தமிழ்நாடு
இந்நூலின் ஆசிரியர் ச.பாலமுருகன் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தோடு இணைந்து, பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கிய முக்கியமானவர்களுள் ஒருவர். பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
வீரப்பன் உலவிய காடுகளில் வாழும் பழங்குடித் தமிழர்களே சோளகர்கள். தொட்டி அவர்கள் வாழும் ஊராகும். நாகரிகத்தின் பயனாய் விளைந்திருக்கும் சீரழிவுக்கு உட்படாத உண்மையும் எளிமையும் இயற்கையோடு இயைந்த மக்கள் நாயக வாழ்க்கை முறையும் கொண்ட அப்பழங்குடித் தமிழர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கிச் சிதைந்து போன துன்பியல் நிகழ்வுகளை இலக்கியப் படைப்பாக்கியிருக்கிறார் பாலமுருகன் எனப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தியா டுடே எழுதியதைப் படித்த பிறகு புத்தகத்தின் இரண்டாம் பகுதியைப் படிக்கும் துணிவே எனக்கு அற்றுப் போனது. உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது என்பது உண்மை. ஆனால் அதை முதல் பாகம் படித்த பின்புதான் படித்தேன். எனவே இரண்டாவது பகுதியை படிக்கும் கட்டாயத்துக்கு உள்ளானேன்.
சோளகர்கள் பற்றிய இந்நாவல் அவர்களைப் பற்றி அறியாத பாவிகளான நமக்கே எழுதப்பட்டது என்றும், இந்நாவலைப் படித்ததும் மலைவாழ் மக்களுக்கு எதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு நமக்குப் பிறக்கும் என்றும், அதுவே ஓர் அருமையான படைப்பிலக்கியத்தின் வெற்றி என்றும் அருணன் கூறுகிறார்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் வி. பி. குணசேகரன் பதிப்புரை எழுதி இருக்கிறார். மக்கள் இந்த நாவலுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்நாவல், 2019-ல் 12 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதுவே மக்களின் ஆதரவுக்கு சாட்சி.
சோளகர்களை நன்கு அறிந்த ஆசிரியர், அவர்கள் வாழ்க்கை முறையைப் பதியாமல் விட்டுவிட்டால், அது பிற்காலத்தில் கற்பனையாக நினைக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சத்தினாலேயே இதை எழுத முன்வந்ததாய் என்னுரையில் கூறுகிறார்.
புத்தகம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாகம் இதமாகவே இருக்கிறது. பழங்குடியினரின் வாழ்க்கை முறை மிக எளிது. எந்த நேரத்திலும் அவர்கள் அதை சிக்கலாக்கிக் கொள்வதில்லை. கூட்டமாய் வாழ்வதும், கூடி வாழ்வதும் இவர்கள் சிறப்பு. பிடித்திருந்தால் திருமணம் செய்வதும், பிடிக்காவிட்டால் விலகுவதும் இவர்களின் பழக்கம்.
குழந்தை இருந்த போதும் மறுமணம் என்பது தடையில்லை. அதே மாதிரி கணவனின் தம்பியை மறுமணம் புரிவதும் அங்கீகரிக்கப்படுகிறது.
காடு அவர்களுக்குத் தாய் வீடு. பறவைகள், விலங்குகள் போல் காட்டில் பயமின்றிச் சுற்றித் திரிகிறார்கள். மிக அழகான உலகம் அவர்களுடையது.
புயலாக வீரப்பன் நுழைய, அவனைப் பிடிப்பதற்காக வரும் இரு மாநிலத்து காவல்துறையின் அட்டகாசங்கள் என விரியும் கதையை... ஐயோ... விவரிப்பதற்கும் கூட துணிவு வேண்டும். நகரத்தில் வாழ்வதாய் பெருமைப்படுகிறோம். இல்லை இது நரகம். வாழ்வில் மறக்க முடியாத நாவல். ஏன் படித்தோம் எனத் துவளச் செய்கிறது. கலைந்த குருவிக் கூடாய் அவர்கள் வாழ்க்கை. எல்லாவற்றையும் இழந்து உயிர் மட்டும் சுமந்து வாழ்வதோடு கதை முடிகிறது.
நான் இதை ரசித்துப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் மறுபடி படிக்கவே விரும்பாத புத்தகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, கஷ்டப்படுவதாக நினைத்து தனக்குத்தானே சுய இரக்கம் கொள்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமிது.
அமேசானில் அச்சுப் புத்தகமாகவும், கிண்டில் பதிப்பாகவும் கிடைக்கிறது. வேறு சில பதிப்பகங்களும் வெளியிட்டிருக்கின்றன.
சோளகர் தொட்டி - ஒரு வாழ்வியலின் துன்பத்தைச் சொல்லும் நிஜக்கதை.