அபுதாபி
வணக்கம்!
இந்த நூலின் விமர்சனத்திற்குள் போகும் முன், பெரும்பாலும் நான் எந்த ஒரு நூலையும் வாசிக்கும் முன்பாக எழுத்தாளர் பரிவை சே குமார் அவர்களிடம் ஒரு மேலோட்டமான பார்வையைக் கேட்டுக் கொள்வேன், அவர் கூறும் கருத்துகளுக்குப் பின்பு வாசிக்க தொடங்கி விடுவேன். சில நூல்களை அவரே பரிந்துரைப்பார். அப்படி அவர் மூலமாக வாசிக்க கிடைத்த நூல்தான் 'காஃப்டா'.
அதைவிட நான் இந்நூலை வாசிக்க தொடங்கும் முன்பே, மூன்றாண்டுகளுக்கு முன்பு கேலக்ஸியின் தொடக்க விழாவானது, ஒரு முப்பெரும் விழாவாக நடந்தது. அந்த விழாவில் நான் 'வேற்றுத் திசை' நூல் விமர்சனம் செய்து பேசியபோது சொன்ன ஒரு வார்த்தையே நினைவுக்கு வந்தது, 'உலகிலேயே மிகப் பெரிய தலித் இனம் பெண்கள்"தான் என்று, அது போன்ற ஒரு வாசகத்தோடு (தலித் முத்திரை குத்தப்படாத ஓர் அடிமை இனம் உண்டெனில் அது பெண்ணினம் மட்டுமே) இந்நூல் என்னை வரவேற்றது மிக ஆச்சரியமாக இருந்தது.
காஃப்டா, என்பது ஒரு சடங்கின் பெயர், இது பெண் பிள்ளைகளுக்கு செய்யும், ஒரு கொடுரமான சடங்கும் கூட. அதை மையப்படுத்தி எழுதப்பட்ட அருமையான நாவல். இந்த சடங்கு சம்பிரதாயம் நடக்கும் இடம் ஆப்பிரிக்கா கண்டத்தில் நடக்கிறது. பழங்குடி மக்கள், காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் பெண் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட பருவத்தில் ஊரைக் கூட்டி பெரும் திருவிழாவாக கொண்டாடி, ஒயித்தா மாமிகள் என்ற பெண்களால் இந்த சடங்கினை செய்கிறார்கள். அப்படி ஒரு பெண் பிள்ளைக்கு செய்யும் சடங்கினை, எல்லா என்கிற பெண் பிள்ளை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து பார்க்கிறாள். அந்த கொடூரக் காட்சி அவளை உறங்க விடாமல் செய்கிறது. இந்த சடங்கு முடிந்த இரண்டொரு நாளில் ஒரு வயதான மூதாட்டி வந்து தட்டிக் கேட்கிறாள். அந்த கதாபாத்திரத்தை எழுத்தாளர் மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார். இந்த சடங்கினை அரசாங்கமே, சட்டம் போட்டு தடுக்கின்றனர். அதையும் அந்த மக்கள் திட்டம் போட்டு மறைத்து செய்கின்றனர். அதை தடுக்கும் அதிகாரிகளிலும் ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு அந்த மக்களுக்கு துணை போகின்றனர்.
இந்த தகவல்களில் மூலமாக பல சுவாரசியமான செய்திகளை உள்ளடக்கி நாவல் பயணிக்கிறது.
நாவலின் தொடக்கத்தில் எல்லா எதைக் கண்டு பயந்தாளோ அதே கட்டம் தனக்கும் நிகழும் தருணத்தில் எவ்வாறு எதிர் கொள்கிறாள் என்பதை மிக விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.
அதே போல இந்த சடங்கும், கலாச்சாரமும் பெண்களுக்குள் எவ்வாறு புகுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்களும் எந்த விதத்தில் பங்கு வகிக்கிறார்கள், ஒரு எல்லைக் கோட்டில் பெண்களின் கையறுநிலையையும் சிறப்பாக சொல்லிச் செல்கிறது இந்நாவல்.
எழுத்தாளர் செ. சிலம்பரசன் அவர்களுக்கு இது முதல் நாவல், இந்நாவலுக்காக பல தகவல்களைத் தேடி திரட்டியுள்ளார். முதல் நாவலே, பெண்ணியமும், விழிப்புணர்வும் மிகுந்த நாவலாக ஆரம்பித்துள்ளார். மிகச்சிறப்பு.
அவரின் அடுத்தடுத்த படைப்புகளுக்கு ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இந்த நூல் சகோதரர் தசரதன் அவர்களின் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது, கூடுதல் மகிழ்ச்சி.
இது அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.
நன்றி!