இத்ரீஸ் யாக்கூப்
அபுதாபி
இத்ரீஸ் யாக்கூப்
அபுதாபி
மூன்றாம் பாலினம்
சமீபத்தில் பெங்களூரு செல்ல, சேலத்திலிருந்து புறப்படும் பேருந்தில் அமர்ந்திருந்த போது, அனுஷ்காவை ஒத்த வாளிப்பான உடலழகோடு பேருந்தினுள் கைகளைத் தட்டியவாறு நுழைந்தாள் அந்த திருநங்கை தேவதை!
கூந்தல் மணக்கும் மல்லிகை, லாவகமாய், லோ ஹிப்பில் சொறுகப்பட்ட சிப்பான் சேலை மற்றும் பரோட்டோவிற்கு எண்ணெய் விட்டு நன்றாகப் பிசைந்து இன்னும் உருண்டையாக கிள்ளி, விசிறாமல் மூடியும் மூடாமலும் வைக்கப்பட்ட வளவளப்பான மைதா போன்றிருந்த வயிறு, இடுப்பின் பின்புறம் அச்சிடப்பட்ட அழகான டிராகன் டாட்டூவென, ஒவ்வொன்றும் காண்பவரை கிறங்கடித்தது அவளது சிங்காரம்.
வழக்கம்போல, அங்கேயும் சில பதின்ம மாணவர்கள், ‘டேய் அது அவ இல்லடா, அவன்டா…’ வயதுக்குரிய குறும்போடு சற்று சத்தமாகவே தமக்குள் பேசிக்கொண்டு, அவளைப் பார்த்து பார்த்து சிரிப்பதும், தலையை குனிந்துக் கொள்வதுமாய் சட்டென வந்த மின்னலால் குதூகலமடைந்தவர்கள், அந்த நங்கை அவர்களை நோக்கி வருவதைக் கண்டு, செயற்கையாய் தங்கள் முகங்களை ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல் பாவனை செய்தனர்.
அருகில் வந்து கைத்தட்டி “காசு கொடு!” என்று கேட்டாள் அந்த சிவப்பழகி. அவர்கள் முன்வராதவர்களாய் அவளைப் பார்த்து சன்னமாய் புன்னகைக்க, “கிண்டல் மட்டும் பண்ற, காசு தர மாட்டியா…?” என்று சிணுங்கியபடி தோளைச் சிலுப்பி கொண்டு கடந்து சென்றுவிட்டாள். குற்ற உணர்வில் கொஞ்சம் இரக்கப்பட்டவர்களாய், பேருந்தைவிட்டு கீழிறங்கி பக்கவாட்டில் சென்று கொண்டிருந்தவளிடம் ஜன்னல் வழி காசை நீட்டினார்கள். “கேட்டபோது குடுக்கல… இப்ப குடுக்குற? வேணாம் போ!” வெண்கல குரலில் மறுத்துவிட்டு வேறு பஸ்ஸில் ஏறத் துவங்கினாள்.
‘ஏன் இப்படி பிச்சையெடுத்து வாழ்கிறார்கள், நல்லாத்தானே இருக்கிறார்கள், எங்கேயாவது வேலைக்கு செல்லலாமே…’ என்ற மனதிடம், ‘வந்தவளைக் கண்டதும் நீயும்தான் ஒதுங்கி கொண்டாய், தோளை தட்டியும் நீ திரும்பவே இல்லை! உன்னை போல்தானே மற்றவர்களும் இவள் போன்றவர்களை எதிர்கொள்வார்கள்…’என்ற கேள்விக்கு மௌனமே முடிவாய் இருந்தது.
