகின் எந்த இடத்திலும் இது போன்றதொரு பாலையில் இருந்து குறிஞ்சியில் நுழையும் மாற்றத்தை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது. சலாலாவிலும் இந்த கரீஃப் மாதங்கள் தவிர மற்ற நேரங்களிலும் இந்த வாய்ப்பு கிடைக்காது. தவறவே விடக்கூடாத மேஜிக் இந்த கரீஃப்
சலாலாவை அடைந்த பின் எங்கு சுற்றிப் பார்க்கலாம்? சில ஊரில் மலை மீது கோவில் இருக்கும், சில ஊரில் மலையே கோவில் என்பது போல, சலாலாவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம், அந்த இடம் ஒரு “ஸ்பாட்”. எனினும் வாதி தர்பாத், அரேபியாவில் சலாலாவில் மட்டும் காணக் கிடைக்கும் ஆப்ரிக்க நாட்டின் போபோ மரங்கள், மொக்சைல் கடற்கரை, கேரள சேரமான் மன்னரின் கல்லறை, சாம்பிராணி மரங்கள் என நிறைய முக்கிய இடங்கள் உள்ளன. ஒரு மாதம் தங்கினாலும் சுற்றிப் பார்க்க இடங்கள் உள்ளன. அங்கு கிடைக்கும் உணவு வகைகளும் நாக்கை அடிமையாக்கும்.
யூடியூபில் சலாலா பற்றி தேடினால் நிறைய காணொளிகள் கொட்டிக் கிடக்கும். நீங்கள் பயண விரும்பியாக இருந்து உங்களுக்கு இப்போது பயணம் செய்ய உகந்த சூழல் இல்லை எனில் அந்த காணொளிகளை தயவு செய்து பார்க்க வேண்டாம். பிறகு ஆனது ஆகட்டும் என அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு சலாலா கிளம்பிவிடுவீர்கள். இன்னொரு விசயம், அப்படி சலாலா கிளம்பினால் விமானத்தில் சென்று இறங்காமல் மஸ்கட்டில் இருந்து காரில் சென்று பாருங்கள். அப்பொழுது தான் அந்த மேஜிக்கை முழுமையாக உணர முடியும்.