(பள்ளி மாணவி)
இராமநாதபுரம்
இவ்வுலகில் இருக்கும் அனைவருக்கும் ஆசைகள் ஆயிரம். குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஆசைகளில் ஒன்றாக, அதிகம் விரும்புவதாக இருப்பது ஒரு பறவையைப் போல உயரே பறக்க வேண்டும் என்பதுதான். இந்த ஆசை எனக்குள்ளும் இருந்தது. அச்சமயத்தில் எனக்குக் கிடைத்த இந்தப் புத்தகத்தில் ஒற்றைச் சிறகோடு இருக்கும் ஓவியாவுடன் நான் மற்றொரு சிறகாய் இருந்து இந்த நாவலைப் படித்தேன்.
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய இந்நூல் அவருக்கு பால புரஸ்கார் விருதைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விகடன் குழுமத்தில் பணி புரிந்தவர் ஆவார். இந்நூல் இவருடைய இரண்டாவது நாவல்.
இக்கதையில் ஐந்து நண்பர்கள், அவர்கள் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். ஒருநாள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஓவியாவைத் தவிர மற்ற நால்வரும் நாடகத்தில் இணைந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களில் ஒவ்வொன்றையும் ஓவியாவுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அப்படியாக அவர்கள் அணிவித்த ஒற்றைச் சிறகுகள் அவளைப் பறக்க வைத்தன. அதனைக் கொண்டு பள்ளியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினர். அது என்னவென்றால் 'இரகசியம்'.
அதற்குப் பயன்படக்கூடிய முக்கியப் பொருளாக இருந்தது பள்ளி மணியை அடிக்கப் பயன்படுத்தப்பட்ட பச்சை நாக்கு. இம்மாயாஜாலத்தை பள்ளி ஆண்டு விழாவில் நடத்த எண்ணினர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் அதனை - பச்சை நாக்கு - எடுத்து நான்கு துண்டுகளாகப் பிரித்து வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்தான். அவனுக்கு உண்மையிலேயே மந்திரம் செய்வதற்குத் தெரியும் என்பதால் மறைத்து வைத்த இடங்களின் குறிப்புகளைத் தன் நண்பர்களின் கனவுகளில் மறைத்து வைத்தான்.
ஓவியாவிற்கு ஒருவருடைய கண்ணைப் பார்த்து அவர் எண்ணுவதைச் சொல்ல முடியும் என்பதால் ஒவ்வொரு குறிப்புகளின் மூலமாக ஒவ்வொன்றையும் கண்டுபிடித்து, நான்கையும் ஒன்றிணைத்து அவர்கள் நினைத்தது போல ஆண்டுவிழாவில் மாயாஜாலத்தை நிகழ்த்தினர்.
இந்த நாவலில் ஓவியாவும் அவளது நண்பர்களும் எங்கெல்லாம் அந்த நான்கு துண்டுகளாக்கபட்ட பச்சை நாக்கைத் தேடினார்கள் என்பதையும் அப்படித் தேடும்போது அவர்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன என்பதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நாவலை வாசித்ததன் மூலம் எனக்குச் சிறந்த அனுபவமும் ஆச்சர்யங்களும் கிடைத்தன. அவை உங்களுக்கும் கிடைக்க நீங்களும் இந்நாவலை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.
யாமறிந்த, வாசித்த சிறந்த சிறார் நாவல்களில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கும் நாவல் எதுவென்றால், என்னளவில் நான் ஒற்றைச் சிறகு ஓவியாவைச் சொல்வேன்.