சாக்ஷி, சமீபத்தில் ஆணிலிருந்து பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்ட பாடகர் அல்லது பாடகி. இயற்பெயர் ஹரி. இவரும் ஸ்டான்லி என்பவரும் ‘Stari Duo’ எனும் பெயரில் இணைந்து பாடி, வெளியிட்ட வீடியோக்கள் யூ-ட்யூபில் பிரபலம். இவர்களது சிறப்பம்சம் ஆண், பெண் என இரு குரல்களிலும் இருவரும் பிரமாதமாக பாடி அசத்துவார்கள். இந்த ஜோடி இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக, இன்னும் பிரபலமான நிலையில், வெவ்வேறு யூ-ட்யூப் சேனல்கள் இவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளன. அதில் ஒன்றில், தனது சில ஆண்டு போராட்டத்தை விட ஒரு நாள், தான் ஒரு திருநங்கை கூட்டத்தினரிடம் சிக்கிக்கொண்டது மிகவும் வருத்தமளிக்கச் செய்ததென்றும், அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், முக்கியமாக அவர் எழுப்பும் அந்த கைத்தட்டலை, தான் வினோதமாக பார்த்ததாகவும் கூறியிருந்தார். மேலும், ஏன் இவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்? இதற்கு ஒரு பூக்கடை வைத்தாவது கௌரவமாக பிழைக்கலாமே என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து பத்திரிக்கைகளில் பிரபலமாக உலா வந்தவர்களில் பிரியா பாபு முக்கியமானவர். இவரும் ஆணாக பிறந்து பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டவர்தான். கிட்டத்தட்ட இப்போதிருக்கும் பல திருநங்கைகளுக்கு ஒரு முன்னோடி எனலாம்! போராட்டம், காதல், திருமணம், சமூகப்பணி என்று பலவகையில் மற்ற திருநங்கைக்கு நம்பிக்கையாக இருந்தவர், இப்போதும் களத்தில் நல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு, ஒரு செயற்பாட்டாளராக, எழுத்தாளராக, ஆவணப்பட இயக்குனராக, பேச்சாளாராக முடிந்தவரை மாற்றுப் பாலினத்தவருக்கு தன்னை ஒரு வழிக்காட்டியாகவே அர்பணித்து வருகிறார்! மாற்றுப் பாலினத்தவரின் படைப்புகளை வெளியிட, பேச டிரான்ஸ் பதிப்பகம் மற்றும் டிரான்ஸ் மீடியா போன்றவற்றையும் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, இந்த திருநங்கைகள் எவ்வாறு உருவாகிறார் என்று பார்க்குபோது இரண்டு வகையில் அடங்குகிறார்கள். ஒன்று மரபியல் ரீதியாக, இவர்களை சரி செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. இவர்கள் இயற்கையிலேயே மூன்றாம் பாலினமாக கருதப்படுகிறார்கள். இன்னொன்று மன ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்பட்டவரை, பாதிக்கப்படுபவரை நிச்சயம் கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த முடியுமென்றே தோன்றுகிறது. இவர்கள் அங்க அமைப்பின்படி வாழ மனரீதியான மாற்றங்களே தீர்வாக அமையும். சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஹார்மோன் பிரச்சனைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். அதில் தோற்பவர்தான், பிறரால் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகிறார்கள். தனிமைப்படுத்தலின் விளைவு அடுத்த நிலையான பால்மாற்ற அறுவை சிகிச்சைக்கு உந்தச் செய்கிறது. பிரியா பாபு அதைதான் செய்தார் என நினைக்கிறேன். சாக்ஷியின் நிலை தெரியவில்லை.
மனரீதியான போராட்டங்களோடு, தனது நிலையை மறைத்துக் கொண்டு அல்லது மாற்ற முயற்சி செய்துகொண்டும் வாழ முடியும் என்பதற்கு நான் கண்ட இருவரை உதாரணங்களாய் முன் வைக்கிறேன்.
ஒருவர், திருச்சேறையில் நான் படித்துக்கொண்டிருந்த போது, பக்கத்து ஊரான நாச்சியார் கோயிலிருந்து வந்து முருகன் டீ ஸ்டாலில் (உணவகத்தில்) சமையல்காரராக பணி புரிந்துக்கொண்டிருந்தார். பார்க்க மிகவும் நளினமாக பெண்ணை ஒத்து இருப்பார். நடுவாகும் எடுத்திருப்பார். பாவனைகள் எல்லாம் பெண்களையே நினைவூட்டும். ஆனால் அவர் ஆணாகத்தான் வாழ்க்கை நடத்தினார். குடும்பம், குழந்தைகள் என எல்லாமும் உண்டு.
இன்னொருவர், அது 21ஆம் நூற்றாண்டு பிறந்த சமயம், எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் திருவிழா நடந்துக்கொண்டிருக்கிறது. கரகாட்டத்தை நண்பர்களோடு வெகுவாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே சிலர், கரகாட்டம் ஆடுபவர்களில் ஒருவரை மட்டும் கேலியாய் சீண்டிக் கொண்டே இருந்தனர்.
அந்த பெண்ணும் சிரித்தபடியே ஆடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவர் பெண்ணல்ல, ஆண் என்பது கரகாட்டம் முடிந்த பின்னரே தெரிந்தது. பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அந்த அப்பா கதாப்பாத்திரம் போலதான் அவரது வாழ்க்கை! பாலியல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கரகாட்டம் போக மற்ற நாட்களில் சித்தாள் வேலைப் பார்த்து வந்தார். கடின உழைப்பாளியாக இருந்தாலும், அந்த இறுகிய உடலையும் கீறி சுவைக்கும் மிருகங்களும் இருந்தே வந்தன.
அவருக்கு மனைவி பிள்ளைகள் இருந்ததை மற்றவர்கள் கேலி செய்தும், கேள்வி கேட்டும் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் இன்று வரை ஆணாகவே தன் வாழ்க்கையை நடத்துகிறார்.
