துபாய்
கங்கணம்: பெருமாள் முருகன், காலச்சுவடு, 343 பக்கங்கள்.
கங்கணம் என்ற சொல்லை நாம் நம் வாழ்வில் பலமுறை எதார்தமாக பயன்படுத்தினாலும் அதை தனி வார்த்தையாக தலைப்பில் கண்டவுடன் அர்த்தம் புரியவில்லை, ஆனால் முன்னுரையின் முதல் இரண்டு வரிகளில் அதன் அர்த்த்தை பெருமாள் முருகன் விளக்கியதும் எளிதாக புரித்தது..
திருவிழாக் காலங்களிலும், திருமணத்தின் போதும் கையில் கட்டும் மஞ்சள் கயிறுக்கு பெயர் தான் கங்கணம் என்பதும், நாம் ஒரு செயலை முடிப்பதற்காக அந்த நோக்கத்துடனே பயணிக்கும் போது நம்மை சுற்றியிருப்பவர்கள் கங்கணங்கட்டிக்கிட்டு திரியுறவன் மாதிரி திரியுறான் பாருன்னு சொல்வது இந்த வார்த்தையை மையப்படுத்தியே..
தன் பண்ணையில் பண்ணையம் பார்க்கும் குப்பனின் 17 வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஐயாயிரம் ரூபாய் பணத்தை நிலத்தின் முதலாளி மாரிமுத்துவிடம் கேட்பதற்காக குப்பன் நடந்தும் சாகசங்களுடன் ஆரம்பமாகும் நாவலில், முப்பத்தைந்து வயதை எட்டியும் திருமணமாகாத, திருமணத்திற்கு பெண் அமையாத சம்சாரி மாரிமுத்துவின் கங்கணத்தை நோக்கி செல்கிறது நாவல்.
மேற்கு மாவட்டங்களின் நிலவுடமை சமூகத்தை அவர்களின் வாழ்வியல், வறட்டு சாதிய பெருமிதத்தை, நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒரு படிநிலை போக்கை காலம் முழுவதும் ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும் கையாண்டு வருவதையும், நிலவுடமை சமூகத்திடம் அடிமையாய் இருக்கும் பண்ணையடிமை சமூகத்தின் அவலத்தையும் புனைவாக வெகு நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் பெருமாள் முருகன்.
நிலத்திற்கு சொந்தக்காரனாக, வயலையே கட்டிக்கொண்டு வாழ்ந்து வரும், பைக், டிராக்டர் என்று பொருளாதார அளவுகோல்களில் முண்ணனியில் இருக்கும்
மாரிமுத்துக்கு ஏன் முப்பத்தைந்து வயதாகியும் பெண் கிடைக்கவில்லை என்ற காரணங்களின் பிண்ணனியில் சாதியும், சாதியத்தை கட்டிக்கொண்டு அழுக்காக திரியும் மக்களின் எதிர்மறை சிந்தனைகளுமே காரணமாக இருக்கின்றன என்பதை தெளிவாக உணர முடிகிறது..
சாதிய படிநிலையில் கீழ்நிலையில் இருக்க வைக்கப்பட்ட நிலமற்ற விவசாய கூலிகள் திருமணத்திற்காக அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளாமல் அடிப்படையான ஆண்/பெண் இணையேற்பை மட்டுமே முன்னிலைப்படுத்துவதும், பணம், காசு வந்தவுடன் மனிதன் என்ற விலங்கினத்திற்கை உருவாகும் பைசா பெருமானமில்லாத பகட்டும், மதிப்புகளற்ற வார்த்தை விளையாட்டுகளும் எந்தளவிற்கு இயல்பான வாழ்வை விட்டு தள்ளி செல்ல வைக்கிறது என்பதை வாசகன் உணர முடிகிறது.
எல்லோரிடமும் ஆயுதங்கள் தயாரக இருக்கின்றன. வாய்க்கும் சந்தர்ப்பத்தில் அதை வன்மையாக பிரயோகிக்க யாரும் தவறுவதில்லை என்ற வரிகளின் மூலம் மனிதனின் நாவை மிகப்பெரிய ஆயுதமாக சித்தரிக்கும் அந்த இடம் வலிமையானது. ஆம் நாம் பயன்படுத்தும் ஒரு சிறு வார்த்தை கூட எதிரில் நிற்கும் மனிதனை நிலைகுலையச் செய்யும் என்பதை அறியாமலேயே பேசிக்கொண்டே இருக்கிறோம். நாவை கட்டுப்படுத்தும் வலிமையை பெற வேண்டுமென்றாலும் பேசிய நாவு நிற்க மறுத்து பேசிக்கொண்டே இருக்கிறது, பொழுதன்னிக்கும்
இங்கு ஒரு தனி மனிதனின் பெண் துணைக்கான தேடலில் சமூகம் தன் பங்காக விதிக்கும் போலி கட்டுப்பாடுகள் எல்லையற்று செல்வதுடன் அவன் வாழ்வையே கேள்விக்குறியாக்குவதும், அந்த சமூகத்தில் அம்மா, அப்பா, பாட்டி, அம்மாயி, நண்பன், சுற்றத்தார் என தனி மனிதனை தினந்தோறும் வார்த்தைகளால் மட்டுமே கட்டுப்படுத்தும் மோசமான மனிதர்களையே நாம் பெற்றிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. அவமானங்களுடன் மட்டுமே ஒரு மனிதன் வாழ்ந்து வருவதை போன்ற துயரம் எவனுக்கும் வாய்க்க கூடாது, அந்தளவிற்கு ஒருவனை அவமானப்படுத்துவதில் வெற்றிபெறுவதையே குறிக்கோளாக கொண்டு இந்த சமூகம் குரூர புன்னகையுடன் நகர்கிறது.
புனைவின் நாயகனாக மாரிமுத்து தன்னுடைய இயல்பான குணத்தை, வாழ்வியலை இழந்து விட்டு சமூகத்திற்காக மட்டுமே வாழ ஆரம்பிக்கும் நிலையை வாசகன் உணரும் போது சமூகம் என்பது ஒரு கொடூர வன்னுணர்வு மைதானமாகவும், நாம் அதில் பந்தாடப்பட்டும் ஒரு பந்தாகவும் சுற்றி வருகறோம் என நம்மையறியாமலேயே அறிந்து கொள்ளும் நிலையை படைப்பு உருவாக்குகிறது..
ஊரெங்கும் இருக்கும் தானாவதி தாத்தாக்களும், ராமன்களும், செல்வராசுகளும், வாத்தியார்களுமே மாரிமுத்துக்களுக்கான பொய்யான வழிகாட்டிகளாக இருப்பதையும் நாம் இலகுவாக கண்டடைகிறோம். நிலம், நிலத்திற்கான சமூக மதிப்பீடுகள் இன்றுவரை உயர்ந்து நிற்பதில் கிராமங்களும், கிராமத்தின் அழிக்க இயலாத சாதியுமே முக்கிய பங்கு வகிக்கின்றன.
கங்கணத்தை கங்கணம் கட்டிக்கொண்டு வாசிப்பதில் சில வட்டார சொற்கள் எனக்கு வாசிக்கும் வேகத் தடைகளை உருவாக்கினாலும் மாரிமுத்துக்கு பொண்ணு அமஞ்சுச்சான்னு இருக்குற ஆவலின் உந்துததால் இலகுவாக கடக்க முடிந்தது…
சிறந்த வாசிப்பனுவத்தை கொடுத்தது, கங்கணம் …