துபாய்
ஆரச்சாலை, ஆபத்து மிகுந்த சாலையில் டாக்டர் சென்பாலன் அவர்களின் ஓர் அழகிய பயணம்.
பல்லாவரம் பலருக்கும் அறிந்த இடம், அது பல உயிர்களை பலி வாங்கும் இடமாக மாறுவதை டாக்டரின் எழுத்தில் படிக்கும் போது நம் கண் முன் நடப்பதை போன்ற உணர்வு ஏற்பட வைக்கின்றது.
கதைகளில் வரும் அனைத்தும் கற்பனையே என்று டாக்டர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பைக் ரேசர் தீரன் லைவில் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்று வார்த்தையை கூறி விட்டு அவன் பன்னும் அலப்பறையை விவரிக்கும் போது மஞ்சள் வீரனைக் கண் முன் கொண்டு வந்து விடுகின்றார்.
அப்பாவாக இருந்து கொண்டு ஈச்சங்காடு ஈஸ்வரி அம்மாவாக மாறி காவிக்குள் அதிகாரிகளைப் போட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி, ஆரச்சாலையை பேய்சாலையாக மாற்றி, கல்லா கட்டும் கதையை கலக்கலாக எழுதி இருக்கின்றார்.
பேயிடமிருந்து ஆரச்சாலையை மீட்டெடுப்பதற்கு திருவின் பைக் ஓட்டம், திரு பைக்கில் செல்வதைப் படிக்கப்படிக்க அவனைப் பைக்கிலிருந்து இறக்கிவிட்டு நான் பைக் ஒட்டுகின்றேன் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். குறிப்பிட்ட பைக் பறக்கும் இடம் வரும்போது நானும் பறந்துவிட்டேன், ஒரு நடுக்கத்தில் திடுக்கிட்டு ஒரு பெரு மூச்சு விட வைத்து விட்டார் எழுத்தாளர் சென்பாலன்.
பல காவல் அதிகாரியின் தலை தப்பிப்பதற்கு கார்த்திக் ஆல்டோவின் தலை அடமானம் வைக்கப்படுவதையும், அந்த பேயைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்க கூடிய முயற்சியையும் மிகவும் அழகாக எழுதியுள்ளார் எழுத்தாளர் என்று சொல்வதை விட துப்பறிவாளர் சென்பாலன் என்று தான் சொல்ல வேண்டும்.
விஞ்ஞானமும், அறிவியலும் பேயாக மாறுவதை எழுத்து வடிவில் அழகாக எழுதி எழுத்தாளர் விஞ்ஞானி சென்பாலானாக மாறிவிட்டார்.
பல்லாவரத்தின் பழைய வரலாறும், முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களில் சிலர் கொண்டாடப்படும் அஞ்சு கை கொண்ட பஞ்சாவின் வரலாறும் ஆரச்சாலையை மேலும் அழகுப் படுத்தியுள்ளது.
மரணத்தை நோக்கிப் பாயும், பைக் ரேசர்களின் மரணங்கள், மரணத்தை வைத்து வியாபாரம் செய்யும் ஆன்மீகம், அதை வழி நடத்தும் உயரதிகாரி, அனைத்தையும் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர்கள் என்ற எல்லா கதாபாத்திரங்களையும் எந்தவொரு தொய்வில்லாமல் அருமையான தொடர்புடன் படிப்பவரையும் புத்தகத்தை தொடர்பை துண்டிக்கவிடாமல் ஈர்க்க வைத்துள்ளார் எழுத்தாளார்.
மக்களின் மடமைத் தனத்ததிற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக எழுதுவதும் ஒரு புரட்சி தான், அதை திராவிட சித்தாந்தத்தின் வளர்ப்பு டாக்டர் சென்பாலனின் எழுதும்போது கேட்கவா வேண்டும் மிகவும் அருமை.