ஒரு இஸ்லாமியன் என்ற பார்வையில் இந்த மூன்றாம் பாலினம் உண்மையிலேயே இருக்கிறதா என்று மார்க்க ரீதியாக ஆராய்ந்த போது, இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான பி.ஜெயினுலாபிதீனின் கேள்வி பதில் ஒன்றில் கிடைக்கப்பெற்ற பதில் யாதெனில், இறைவனின் படைப்பின் படி ஆண், பெண் என்ற இரு பாலினமே உண்டென்றும். ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் அலங்கரித்து கொள்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதென கருத்துக்களை முன் வைக்கிறார். மேலும் உருவத்தால் எந்த பாலினத்தை ஒத்து இருக்கிறாரோ, மனரீதியில் வேறுபட்டிருந்தாலும், அதையே சார்ந்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். இது சாத்தியமா?
மனரீதியான தாக்கங்களுக்கு வசிக்கும் சூழல்களே காரணிகளாய் அமைகின்றன. பெண்களுக்கே உரிய சம்பிரதாய வேலைகளை ஆண்கள் செய்ய பழகும்போதும், அவர்களோடு அவர்களாக கலக்கும்போது, இது நிகழ வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக தாய், சகோதரிகளின் பாதிப்பில் தன்னை மறந்து, தன்னையும் ஒரு பெண்ணைப் போலவே பாவித்து கொண்டு செய்யும் செயல்களால் இது போன்ற (விபரீதங்கள்?) மாற்றங்கள் நடக்கலாம். இது மற்ற ஆண்களை கவரும் வேலைகளிலும் போய் முடியலாம். அவர்களும் இந்த சீரழிவிற்கு ஒரு கருவியாய் மாறிப்போகலாம், அல்லது சீரழிக்க முற்படலாம்.
பொழுதுபோக்கு அல்லது விருப்பங்களின் தேர்வுகள் மூலமாகவும் அப்படியொரு சூழல் நிகழ சாத்தியம்தான். உதாரணமாக கமல் ஹாசனின் இளமைக்காலத்தை சொல்லலாம். அவருடைய அதீத பரதநாட்டிய ஈடுபாட்டால், உடல்மொழியில் நிறைய நளினம் குடி கொண்டுவிட்டது. அதை அப்படியே விட்டுவிடாமல், கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் சரி செய்து கொண்டதாய் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். பின்நாளில் காதல் இளவரசனாய் தன்னை முன்னிறுத்தி கொள்ள முயன்றது, அந்த நிர்பந்தத்தின் விளைவாக கூட இருக்கலாம்.
கமலுக்கு மாற்றத்திற்கான வழி தெரிந்தது செய்தார், தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? இந்த மாதிரி மனரீதியான போராட்டங்கள் பதின்ம வயதுகளில்தான் பெரும்பாலும் துவங்குகின்றன. பாலின மாற்றத்திற்கு உட்படுத்திக்கொண்டவரின் கூற்றுகளின் பிரகாரம், பெண் போல் அலங்காரம் செய்வதிலிருந்து தொடங்குகிறதாம் எல்லாம். இது தவறான உறவுகளில் முடிவது இன்னும் சோகம்!
இதை கண்டுபிடித்து, அவர்களது எதிர்காலத்திற்கு ஆதரவாக பக்குவமாக எடுத்து பேசி, பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோர்கள் சரி செய்ய முயற்சிப்பதின் மூலம், ஆரம்ப நிலைகளிலேயே அவர்களை சீர்திருத்தி, கட்டுக்குள் கொண்டு வரலாம்.
கண்டுகொள்ளாமல் விட்டாலோ, கடின போக்கை கையாண்டாலோ, அவர்கள் இன்னும் அதில் தீவிரமாக வாய்ப்புகள் அதிகம். கைமீறி போய்விடுவார்கள். அப்புறம் வீட்டை விட்டு வெளியேறிய ராஜா, ராணியாகத்தான் திரும்பி வருவார் அல்லது திரும்பவே மாட்டார். அப்படி புறகணிக்கப்பட்டு, மாறியவர்களும் இது போன்ற பதுமைகளில் அடங்குவார்கள்! இருப்பினும் எல்லாமே அவரர் தெரிவு; தனி மனித விருப்பங்களில் தனது அடக்குமுறைகளை நுழைக்க இங்கே யாருக்கும் உரிமை இல்லைதான்.
போராட்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் நிறைந்தது இவர்களின் இந்த மூன்றாம் பாலினத் தேர்வு. வரும் நாட்களில் இவர்களது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஒருவேளை இவர்களின் நிலையை உயர்த்தலாம். இதுவரை முடியாதிருந்த, ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் குழந்தை பெற்று கொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இப்போது வெற்றியடைய வாய்ப்புள்ளதாம் (பாதி நிரம்பிய கோப்பை எனும் நூலில், ஆசிரியர் ஸ்ரீதர் சுப்ரமணியம் விவரித்திருக்கிறார்!) இது எங்கு போய் முடியுமோ! நடிகை மனோரமா ஒரு படத்திலாவது தான் திருநங்கையாக நடித்துவிட வேண்டுமென கடைசி வரை விரும்பினார், நிறைவேறவில்லை!
அரசு மாற்றுப்பாலினத்தவருக்காக வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அறிவித்திருந்தாலும், தனியார் நிறுவனங்களில் அது எந்த அளவில் கடைபிடிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.